June 17, 2021

தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தது…

1 min read

தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளற்ற முழுநேர ஊரடங்கு காரணமாக இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.
இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கட்டுப்பாடுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் உள்ள காய்கறி சந்தை, தற்காலிக மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. தேனீர் கடைகள் கூட திறக்கப்படவில்லை. ஆங்காங்கே சில மருந்துக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி, வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் இயங்கவில்லை. அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டும் இயங்கின. இதனால் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, டபிள்யூஜிசி சாலை, வி.இ. சாலை, எட்டயபுரம் சாலை, திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சிலர் வெளியே வந்தனர். தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள், இருச்சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்ததுடன், அபராதமும் விதித்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *