June 17, 2021

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்ததை துவங்கினர்…

1 min read

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூரில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அதே கோரிக்கையை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் அரியலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசாவிட்டால் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் தொ.மு.ச. செயலாளர் சட்டநாதன், கிளை தலைவர் கனகராஜ் மற்றும் சி.ஐ.டி.யு., அம்பேத்கர் தொழிற்சங்கம், எஸ்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். 

அதேபோல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கொளஞ்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், பேச்சுவார்த்தையை நடத்தி ஊதியம் வழங்க தவறினால் அடுத்த கட்டமாக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டத்தில் எல்.பி.எப், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல மாவட்டங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அடையாள போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வலியுறுத்தி, “தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில், நேற்று வரை தமிழக அரசினுடைய முடிவை எதிர்பார்த்த போக்குவரத்து தொழிலாளர்கள், தமிழக அரசின் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிவிப்பும் கிடைக்காததால், 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ஆகையால் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

அதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் தமிழகம் முழுவதும் தவித்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், திருவண்ணாமலை பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பல மணி நேரமாக பல்வேறு ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்தியாளர்கள் – மூர்த்தி, குமார், சந்திரசேகர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *