September 23, 2021

கிருஷ்ணா கால்வாய் சீரமைக்கும் பணிகள், வீணாகும் மக்கள் வரிப்பணம்…

1 min read
Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டிஎம்சி தண்ணீர் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்ட கிருஷ்ணா கால்வாய் அடிக்கடி சேதம் அடைவதும் அடிக்கடி அதனை கோடிக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பதால் மக்கள் வரி பணம் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்பேரில் ஆந்திராவில் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என்று மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரமும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பாய்கிறது. 1984-ம் ஆண்டு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் 21-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 6-ந்தேதி நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் ஜீரோ பாய்ண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா கால்வாய் பல பகுதிகளில் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிருஷ்ணா கால்வாயில் முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோமீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மீதமுள்ள தூரத்துக்கு கால்வாய் சீரைமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணா கால்வாயின் தமிழக பகுதியான 25கிமீ தூர கால்வாய் அடிக்கடி சேதமடைவது அரசு சேதத்தை சரிசெய்ய அதிக பணம் ஒதுக்குவதுமாக உள்ளது. கிருஷ்ணா கால்வாயை உரிய முறையில் தொடர்ந்து அதிகாரிகள் பராமரிப்பதை விட்டு விட்டு, கால்வாயில் பெரிய சேதம் வரும் வரை காத்திருந்து பின்னரே பராமரிப்பு பணியை செய்வதால் அதிக அளவில் அரசு பணம் வீணாவதாகவும், கால்வாயை பராமரிப்பதில் பொதுப்பணித்துறையினர் அக்கறை காட்டுவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு பக்கம் கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர பகுதியான 152 கிலோ மீட்டர் தூரத்தில் பல்வேறு ஆந்திர கிராமத்தினர் கால்வாயில் மோட்டார் அமைத்து கிருஷ்ணா கால்வாய் நீரை அவர்களது வயல்களுக்கு திருப்புவதால் தமிழகத்திற்கு வரவேண்டிய 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு முழுமையாக கிடைப்பதில்லை.

இந்நிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ள கிருஷ்ணா கால்வாயில் இருந்து சிறு உடைப்புகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதும் நடக்கிறது. அதே போல கால்வாயை தொடர்ந்து பராமரிக்காமல் உள்ளதால் கால்வாயை சீரமைக்க அதிக பணத்தை அரசு தொடர்ந்து செலவழித்து வருகிறது. அரசின் இந்த மெத்தனங்கள் கண்டறியப்பட்டு தமிழகத்திற்கு தொடர்ந்து 12டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வகையிலும், கால்வாய் சீரமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் வரிபணம் வீணாவதையும் தடுக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் – சீனிவசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed