September 23, 2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி விடுகிறார்-ஆ.ராஜா பேச்சு…

1 min read
Spread the love

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதாவது அறிக்கை தந்தால் அதை தமிழக முதல்வர் நிறைவேற்றி விடுகிறார்” என கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற விடியலை நோக்கி மு.க.ஸ்டாலின் குரல் என்கிற பிரச்சார சுற்றுபயண கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராஜா தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா விடியலை நோக்கி மு.க.ஸ்டாலினின் குரல் என்கிற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் இந்த பிரச்சார சுற்று பயணம் நடைபெற்றது.

நிகழ்விற்கு திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கி.வேணு, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், திமுக பொறுப்புகுழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, அன்புவாணன், எம்.எல்.ரவி, கோதண்டம், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி முன்னிலை வகித்தனர்.

நிகழ்வையொட்டி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுக துணை பொது செயலாளர் ஆ.ராஜா திமுக கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர்கள் பாஸ்கரன், திருமலை, ரமேஷ், பரத் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது கூட்டத்தில் சுமார் ஆயிரம் பெண்கள் முன்னிலையில் பேசிய ஆ.ராஜா தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தேர்தல் பிரச்சாரங்ளை தொடங்கி உள்ள நிலையில், அதிமுகவின் பிரச்சாரம் 10ஆண்டு கால ஊழல் ஆட்சி தொடர வேண்டி பிரச்சாரம் செய்கிறது. ஆனால் திமுகவின் பிரச்சாரம் தமிழகத்தின் விடியலுக்கான பிரச்சாரமாக உள்ளது,

தமிழகத்தில் வெளிப்படையான நேர்மையான ஆட்சியை தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளார் என்றார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சி அம்மா ஆட்சி, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் இரு அடையாளம் மிக தைரியமாக பிரதமர் மோடியை எதிர்த்து அரசியல் செய்தது, மாநில உரிமைகளை விட்டு தராதது, நீட் தேர்வை தமிழகத்தில் வரவிடாதது, மற்றும் ஊழலுக்காக சிறை சென்றது, முதல்வர் பழனிச்சாமி முதலாவதை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறார். தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் செய்ததை மட்டும் இந்த ஆட்சி பின்பற்றி ஊழல் செய்து வருகிறது. அதற்கு உதாரணம் உலக வங்கியின் விதிமுறைக்கு புறம்பாக உலக வங்கியிடம் பெற்ற 6000கோடி ரூபாயில் சாலை பணிக்கான ஒப்பந்தத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சம்பந்திக்கு தந்து ஊழல் செய்துள்ளார் என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் 17 வயதில் இருந்து உள்ளார். போராட்டங்கள் நடத்தி சிறை சென்று படிப்படியாக பல பொறுப்புகளை கடந்து தற்போது திமுக தலைவர் என்கிற பதவிக்கு வந்துள்ளார். அதே போல 1989ஆம் ஆண்டு எம்எல்ஏ ஆகி மேயர், உள்ளாட்சி அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக பதவிகளை வகித்துள்ளார்.

ஆனால் அரசியலிலும், தேர்தலில் போட்டியிட்டு பதவியிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுபவம் இல்லை என்றவர், தன்னை முதல்வராக்கிய சசிகலாவிற்கே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்மையாக இல்லாதபோது தமிழக மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார். தமிழகத்தின் தற்போதைய கடன் 5லட்சத்து 70ஆயிரம் கோடியாகவும், பிறந்த குழந்தையின் தலையில் 62ஆயிரம் ரூபாய் கடனை தமிழக அரசை வைத்துள்ளது

தமிழக அரசு மக்களுக்கு செய்த சில நல்லவை கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி தான் நடக்கிறது. கரோனா தொற்று ஊரடங்கால் மக்கள் சிரமப்படுவதால் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைக்கு 5ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு 2500ரூபாய் தந்தது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு தர மு.க.ஸ்டாலின் கோரினார். தமிழக அரசு 7.5% அறிவித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி என அறிவிக்கிறார். ஆக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதையும் சொந்த புத்தியில் செய்வதில்லை. மு.க.ஸ்டாலினின அறிக்கைகளை பின்பற்றுகிறார் என்றார். தொடர்ந்து காயலார்மேட்டில் திமுக நிர்வாகிகள் மைக்கேல், ராஜா ஏற்பாட்டிலும், கண்ணன் கோட்டையில் திமுக நிர்வாகி கோபால், உமாமதி ஏற்பாட்டிலும், கரடிப்புத்தூரில் அவை தலைவர் இஸ்ரவேல் ஏற்பாட்டிலும், மாநெல்லூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் ஏற்பாட்டிலும், பாதிரிவேடு, ராமசந்திராபுரத்தில் திமுக கொடியேற்றி ஆ.ராசா பொதுமக்களிடம் பேசினார்.

அவ்வாறே மாதர்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன், சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசும் போது திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் மட்டுமல்லாது, ஏழை எளியோருக்கான திட்டங்களும் இருந்தது என்றும், தற்போதைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்தில் முதலிடத்தில் இருந்த தமிழகம் நாட்டில் 9வது இடத்திலும், கல்வியில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 13வது இடத்தில் உள்ளதாகவும்,தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நெசவாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நூல் விலை உயர்வு, பருத்தி, சரிகை விலை உயர்வால் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெசவாளர்களுக்கான நலவாரியம் செயல்படவில்லை என்றும் குறை கூறினார்கள். இந்த கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், கண்ணிகைபேர் ஸ்டாலின், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் – சுடர் மதி
நிலழல் .இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed