July 28, 2021

வேலூர் அருகே, கண்ணமங்களத்தில் உடல்நிலை பாதித்த சிறுவனை, பேய் பிடித்ததாக நினைத்து அறியாமையில், அடித்து கொன்ற தாய் உட்பட இருவர் கைது…

1 min read

வேலூர் அடுத்த அரியூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கார்த்தி, இவரது மனைவி திலகவதி (வயது 35) கூலி வேலை செய்து வந்த இவர்களுடைய மகன் சபரி (7), கார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் இறந்து போனார். இவர்களுடைய மகன் சபரி சில காலங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மெலிந்து காணப்பட்டார்.

இந் நிலையில், சில நாட்களாக கண்கள் இருண்டு மிகவும் சோர்வாக இருந்துள்ளார். சில நேரங்களில் அலறல் சத்தமும் போட்டுள்ளார். அதனால், தாய் திலகவதி சபரிக்கு பேய் பிடித்ததாக கருதினார். சபரியை பார்த்த சிலர் அவனுக்கு பேய் பிடித்துள்ளது. பேயை வந்தவாசியை சேர்ந்த ஒருவர் விரட்டி விடுவதாக கூறியுள்ளனர். இதை நம்பியதாய் திலகவதி மகன் சபரியை அழைத்துக்கொண்டு தனது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோர் துணையுடன் வந்தவாசிக்கு ஆட்டோவில் சென்றார். வந்தவாசி செல்ல போதிய பணமில்லை என்பதால், ஆட்டோ டிரைவர் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் 4 பேரையும் இறக்கி விட்டுச் சென்றார்.

அதற்குள் நள்ளிரவு நேரமாகிவிட்டதால், 4 பேரும் செய்வதறியாது உடல்நிலை பாதிக்கப்பட்ட சவாரியை வைத்துக்கொண்டு அல்லல்பட்டு இருக்கிறார்கள். அந்த இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக, கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு வலிப்பும், மூச்சு திணறலும் அதிகமாக வந்தது. இதனால் திகைத்துபோன 3 பேரும் சபரியின் உடலில் பேய் உள்ளது. அவனை அடித்தால் பேய் ஓடிவிடும் என்று கருதி சிறுவனை தாக்கினர். ஏற்கனவே மூச்சு திணறல் மற்றும் வலிப்பால் உடல் சோர்வடைந்த நிலையில் இருந்த சபரி இவர்களின் பேய் விரட்டும் நடவடிக்கையால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

அப்போது தான் அவர்கள் 3 பேருக்கும் சிறுவன் இறந்து விட்டது தெரியவந்தது. 3 பேரும் சிறுவன் உடலை பார்த்து கதறி அழுதனர். பேய் விரட்ட எடுத்த நடவடிக்கையால் மகன் இறந்து விட்டானே என்று அவரது தாய் கதறி அழுதார். அவர்கள் அடித்ததில் சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள். சிறுவனின் பிணத்தை பார்த்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறினர்.
சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திலகவதியின் சொந்த ஊர் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பம். தற்போது வாடகை வீட்டில் அரியூரில் வசித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். சிறுவனின் தாய் திலகவதி மனநிலை பாதிப்படைந்தவர் போல் உள்ளார். அவரிடமும் கவிதா, பாக்கியலட்சுமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வளர்ந்த நாம், அடித்தட்டு மக்களிடம் தங்களுடைய உடல் நிலையில் இருக்கக் கூடிய பாதிப்பை புரிந்து கொள்ளும் அளவிற்கு, அடிப்படை தேவையான பிரச்சனைகளுக்கான விழிப்புணர்வு கொடுக்க வேண்டியதில், நாம் தோல்வியடைந்து இருக்கிறோம் என்பது தான் உண்மை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *