May 12, 2021

திருவள்ளூரில் ஞாயிறு முழு முடக்கத்திற்காக, 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து 1200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…

1 min read

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், சென்னையை ஒட்டிய மாவட்டமான திருவள்ளூரில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் 800 என்ற அளவில் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா அதிவேக பரவலைத் தடுக்க கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று ஞாயிற்று கிழமையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணியில் இருந்தே தொடர்ச்சியாக 30 மணிநேர ஊரடங்கு தொடங்கியது.

முழு ஊரடங்கைத் தொடர்ந்து திருவள்ளூரில் வணிக நிறுவனங்கள் , திரை அரங்குகள், காய்கறி சந்தைகள் . மீன் இறைச்சி கடைகள் , உணவகங்கள் , மளிகை கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய பணிகளாக மருத்துவம், பால், உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. “தேவையில்லாமல் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்காக, 1200 காவலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், ஆந்திர எல்லைகளான ஊத்துக்கோட்டை, சத்தியவேடு, பொன்பாடி, எளாவூர் ஆகிய சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கைத் தொடர்ந்து பரபரப்பாக காணப்படும் திருவள்ளூர் தேரடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில கடைகள் மூடப்பட்டும், சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *