June 21, 2021

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு, கபசுரகுடிநீர் வழங்கினார்…

1 min read

தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா முன்னிட்டு, இன்று (05.05.2021) 3ம் மைல் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக, கொரோனா விழிப்புணர்வு முகாம் 3ம் மைல் மெயின்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்; கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி புதிய கட்டுபாடுகள் நாளை (06.05.2021) அதிகாலை 4 மணி முதல் 20.05.2021 அன்று அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தபட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

மேலும் பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறி கடைகள் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணி வரை மட்டும் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய அரசியல், கல்வி, கலாச்சாரம் பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தேநீர் கடைகள் திங்கள் முதல் சனி வரை மட்டும் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும், அதுவும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கபடும். ஹோட்டல்களில் பார்சல் சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனுமதி உண்டு. இறைச்சி மற்றும் மீன் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்த நாளை முதல் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்து கொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவுரை வழங்கி பேசியதற்க்கு பிறகு, அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை 3ம் மைல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபாலன், துணை தலைவர் பெத்துபாண்டியன், செயலாளர்கள் செல்லத்துரை, மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்சுரேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed