May 13, 2021

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சீரழிந்துவரும் சிற்பங்கள் பாதுகாக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…

1 min read

திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் காய்ந்து பட்டுப்போன மரங்களை திருத்தி, அழகிய சிற்பங்களை கடந்த 2018 ஆம் ஆண்டு சிற்பிகள் உருவாக்கினர்.
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ தூரம் புளியன், புங்கன், காட்டுவாகை, பாதாம், வில்வம் என ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன.

அதில், சில மரங்கள் திடீரென காய்ந்து, பட்டுப்போக ஆரம்பித்தது. சில சமூக விரோதிகள் மரங்களில் ஆசிட் ஊற்றி அழித்து வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து நடந்த ஆய்வில் மரங்களில் தண்டு துளைப்பான் இனத்தை சேர்ந்த வண்டுகளின் தாக்கத்தினால், மரங்கள் பட்டுப்போனது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மரங்களில் தார், மண்ணெண்ணெய் பூசுதல், துளையிட்டு பூச்சுக் கொல்லி மருந்துகளை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், மலை சுற்றும் பாதையில் ஏற்கனவே பட்டுப்போன மரங்கள் அகற்றப்படாமல் இருந்தது. கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, பட்டுப்போன மரங்களை அகற்றாமல், அவற்றில் அழகிய சிற்பங்களை செதுக்க முடிவு செய்தார். அதன்படி, மகாபலிபுரத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் மதுரை மணிகண்டராஜ், என்பவரை தொடர்பு கொண்டு, காய்ந்து போன மரங்களில் அழகிய சிற்பங்களை உருவாக்க கேட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், மணிகண்டராஜ் தலைமையில் 4 சிற்ப கலைஞர்கள் மரச்சிற்பங்களை உருவாக்கினர்.
தற்போது அந்த மரச்சிற்பங்கள் சேதமடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே, அந்த சிற்பங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *