May 14, 2021

தேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…

1 min read

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி, கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட முதுவார்குடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய மலை கிராமங்களுக்கு இன்று, நேரடியாக சென்று மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் அவர்கள் முன்னிலையில், மலை வாழ் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில்,
மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வில் வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி திறம்பட செயல்படுத்தி வந்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் மட்டுமல்லாமல் தொடர்ந்து புதியதாகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக அரசு பழங்குடியின மக்கள் அனைத்து வகையிலும் சமுதாய பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வை வளம் பெறச் செய்து வருகிறது.
தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் ஆகிய வட்டங்களில் சுமார் 19 கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக அனைத்து பழங்குடியின மக்களின் தாய் வீடாக முதுவார்குடி மலை கிராமம் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து தான் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி வசதி உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உங்களுடைய சிரமங்களை என்னுடைய சிரமங்களாக ஏற்று அனைத்து வசதிகளை செய்து தருவதற்கு தாயராக உள்ளேன். எனவே, தங்களின் கோரிக்கையினை மனுக்களாக அளித்திடும் வகையில் உடனுக்குடன் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும்.

இன்றைய தினம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி, கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட முதுவார்குடி கிராமத்தைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.61.49 இலட்சம் மதிப்பீட்டிலும், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முந்தல் கிராமத்தைச் சேர்ந்த 154 பயனாளிகளுக்கு ரூ.11.90 இலட்சம் மதிப்பீட்டிலும், சிறக்காடு கிராமத்தைச் சேர்ந்த 143 பயனாளிகளுக்கு ரூ.90.54 இலட்சம் மதிப்பீட்டிலும், சோலையூர் கிராமத்தில் சேர்ந்த 257 பயனாளிகளுக்கு ரூ.50.01 இலட்சம் மதிப்பீட்டிலும், மேலபரவு கிராமத்தைச் சோந்த 154 பயனாளிகளுக்கு ரூ.21.82 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 738 மலை வாழ் கிராம பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, மலை கிராமங்களுக்கு சாலை வசதியினை மேம்படுத்திடும் பொருட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.49.20 இலட்சம் மதிப்பீட்டில் குரங்கனி முதல் முதுவார்குடி வரை சாலை கல்பாவுதல் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு கடைக்கோடியில் வசிக்கின்ற மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வை வளம் பெறச் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு மக்களுக்காகவே செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனுக்காவே செயல்படுகின்ற அரசாக திகழ்ந்து வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசிற்கு, தொடர்ந்து பொதுமக்கள் தங்களது பேராதரவினை அளித்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின் போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா, போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுதா மூர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் டி.ராஜேந்திரன், என்.லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *