September 23, 2021

மறைந்த முதல்வர், டாக்டர், கலைஞர் மு.கருணாநிதி அவர்களும், என் கணவர் டி.எஸ் ரவீந்திரதாசும்…

1 min read
Spread the love

பத்திரிக்கையாளர்களின் பாதுகாவலர் போராளி டி.எஸ் ரவீந்திரதாஸ் அவர்கள் பத்திரிகையாளர்களுக்காக இரவும்,பகலும் பாராமல் கடினமாக உழைத்து வந்தது அனைவருக்கும் தெரிந்தது. அவர் பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதும், அவர்கள் அனைவரிடமும் நேர்மையுடனும், எந்த சுயநல எண்ணம் கொள்ளாமல் பழகியவர் என்பதும் அனைவரும் அறிந்ததே, அதே போல் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்களிடம் பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை, அவருடைய மனைவியார் அம்மா, சசிகலா ரவீந்திரதாஸ் அவர்கள் ஏற்கனவே எழுதி இருந்த ஒரு பதிவை, தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான இன்று அனைவருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
(- G.பாலகிருஷ்ணன்)

1980 ஆம் ஆண்டு முதல் கலைஞர் அவர்கள் என் கணவர் தோழர்.D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்குப் பரிச்சயம். இவரை முதன் முதலில் கலைஞரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் தோழர் தா.பா. அவர்கள் தான். அமரர் ஜீவா நினைவு நாளை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், என் கணவர் நடத்திய போது தலைமை என் கணவர், சிறப்புரை கலைஞர் அவர்கள். பின்னர் 1989 ல் இசைத்தென்றல் A.M.ராஜா அவர்கள் மறைந்த போது அவரது படத்தை கலைஞர் அவர்களை வைத்து திறந்தார். மேலும், அவர் மனைவி் பாடகி ஜிக்கி் மற்றும் அவரது பிள்ளைகள் பற்றி கேட்டறிந்த கலைஞரிடம் பரிந்துரை செய்து அக்குடும்பத்திற்கு ரூ.50,000/- நிதியும் 1989 ல் வாங்கிக் கொடுத்தார். என் கணவரின் ‘திரைப்பட விமர்சனங்கள்’ பற்றிய தொடர் ஒன்று தீக்கதிரில் வெளியாகியது. அது சினிமா இயக்குநர்களைப் பற்றிய தொடர், அதை சி.எல்.சி நிறுவனத்தால் நூலாக வெளியிட்ட போது அதற்கு தன் கைப்பட நீண்ட முன்னுரை எழுதி வழங்கினார் கலைஞர். இந்நூல் பற்றி அதிகம் பேசி தன்னுடைய வீட்டிலுள்ள பழைய புகைப்படங்களை எல்லாம் என் கணவருக்கு காட்டி அவர்களைப் பற்றி நினைவுகூர்ந்தார் கலைஞர்.

‘ஒரு மழலையின் பயணம்’ என்ற என் கணவர் எழுதிய குறுநாவலைப் படித்து விட்டு மனம் கலங்கிப் போனேன் தாஸ் என்றார். முதல்வராக இருந்தபோதும் என் மூன்று பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி வந்து திருமணத்தை நடத்தித் தந்தார். 1977 ல் சென்னை சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தேர்தலில் தோல்வியடைந்த அன்னை இந்திரா காந்தி சென்னைக்கு வந்ததை ஒட்டி கருப்பு கொடி காட்டும் போராட்டம் அது. அப்போது என் கணவர் ஜனசக்தி இதழின் செய்தியாளர். அவ்வழியே வந்த இவர் போலீஸ்காரிடம் மாட்டிக் கொண்டார். எங்கள் கட்சிக்கு இதில் சம்பந்தமில்லை, நான் பிரஸ்காரன் என அடையாள அட்டையை காட்டினாலும் கேளாமல், ரத்தம் வழிய, வழிய மண்டையை அடித்து பிளந்து விட்டனர். லாரியில் ஏற்கனவே சடலமானவர்கள் மத்தியில் தூக்கி வீசப்பட்டு, பின் அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அதுவரை எனக்கு எதுவுமே தெரியவில்லை.

தோழர். D. ராஜா வீட்டிற்கு வந்தார், மாமி குழந்தைகளை பள்ளியில் விட்டு, விட்டு என்னுடன் ஆபீஸ் வாங்க என்றார். வேறு ஏதும் சொல்லவில்லை. அது நம் எம். கே (கல்யாணசுந்தரம்) கார் என்பதால் முக்கிய வேலை போலும் என நினைத்தேன். கார் கட்சி அலுவலகம் போகாமல் நேராக ஜி.எச் சென்றது. பிறகு தான் ராஜா என்னிடம் அழாதீங்க என்று தகவலைச் சொன்னார். அந்த லாரியை சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு யூ.என்.ஐ ரிப்போர்ட்டர் சந்திரசேகர் இருந்திருக்கிறார். என் கணவரை அந்த நிலையில் பார்த்தவுடன் அவர் கலைஞருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னதும் கலைஞர் தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டு, நம் கட்சித் தலைமைக்கும் சொல்லியுள்ளார். அதனால் ராஜா என்னை அழைக்க வந்தார். அவசரப் பிரிவு வாசலில் தோழர் கே.டி. கே.தங்கமணியும் , அழகர்சாமியும் இருந்தனர். பின் அனுமதி பெற்று நாங்கள் உள்ளே சென்று கணவரைப் பார்த்தோம். கலைஞரது மனித நேயத் தலையீடு மட்டும் இல்லாதிருந்தால் என் கணவரை அன்றே நான் இழந்திருப்பேன்.
அவர் இன்னொரு முறையும் அவர் உயிரை மீட்டுக் கொடுத்தார்.

என் மகள் அஜீதா பள்ளியில் முதன்மையாக தேறியதால் அவளுக்கு அதிக மதிப்பெண் அடிப்படையில், ஸ்ரீராமச்சந்திரா மெடிகல் கல்லூரியில் எந்தவித மேல் கட்டணமும் இல்லாமல் இடம் கிடைத்தது. கல்லூரி ஆரம்பித்த முதல் பேட்ஜில் உடையார் மகள் ஆண்டாளும் அங்கே சேர்ந்தாள். 1992 ல் அரசுடைமை ஆக்கப்பட்ட ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி போராட்டம். என் மகள் அஜிதா உட்பட அனைத்து மாணவிகளும் வேலூர் தொரப்பாடி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆண்கள் எல்லாம் சென்னை சென்ரல் சிறையில். அப்போது அக்கல்லூரி பெற்றோர் சங்க அமைப்பிற்கு என் கணவர் ரவீந்திரதாஸ்தான் தலைவர். அப்போது அனைத்து கட்சியையும் இணைத்து பொது வேலை நிறுத்தம் கூட நடைபெற்றது.
அப்போராட்டத்தை கைவிடும்படி என் கணவருக்கு விலை பேசப்பட்டது. என் வீட்டிற்கு யாரெல்லாமோ வந்து தாஸ் எங்கே, எப்போது வருவார் என விசாரிப்பார்கள். சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். தாஸ் எங்கே எனக் கூறுங்கள் பத்து லட்சம் தருகிறோம் என்றார்கள். புது,புது ஆட்களாக வந்து பேரம் பேசுவார்கள். தொடர்ந்து கதவு ஜன்னல்களை சாத்தினாலும் இரவு நேரத்தில் கீழிருந்து கற்களை வீசுவார்கள். பிறகு என் நிலைமையை கலைஞருக்கு தெரியப்படுத்தினேன். உண்மையில் எனக்கும் தெரியாது என்றேன். அப்போது அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் தான் தங்கியிருந்திருக்கிறார். தோழர்கள் அவருக்கு அரணாக இருந்து பல நாட்கள் காத்தார்கள்.

கலைஞர் உடனே ஒரு அறிக்கை விட்டார்.
தாஸ் உயிருக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டார். அவரை எந்த சேதாரமும் இல்லாமல் கலைஞர் தான் இம்முறையும் காத்தார். ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி போராட்டம் குறித்து தி.நகர் பஸ் நிலையம் அருகே என் கணவர் தலைமையில் அனைத்துக் கட்சி கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் தான் சிறப்புரை. போராட்டத்தை முன் நின்று நடத்திய என் மகள் அஜிதாவைப் பாராட்டி பேசினார். தாஸ் கொள்கை பிடிப்புள்ள இளைஞர், சமரசம் செய்துக் கொள்ளாத போராட்டக்காரர் என வை.கோ. பேசினார்.
நம் கட்சி சார்பாக தோழர் ஏ.எம். கோபு கலந்துக் கொண்டு பேசினார். அடிக்கடி ஏதாவது ஒரு நிகழ்வைப் பற்றி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வந்த போது கலைஞர் சிறிதும் தயங்காமல் எங்க வீட்டு தொலைபேசிக்கு அழைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ,
V.P. சிங் அவர்கள் மறைந்த போதும், என் மகள் அஜிதா உட்பட மருத்துவக் கல்லூரி மாணவிகள் வேப்பேரி காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட போதும், நேரங் காலமின்றி எப்போதும் தொடர்பு கொண்டவர் கலைஞர் அவர்கள். போராட்டத்தின் போது என் கணவர் தொடர்பு கொண்டால் நள்ளிரவில் கூட அவரே போன் எடுத்திருக்கிறார்.
கடைசியாக தினபூமி பிரச்சினைக் குறித்து வீட்டிற்கு தொடர்பு கொண்ட போது வீட்டில் அவர் இல்லையே ஐயா என்றேன். என் கணவர் வந்தவுடன் தகவல் சொன்னவுடன் அவரே சென்று கலைஞரைப் பார்த்தார். என் மகன் கமல் திருமணத்தில் தாஸ் எனக்கு சம்மந்தி எனக் கூறி உரிமை கொண்டாடினார்.

கலைஞரிடம் எங்களுக்கு இருந்த பாசம் கட்சிக்கு அப்பாற்பட்டது. கொள்கையில் இருவேறு துருவங்கள் என இருவருக்கும் தெரியும். அவர் நடத்திய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கூட கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ விமர்சனங்கள் வந்த போதும் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து என் கணவரிடம் பாசம் செலுத்திய அந்த பாசத் தலைவன் என் கணவரின் உயிரைக் காத்தார் என்ற நன்றி என்னுள் இன்னமும் நீடித்துள்ளது.

டி.சசிகலாதேவி
ரவீந்திரதாஸ்.
7358520729

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed