July 31, 2021

கள்ள உறவில், குறை பிரசவத்தில் பிறந்தவர் பழனிசாமி என ஆ.ராசா கடுமையாக சாடல்…

1 min read

மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுகவின் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுபவர் சுதர்சனம் அவரை ஆதரித்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட, மோரை மொண்டியம்மன் நகர், மாதவரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் பேசியதாவது, தமிழகத்தில் இருவர் தற்போது மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருவதாகவும், ஒருவர் ஜெயலலிதா ஆட்சியை தொடர வாய்ப்பு தருமாறும், மற்றொருவர் 10ஆண்டு காலம் இருண்டுள்ள தமிழகத்தை வெளிச்சத்தை கொண்டு வர வாக்களிக்குமாறு வாக்கு கேட்பதாக கூறினார்.

பழனிசாமி முதல்வராக இருந்து செய்த சாதனைகள் எல்லாம், ஸ்டாலினுக்கு சவாலாக இருப்பதாகவும், பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே பலத்த போட்டி என, பத்திரிக்கைகள் போலியாக தோற்றத்தை உருவாக்க சில பத்திரிக்கைகள் முயற்சிப்பதாக சாடினார்.

எடப்பாடி பழனிசாமி எப்படி அரசியலுக்கு வந்தார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஊழலுக்காக கலைக்கப்பட்டது தான் திமுக அரசு என பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ஏதேனும் ஆவணங்களை கொண்டு அதனை நிரூபிக்க தயாரா? என ஆ.ராசா சவால் விடுத்தார். பழனிசாமி அதனை நிரூபித்தால் அவர் எங்கு எந்த வாகனத்தில் இருந்தாலும் அங்கேயே வந்து நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் எனவும் , தவறும் பட்சத்தில் அண்ணா அறிவாலயத்தில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எனவும், இதற்கு முதல்வர் பழனிசாமி தயாரா என சவால் விடுத்தார்.

எமெர்ஜெண்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியாது எனவும், அவருக்கு வரலாறும் கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு முன் யாருக்காவது தெரியுமா, எனவும் அவர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது கூட அவரை யாருக்கும் தெரியாது என கூறினார்.

திடீரென முதலமைச்சரானவர் பழனிசாமி எனவும் கூவத்தூரில் அடைத்து வைத்து ஊற்றி, ஊற்றி கொடுத்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் ஒப்புதல் தெரிவித்ததாக கூறினார். பாம்பு, பல்லியாக இருந்து ஊர்ந்து போனால் பரவாயில்லை எனவும், ஆறு அறிவு உள்ள மனிதனாக இருந்து, ஊர்ந்து போய் பதவியை பெற்றதாக சாடினார்.

திருமணமான 15நாளில் 23வயதில் ஓராண்டு சிறைவாசத்தை அனுபவித்தவர் ஸ்டாலின் எனவும், கட்சியில் படிப்படியாக பதவிகளை பெற்று தலைவரானவர் என தெரிவித்தார். படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து அரசியல் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் எனவும், குறுக்கு வழியில் வந்து, ஊர்ந்து சென்று முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார். ஸ்டாலின் முறையாக பெண் பார்த்து திருமணம் செய்து 300நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின் எனவும், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் இதில், எந்த குழந்தையை தத்தெடுப்பது என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

குறை பிரசவத்தில் திருட்டு தனமாக பிறந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக மருத்துவர் தேவைப்படுவது போல, டெல்லியில் இருந்து ஒருவர் வந்து குழந்தையின் கையை உயர்த்தி பிடித்தி அதற்கு ஓட்டு போடுங்கள் என கேட்பதாக கூறினார். 4,500கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை செப்பனிட உலக வங்கி கொடுத்த நிதியை முறைகேடாக சம்மந்திக்கு டெண்டர் கொடுத்ததாக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்ததாகவும் ஆனால் எடப்பாடி பழனிசாமியோ டெண்டர் வழங்கியவருக்கு எனக்கும் உறவினர் இல்லை எனவும், அவரது மகளை எனது மகன் திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இதைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அமைச்சர் வேலுமணி, அமைச்சர் விஜயபாஸ்கர் என அனைவரின் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஊழல் செய்து வரும் அரசை நல்ல அரசு என மோடி கூறுவதாக தெரிவித்தார்.

எப்படியேனும் எடப்பாடி பழனிசாமி தோளில் ஏறி அதற்கு பிறகு அவர்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிட்டு அதிமுகவை அழித்து விட்டு அதற்கு பிறகு பிஜேபியை கொண்டு வரும் திட்டமாக தான் இந்த கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு, 7.5% இட ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர் கடன் ரத்து என பல்வேறு திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாலேயே எடப்பாடி பழனிசாமியும் அதனை அறிவித்தார் என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பது சொந்த புத்தி அல்ல எனவும் தலைவர் ஸ்டாலின் தந்த புத்தி என்றார். 100நாளில் மக்கள் குறைகளை எப்படி தீர்க்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் வேலை கேட்டு செல்லும் பெண்ணுக்கு பிள்ளை கொடுப்பதாகவும், 300நாள் தொலை நோக்கு திட்டத்தை ஜெயக்குமார் செயல்படுத்தி வருவதாக கடுமையாக சாடினார்.

மேலும் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் குழந்தைகள் குடிக்கும் பாலில் கலப்படம் செய்து ஊழல் செய்தவர் எனவும் அதற்காக ஜெயலலிதாவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் மாதவரம் தொகுதியின் தற்போதைய அதிமுக வேட்பாளர் எனவும் தெரிவித்தார். எனவே மக்கள் தற்போதைய வேட்பாளர்களில் மக்கள் கறைபடியாத வேட்பாளராகவும், நல்ல பண்பாளராகவும், படித்தராவும் திகழ கூடிய நமது சுதர்சனம் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என, ஆ.ராசா கேட்டு கொண்டார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *