August 1, 2021

வீதிகளையே வகுப்பறைகளாக மாற்றிய, சிதம்பரம் பகுதி ஆசிரியை சசிகலாவை பாராட்டி மகிழும் பெற்றோர்கள் – பொதுமக்கள்…

1 min read

படித்து பட்டம் பெற்ற இளைஞர் – இளம் பெண்கள் அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றுவதையே தங்களது கடமையாக கொண்டு செயல்படுவர். அதிலும், குறிப்பாக பள்ளி ஆசிரியர் – ஆசிரியையாக பணியாற்றுவதையே பெரும்பாலும் விரும்பி செயல்படுத்துவர். நம்மால் அனைத்து மாணவர் – மாணவியர்களும் எளிதாக கல்வி பயில வேண்டுமென்ற எண்ணத்தில், பள்ளி ஆசிரியையாக வேண்டுமென்ற நினைப்பில் பள்ளி கல்வியில் சிறந்து பயின்று விளிம்பு நிலை மாணவர்களுக்கு சேவை புரிந்து வருகிறார் ஆசிரியை சசிகலா.

இவரது எண்ணத்திற்கும், செயல்களை பாராட்டி ஊக்குவிக்கும் வண்ணமாய் பள்ளி ஆசிரியர் இளங்கேசன் வாழ்க்கை துணைவராய் அமைந்தது இவரது வாழ்க்கையின் மையில் கல்லாக உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் கிராமப் பகுதியில் வசிக்கும் இளங்கேசன் – சசிகலா தம்பதியர்களுக்கு சஹானாஸ்ரீ , ஷாம்சுகந்த் என இரு பிள்ளைகள் உள்ளனர். தாயின் எண்ணத்தை பிரகாசிக்கும் வகையில், சஹானாஸ்ரீயும் இசை மற்றும் பேச்சுக்கலையில் தனக்கென தனித் முத்திரை பதித்து வருவது காண்போரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. ஆசிரியை பணியில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு மட்டும் கல்வி பயில்வதோடு, நமது பகுதியில் வாழும் பின்தங்கிய சமூக, பொருளார நிலையிலுள்ள குழந்தைகளை அரவணைத்து வீதிகளையே வகுப்பறைகளாக மாற்றி, குடும்ப பணிகள் போக மீதி நேரத்தை இக் குழத்தைகளின் வளர்ச்சிக்காக, எதிர்காலத்தை எண்ணி கல்வி பயில்வித்து வழிகாட்டி வருவது ஆச்சரிய மூட்டும் செயலாகும்.

சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி ஆசிரியை சசிகலாவை, நமது நிழல்.இன் மின்னிதழக்காக பிரத்யேக பேட்டி எடுத்த போது , குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே சுற்றிச் சுழலும் சூறாவளி காற்று போன்று தனது எண்ணத்தையும், அனுபவங்களையும் பொரிந்து தள்ளியதாவது :
உலகம் இதுவரை சந்தித்திடாத பேரிடர் கொரனோ எனப்படும் வைரஸ் தொற்று, இதன் மூலம் கற்பனைக்கு எட்டாத வழக்கத்துக்கு மாறான வாழ்க்கைச் சூழலில் நாம் தற்போது நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பள்ளிகள் உத்தேசமாக கூட எப்பொழுது திறக்கப்படும் என்று சொல்லமுடியவில்லை.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி மூலமும், முயற்சி மேற்கொண்டு வகுப்பறையின் கற்றல், கற்பித்தல் நிகழ்வை ஓரளவு மாணவர் களுக்கு நினைவுபடுத்தி வருகிறார்கள். ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிகழும் இக்கற்றல் நிகழ்வில் அனைத்து நிலை மாணவர்களும் நிச்சயமாக பங்கேற்க வாய்ப்பில்லை. ஏனெனில், நமது தேசத்தில் இணைய வசதி இல்லாத இடங்களும் தொழில்நுட்ப வசதி பெற வாய்ப்பில்லாத மக்களும் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது இருக்கிறது.

வாய்ப்பற்றவர்களுக்கான வாய்ப்பாக இருக்க வேண்டிய கல்வி, இன்றையச் சூழலில் வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே வாய்த்திருப்பது ஜனநாயக முறையன்று.
அந்த காலத்தில் பள்ளி சென்று பயில வசதியற்ற, வாய்ப்பற்ற நிலையிலிருந்த பெண்களுக்காக இரவுப் பள்ளிகள் எனப்படும் முறைசாரா பள்ளிகள் இயங்கி வந்தன. அதன் பிறகு வாய்ப்பிழந்தவர்களுக்காக குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்களுக்காக அறிவொளி இயக்கம் எனும் முறைசாரா கல்வி முறை . இரவுபள்ளி, அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்றைய சூழ்நிலையில் வாய்ப்பு அற்றோர்களின் வாய்ப்பாக வகுப்பறை களுக்கு மாற்றான கற்றல் நிகழ்வுகள் அவசியப்படுகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் பெருக வாய்ப்புள்ள இந்த நேரத்தில் வீடு, பள்ளிகளுக்கு மாற்றான மூன்றாவது களம் காலத்தின் தேவையாகிறது .

வீதி வகுப்பறை….
வழக்கத்திற்கு மாறான வாழ்க்கைச் சூழலில் வழக்கமான வகுப்பறை செயல்கள், போதனை முறைகள் என்பவற்றையே நாம் எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது. எல்லாவற்றி லிருந்தும் வித்தியாசமான சந்திப்புகளும் நிகழ்வுகளும் தேவைப்படுகின்றன. இவற்றை சாத்தியப்படுத்தும் நிகழ்வு தான் வீதி வகுப்பறை எனப்படும் முறைசாரா கல்வி முறை, பேராசிரியர் ச.மாடசாமி முன்வைத்த கல்விமுறை. பள்ளிகளில் வகுப்பறைகள் இயங்க முடியாத போது அந்த வகுப்பறைகளை வீதிக்கு கொண்டுவரும் முயற்சியாகும். நான் வசிக்கும் சிதம்பரத்தை ஒட்டியுள்ள தில்லைநாயகபுரம் எனும் கிராமத்தில் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயில கூடியவர்கள். கல்வி தொலைக்காட்சி வாயிலாக கூட கல்வி பெற வாய்ப்பற்றவர்கள். இவர்களின் கல்வி தற்பொழுது பெரிதாக பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்த நிலையில் வீதி வகுப்பறையை செயல்படுத்த களம் இறங்கினோம். முதற்கட்டமாக 2 தெருக்களில் வீதி வகுப்பறைகளைத் துவங்கினோம். ஒரே தெருவில் ஒன்றாக கூடி விளையாடும் குழந்தைகள் 4,5பேரை இணைத்து கல்வி பயில வழி செய்தோம். ஒன்றாக சேர்ந்து பயிலும் குழந்தைகளை பயிற்றுவிக்க பாதுகாப்பு கருதி அவர்களுடனே பயணிக்கும் அவர்களது தெருவிலுள்ள படித்த பெண்களை ஈடு படுத்தினோம். இதன் மூலம் கற்றல் நிகழ்வில் சமூகத்தை இணைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குழந்தைகளின் நலன் கருதி அவர்களுடன் சேர்ந்து நான் கற்றல் நிகழ்வில் ஈடுபட முடியாததால் வெளியில் நின்று வழிகாட்டுதல் செய்து வருகிறேன்.

கற்பிக்கும் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறு தொகையையும் அன்பளிப்பாக வழங்கி வருகிறோம். எங்களது வீதி வகுப்பறைகளின் செயல்பாடுகளாக புத்தக வாசிப்பு, கதை சொல்லல், கலந்துரையாடல், கதை எழுதுதல், கதையின் கதாபாத்திரங்களை நடித்துக் காட்டுதல், வாசிப்பு போட்டி நடத்துதல், ஓவியம் வரைதல் தையல்பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றை அமைத்து குழந்தைகளை பங்கேற்கச் செய்து வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். இது வழக்கமான வகுப்பறையின் சலிப்பூட்டும் செயல்பாடுகளிலிருந்து அவர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. குறிப்பாக பதின்மவயது பிள்ளைகளின் மனநிலை யில் முன்னெப்போதும் இல்லாத நிலையில், பள்ளிகள் திறக்கப்படாத இந்த சூழ்நிலை குழப்பத்தையும், அமைதியின்மையும் ஏற்படுத்துவதோடு பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலிருந்து அவர்களை விடுவிக்கும் முயற்சியாகவும் அவர்களது மனவெழுச்சி சார்ந்த சிக்கல்களை மடைமாற்றம் செய்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் எங்களது வீதி வகுப்பறை முயன்று வருகிறது.

“வகுப்பறைகளில் விழிப்புணர்வு வருவது என்பது ஸ்டவ் தீப்பிடிப்பது போல, ஆனால் வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுவது என்பது காடு தீப்பிடிப்பது போல “என்று கூறிய ஜூலியஸ் நைரேரேவை இங்கு நினைவு கூறுகிறேன். ஆமாம் , கல்வியைப் பொருத்தவரை மனங்களில் தான் மாற்றம் வரவேண்டும். அப்படியான மாற்றத்தை திணித்தலின்றி சுதந்திரமான நிலையில் உருவாக்க வீதி வகுப்பறைகளே சரியான களம் ஆகின்றன. உரையாடுவதும், கதை சொல்வதிலும் பயமின்றி உணர்வு மயமாக, ஜீவன் உள்ளதாக பார்க்கிறேன்.

இதுதான் தேவையான மாற்றமும் கூட….
இங்கு வகுப்பறைக்கு வெளியே கற்க பல வழிகளை கண்டறிந்து இருக்கிறோம். பொதுவாக வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத பொழுது போக்காகவே உணரப்படுகிறது. எனவே வாசிப்பை அவர்கள் விரும்பும் விதத்தில் நகர்த்திச் செல்ல திட்டமிட்டோம். அதனடிப்படையில் பாடப்புத்தகங்கள் அல்லாமல் நாங்கள் இயக்கி வரும் நூலகத்தின் துணையோடு பல்வேறு புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வாசிப்பு போட்டியை நடத்தினோம். சிதம்பரம் நகர அரசு தலைமை நூலகம் நூலகரால் பரிசுகள் வழங்கி குழந்தைகளை ஊக்குவித்தோம். குழந்தைகள் மட்டுமன்றி குழந்தைகளின் பெற்றோர்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வீடுகள்தோறும் சென்று ஓரளவு படித்த பெற்றோர்களுக்கு நூல்களை வழங்கி வருகிறோம்.

இந்த இடத்தில் மிக முக்கியமாக குறிப்பிட நினைப்பது, வாசிப்பை நேசிக்க செய்ய , குழந்தைகள் கையாள எளிதான குறைந்த பக்கங்களைக் கொண்டதும், அதிக படங்களுடன் கூடிய புத்தகங்களை தும்பி, வானம்,பாரதி புத்தகாலயம் போன்றவற்றிலிருந்து தொடர்ந்து நமக்கு அனுப்பி உதவிய துல்கல் நூலக குழுவினரின்சேவை அளப்பரியது.

இடைவிடாத உரையாடல்கள், அதிகமான புத்தக வாசிப்பு, சலிப்புத் தட்டாத படைப்பாற்றல் நிகழ்வுகள், புதிய சந்திப்புகள் போன்றவைகளே கற்றலை கையகப்படுத்தும் சிறந்த வழி என வீதி வரை அனுபவங்களின் வழி உணர்ந்திருக்கிறோம். குழந்தைகளின் சிந்தனைகளில் புதிய மாற்றத்தை விதைத்திருக்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் தாங்களே படைப்பாளிகளாக முயன்று வருவது எங்களது வெற்றி….

வகுப்பறையின் நான்கு சுவர்களின் ஆசிரியையாக நான் காணாத வெற்றி..
வெற்றிப் பயணம் தொடரும்….
எனது சமூகம்…
எனது குழந்தைகள்…
எங்களது சுதந்திரம்…
எங்களது முன்னேற்றம்
முன்னேற்றத்திற்கான செயல்பாடு களைத் தொடருவதில் மகிழ்ச்சி…. என சசிகலா பொரிந்து தள்ளினார். இவரது செயலை பெற்றோர்கள், குடும்பத்தினர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்த வண்ணம் உள்ளனர்.
ஆசிரியை சசிகலா போன்ற எண்ணத்தில் ஊருக்கு ஓர் ஆசிரியை அமைந்து இப்படியொரு மகத்தான சேவையை செய்ய முனைந்தால் இந்தியாவில் கல்வி கண் திறந்த தமிழகம் என பெயர் பெறுவதற்கு வெகு நாட்கள் இல்லையென்பதே இவரது செயல் சாட்சியாக அமைந்துள்ளது.
இவரது எண்ணம், செயல் , சேவை மென்மேலும் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்திட நாமும் வாழ்த்தி மகிழ்வோம்…

மாமு.ஜெயக்குமார்.
பரமக்குடி.
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *