September 23, 2021

போடிநாயக்கனூரில், வ.உ.சிதம்பரனார் சிலையை திறந்து வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்…

1 min read
Spread the love

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். கழக மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை, கழக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதாநடேஷ் மற்றும் ஐக்கிய பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வ.உ.சியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ஏழை எளியோர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு இலவசமாக வாதாடியவரும், தமிழ் மொழி மீது அளவில்லா பற்று கொண்டவரும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பாரதத்தின் மீதிருந்த அடிமை விலங்குகளை அகற்ற பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகியுமான கப்பலோட்டிய தமிழன் தீயாகசீலர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவை போற்றி போடிநாயக்கனூரில் அவருடைய திருவுருவச்சிலையை திறந்து வைக்கின்ற நல்ல வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.

ஏனென்று சொன்னால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை 2001ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பிலே அமர்த்தினார்கள். பொறுப்பேற்றுக் கொண்டவுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இல்லத்தில் சந்தித்தேன். அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வரான நீங்கள் ஒரு தீயாகசீலர் மணிமண்டபம் கட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடுங்கள் என்றார். அந்த கோப்பு தான் நெல்லையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களுக்கு கட்டபட்ட மணிமண்டபத்திற்கான கோப்பாகும். நான் கையெழுத்திட்ட முதல் கோப்பும் அதுதான்.

அதுதான் இன்றளவும் எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. வ.உ.சிதம்பரம்பிள்ளை இந்திய தேசிய போராட்ட வரலாற்றிலும், தமிழக வளர்ச்சிப்பாதை சரித்திரத்திலும் நீங்கா இடம் பெற்றும் மக்கள் மனதில் நிலையான இடத்தை பெற்ற சுதந்திர வீரராவார். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், தான் பேசிய வார்த்தையிலும், வாழ்ந்த வாழ்க்கையிலும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதர்.

பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய் போன்றவர்களின் தூய நட்போடு, பாரதியார், சுப்பிரமணிய சிவா இவர்களோடு கரம் கோர்த்து, இந்திய விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாக தீபம் வ.உ.சிதம்பரம்பிள்ளைஇந்திய சுதந்திர போரில் சிறை தண்டனை பெற்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் சொல்லனா சித்ரவதையை அனுபவித்த வ.உ.சி தன்னை, தன் குடும்பத்தை, தனது சொத்தை முழுமையாக இழந்தார். தாய்மண்ணின் விடுதலைக்கு சொந்தங்களையும், சோதனைகளையும். நெஞ்சுரம் கொண்டு தாங்கிக்கொண்டார்.

பாளையம்கோட்டை சிறையில் விலங்கினிலும் கொடுமையாக செக்கினை இழுக்கச் செய்து ஆங்கிலேயர் செய்த கொடுமையை இன்றளவும் நினைக்கின்ற போது நமது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. தேசத்திற்காக அன்னியர்கள் கொடுத்த அத்தனை துன்பங்களையும் நமக்காக சகித்துக் கொண்டார். தான் என்ற அகந்தை இல்லாமல், எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி கனிவுடன் பழகியவர் என்ற பெருமைக்குரியவர் வ.உ.சியாகும். தனது இறுதி மூச்சுவரை தேசப்பற்றோடு வாழ்ந்து பொதுவாழ்வில் எங்களை போன்றவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்பவர் வ.உ.சி. வெள்யைர்களுக்கு நிகராக கப்பலோட்டியதால் கப்பலோட்டிய தமிழன் என்று இன்றைக்கும் உலகமெல்லாம் போற்றப்படுகிறார். சிறந்த தேசபக்தர்.

ஒரு தேர்ச்சியான அரசியல் தலைவர் என்கின்ற நிலையை தாண்டி திருக்குறள், தொல்காப்பியம் தொகுப்புகளை வெளியிட்ட சிறந்த இலக்கியவாதி. உலகில் கடலும், கப்பலும் உள்ளவரை ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் என்றால் அது வ.உ.சியின் பெயராகும். இவ்விழாவிற்கு தலைமையேற்றுள்ள புதிய நீதி கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம் பற்றும் பாசமும் கொண்டவர். இவரோடு நான் 1982ல் தேர்தல் பணியாற்றியிருக்கின்றேன். அப்பொழுது நடைபெற்ற பெரியகுளம் நாடாளுமன்ற இடைதேர்தலில் பெரியகுளம் சட்டமன்ற அதிமுக கழகத்தின் பொறுப்பாளராக பெரியகுளத்தில் ஒருமாதம் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றினார். மறைந்த முன்னாள் நிர்வாகி கே.ஏ.கிருஷ்ணசாமியோடு இணைந்து காலை 6 மணிக்கே எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தபோது பெரியகுளம் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக இருந்த நானும் அவர்களோடு இணைந்து வாக்கு சேகரித்துள்ளேன். அவர்களோடு நெருங்கி பழகியுள்ளேன். நமது இயக்கத்தை புரட்சித்தலைவர் உருவாக்கி கழகத்திற்கு வந்த சோதனைகள், வேதனைகளை எல்லாம் சந்தித்தபோது தூணாக உடனிருந்து இயக்கத்திற்கு வலு சேர்த்தவர் ஏ.சி.சண்முகம் ஆகும். அவரை போன்றவர்களின் அஸ்திவாரம் தான் கழகம் என்னும் எஃகு கோட்டையில் என்னை போன்ற சாதாரண தொண்டர்கள் கூட முதலமைச்சராக, கழக ஒருங்கிணைப்பாளராக வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டதற்கு ஏ.சி.சண்முகம் போன்ற மூத்த முன்னோடிகள் தான் காரணமாகும்.

அவர் புரட்சித்தலைவர் பெயரிலேயே ஒரு பல்கலைகழகத்தை நிறுவி நிறைய சேவைகளை செய்து வருகிறார். கடந்த வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலின்போது பிரச்சாரம் செய்ய அப்பகுதிக்கு சென்றபோது பல இடங்களில் அவர் பள்ளிகூடம் கட்டுவது, ஏழை எளியோரை படிக்க வைப்பது என பல்வேறு சேவைகள் ஆற்றிவருவது தெரிந்தது. இருப்பவர்களெல்லாம் இல்லாதவர்களுக்கு தரவேண்டும் என்ற மனப்பான்மையை பெற்றுள்ள அவர் நீடூடி வாழ வேண்டும் என வாழ்த்துகின்றேன். தனது நா வன்மையால், தேசிய உணர்வை வளர்த்து, சுதந்திர உணர்வை மக்கள் மனதில் விதைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மண் காணக்கூடிய கர்மயோகி வ.உ.சியின் திருவுருவச்சிலையை போடிநாயக்கனூரில் திறந்து வைக்கும் ஒரு அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்ற அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்றும் உங்களில் ஒருவனாக இருந்து உங்களின் பிரச்னைகளை களைய உறுதுணையாக இருந்து கடமையை பணியை ஆற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கழக நிர்வாகிகள், ஐக்கிய பிள்ளைமார் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed