May 13, 2021

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு…

1 min read

கும்மிடிப்பூண்டியில் செயல்படும் அரசு பொது மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லை என்று திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாருக்கு பொதுமக்கள் பலர் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனுடன் கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி, மகப்பேறு சிகிச்சை பகுதி, ஆய்வகம் போன்றவற்றை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் , மருத்துவமனையில் பொது மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய உரிய நபர் பணியில் இருக்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனை செய்ய வரும் மக்களை காக்க வைக்க கூடாது, அவர்களிடம் கடுமையாக நடக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள வசதிகள், வசதி குறைபாடுகள் குறித்தும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கை வசதி மருத்துவமனையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். மேலும், ஆய்வின் போது பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும், மருத்துவமனையில் பகல் நேரத்தில் எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனைகள் செய்ய உரிய நபர்கள் இருப்பதில்லை, இரவு நேரத்தில் மட்டும் ஆட்கள் பணியில் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து அரசுமருத்துவமனைகளில் 630 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், படுக்கை வசதிக்காக சென்னையில் மருத்துவமனைக்கு அலைகழிக்கப்படுகிறார்கள்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சி விவசாய அணி மாநில செயலாளர் தயாளன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், ஓன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், ஒன்றிய திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன். முனியாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *