July 31, 2021

தொடர்பு எல்லைக்கப்பாலுள்ள சிவப்பு சூறாவளி, தா.பா. அவர்களுக்கு செவ்வணக்கம்…

1 min read

நல்ல குறிக்கோள் அடைய முயற்சிக்கும் மனிதனின் செயல்பாடே வரலாறாக மாறுகிறது என்பதற்கேற்ப நீங்கள் தற்போது வரலாறாகி்விட்டீர்கள். உங்களிடம் சில நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். என் கணவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களும் தோழர் து.ராஜாவும் குடியாத்தம் கல்லூரியில் படித்தவர்கள். என் கணவர் அவருக்கு சீனியர். ராஜா B.Sc. முடித்துவிட்டு பின் காட்பாடியில் B.Ed., முடித்து வேலூரில் ஸ்தல ஸ்தாபன தணிக்கை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி புரிந்து வந்த நேரம். ராஜாவுக்கு ரஷ்யா செல்லும்படி கட்சியில் ஏற்பாடாகியதால் தன் வேலையை இராஜினாமா செய்து விட்டு ரஷ்யா பயணமானார். அதேபோல் என் கணவருக்கு கட்சித் தலைமையிலிருந்து சென்னை வருமாறு தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள்
கடிதம் அனுப்பினார்கள்.

சோவியத் யூனியலிருந்து ராஜாவும் திரும்பி வந்த பிறகு என் கணவரையும் D.ராஜாவையும் நீங்களும் தோழர்.பா.மாணிக்கமும் அழைத்து பேசினீர்கள். உங்களில் ஒருவர் ஜனசக்தியிலும் மற்றொருவர் இளைஞர் பெருமன்றத்திலும் பணியாற்றுங்கள் என்றீர்கள். என் கணவரிடம் உங்களுக்கு ஸ்தாபன அனுபவம் இருக்கிறது.
ஏற்கனவே குடியாத்தத்தில் இளைஞர் பெருமன்றத் தலைவராக இருந்திருக்கிறீர்கள்.
எனவே மாநில இளைஞர் அரங்கில் பணியாற்றுங்கள் என்றீர்கள். ஆனால் என் கணவருக்கு எழுதுவதில் தான் ஆர்வம் அதிகம்.
ஆகவே அவர் ஜனசக்தியைத் தேர்ந்தெடுத்தார்.

தோழர் D.ராஜா இளைஞர் பெருமன்றப் பொறுப்பேற்றார். தன் கடின உழைப்பால் இன்று அகில இந்திய பெரும் பொருப்பில் இருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது.
ராஜாவை நான் திருமணம் ஆகி வந்த நாள் முதல் அறிவேன் என்னை மாமி என்று அழைப்பார். என் குழந்தை ஹேமாவந்தனா பிறந்தபோதுதான் சோவியத் யூனியனிலிருந்து வந்தார். உடனே வந்து பார்த்து, ” மாமி இவள் ரஷ்யன் குழந்தைப் போலவே குண்டா, சிவப்பா, அழகா இருக்கா” எனக் கொஞ்சி அறிந்த, நீங்களும் அவளை கேலி செய்வீர்கள்.
என் கணவர் அன்றிலிருந்து இறுதி வரை அவர் உங்களுடனேயே பயணித்தார். நீங்கள் அவருக்கு ஆசானாக மாறி நல்வழிப்படுத்தினீர்கள். தோழர் எம்.கலியாணசுந்தரம், ப.மாணிக்கம் மற்றும் உங்களால் தான் எங்கள் வாழ்க்கையே திசை மாறத் துவங்கியது. உங்கள் மூவரால் எங்கள் வாழ்க்கையில் பல்வேறு பரிமாணங்களை அடைந்தோம்.

உலகில் கருத்து முதல்வாதம் முதலில் தோன்றியதா, பொருள் முதல்வாதம் முதலில் தோன்றியதா என்பதற்கான தோழர்.ஏங்கல்ஸ் கூறிய தத்துவமும் , “ஊசிமுனை துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் ஏழைக்கு உதவாத பணக்காரன் பரலோகத்திற்குள் போக முடியாது” என்கிற பைபிள் வாசகமும் எங்களை மெல்ல மெல்ல செதுக்கியது. கார்ல் மார்க்சின் உபரி மதிப்பு தத்துவம் பற்றிய வகுப்புகளை உங்கள் மூலம் கேட்டறிந்தோம். நீங்கள் பேசிய மார்க்சீய மந்திரத்தால் கட்டுண்டோம்.

இந்நிலையில் சோவியத் நாடு அலுவலகத்தில் பணியாற்றிய என்னை தலைமை அழைத்துக் கொண்டது. பாலன் இல்லம் அலுவலகத்தில் நான் பணியைத் தொடர்ந்தேன் ! ஸ்தாபன ரீதியாகவும் தாமரை இதழில், ஜனசக்தியில் எழுதுவது சம்மந்தமாகவும் என் கணவர் அடிக்கடி உங்களிடம் சண்டையிடுவார்.
ஏய் கிறுக்கா, எனச் சொல்லி ஒரு புன்னகையுடன் கடந்து செல்வீர்கள். என் கணவருக்கு தலைநிறைய அடர்த்தியாக தலைமுடி இருக்கும். மறுநாளே சசி எங்கேம்மா அந்த குரோட்டன்ஸ் தலையன் என வேடிக்கையாக கேட்பீர்களே. உங்கள் இருவருக்கும் இடையில் அடர்த்தியான நெருக்கம் இருந்தது.

உங்கள் மூலம் தான் என் கணவருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. நீங்கள் என் கணவரை அழைத்துக் கொண்டு நீங்கள் இருவரும் கலைஞர் வீட்டிற்குச் சென்றீர்கள். இவரைக் காட்டி, இவர் ஜனசக்தியில் என்னோடு பணியாற்றுகிறார். கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர், யாரிடமும் யாருக்காகவும் சமரசம் செய்துக் கொள்ளாத போராட்டக்காரர் என அறிமுகப்படுத்தினீர்கள்.

1980 ஆம் ஆண்டு முதல் கலைஞரும், என் கணவரும் நெருங்கிய வட்டத்தில் இணைந்தனர். உன்னைப் போல் எனக்கு ஒரு போராளி இருந்தால் எனக்கும் நல்லது தாஸ் என்றார் கலைஞர். மேலும் கலைஞரும், நீங்களும் இல்லாமல் என் பிள்ளைகள் திருமணம் நடந்ததில்லையே தோழர். திருமணத்தில் ரவீந்திரதாஸ் எனக்கு சம்பந்தி என கலைஞர் பேசியது மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளிவந்த போது அனைத்துக்கும் காரணம் தா.பா.தான் என என் குடும்பத்தினர் உங்களைக் கொண்டாடினார்களே தா.பா. எங்கள் குடும்பத்தில் நீங்க பழகாத அறியாத நபர்கள் யாருமில்லை.

நீங்கள் அறிமுகப்படுத்திய கலைஞர் தானே என் கணவரின் உயிரை இரண்டுமுறை மீட்டுக் கொடுத்தார். ஒருமுறை சைதாப்பேட்டையில் இந்திராகாந்தி் வந்த போது ஏற்பட்ட கலவரத்தில் லத்திசார்ஜ் நடந்தபோது, மறுமுறை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி போராட்டத்தினை முன் நின்று நடத்தியபோது
ஆக இருமுறை என் கணவரின் உயிர் கலைஞரால் காப்பாற்றப்பட்டது.
நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அறிமுகம் காரணம்.

அரசியல் காரணங்களுக்காக, நீங்களும் கலைஞரும் கருத்து மோதலில் வேறுபட்ட காலங்களிலும் கலைஞர் ஒரு போதும் என் கணவரை விலக்கியதில்லை. கலைஞரையே கடுமையாக விமர்சித்து இவர் எழுதிய போதும் இவர் எழுத்தை ரசித்தவரல்லவா கலைஞர்.!! இந்த எல்லா பொருமையும் உங்களுக்குத்தான் தா.பா.

நான் அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் தோழர். ASK. மறைந்த போது தாங்கள் வெங்கலக் குரலில் கர்ஜனை செய்து நெக்குறுக வர்ணனை செய்தது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது. அன்று தான் உங்கள் பேச்சை முதன் முதலில் கேட்டேன். உங்கள் உடல் மூப்பு காரணமாக தளர்ந்திருந்தாலும் குரலும், எழுத்தும், வீரியம், கொஞ்சமும் குறையவில்லை. என நீங்கள் மறையும் நாளுக்கு முதல் நாள் தான் தோழர் ஆர்.நல்லகண்ணு என்னிடம் தொலைபேசியில் கூறினார்.

கம்பனில் மூழ்கி, தமிழன்னைக்கு மகுடம் சூட்டிய தமிழ்மகனே தா.பா. கம்பன் கழக கவியரங்கத்தில் கட்டுரை சமர்ப்பிக்க என்னிடம் டைப் செய்ய கொடுக்கும் போதே, அதை நான் படித்தே பல இலக்கியச் செய்திகளையும் கம்பனையும் உங்க எழுத்தின் மூலமே அறிந்தேன் எனலாம்.
என் கணவரின் ஆசானே!
வழிகாட்டலே!!
இலக்கியப் பேராசான் ஜீவாவின் வழித்தோன்றலே!!
பன்முகத் தலைவரே!!
சென்ற இடத்திலாவது ஓய்வு கொள்ளுங்கள்.
எங்கள் குடும்ப சார்பாக உங்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறோம் !

– டி.சசிகலாதேவி ரவீந்திரதாஸ் (பத்திரிக்கையாளர்களின் பாதுகாவலராக இருந்த, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவன தலைவர், ரவீந்திரதாஸ் அவர்களின் மனைவி)

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *