July 28, 2021

பழைய பென்ஷன் மீண்டும் அமுல் செய்யும் முன்பே, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை…

1 min read

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 12ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை காலமுறை சம்பளம் தந்து நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது ;

உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பணிநிரந்தரம் செய்ய கேட்டு மனுக்களை கொடுத்தோம். அதன்படி, பிப்ரவரி 1 தருமபுரி, பிப்ரவரி 6 கன்னியாகுமரி பத்மநாபபுரம், பிப்ரவரி 14 மயிலாடுதுறை திருக்கடையூர் போன்ற நிகழ்ச்சிகளில், தலைவர் ஸ்டாலின் அவர்களே பணி நிரந்தரம் செய்வேன் என நேரில் பதில் சொன்னார். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், இதற்காக தனியாக துறை உருவாக்கி தனி அதிகாரி நியமித்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அம் மனுக்கள் குறித்து எங்களிடம் விசாரித்தும் வருகிறார்கள். திமுக தலைவராக ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே ஏற்றுக்கொண்டு, தேர்தல் அறிக்கையிலும் சேர்த்த கோரிக்கையை, இப்போது முதல்வராகி உள்ள நிலையில் இதை நேரடி கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
” தேர்தல் அறிக்கையிலும் 181 வது வரிசை எண்ணில் பணி நிரந்தரம் செய்யப்படும்” என சேர்க்கப்பட்ட கோரிக்கை எங்களுடையது. தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை தெரிவித்து திமுக வெற்றிக்கு உழைத்தோம். எனவே, பள்ளிக்கல்வி துறையில் முதல் அறிவிப்பாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்து புது வாழ்வு கொடுக்க கேட்டு கொள்கிறோம். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்டகால கோரிக்கை சி.பி.எஸ் (CPS) ஒழித்து மீண்டும் பழைய ஓய்வூதியம் அமுல் செய்ய வேண்டும் என்பது. அவர்களின் கோரிக்கையை அமுல்படுத்தும் முன்பே தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளம் தந்து நிரந்தரம் செய்யுங்கள். இதனை பட்ஜெட்டில் அறிவித்து நடைமுறைப்படுத்த
வேண்டும் என, அந்த அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *