July 28, 2021

கொரோனா தொற்று குறைவு, அரசு ஊரடங்கை தளர்த்தியதால் , 70 நாட்களுக்கு பிறகு அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள்…

1 min read

உள்ளத்தில் இருப்பவர் தான் கடவுள் என்பார்கள், அவர் எங்கும்
நிறைந்திருக்கிறார். இருந்தாலும் அவரை கோவிலில் தரிசிப்பது பக்தர்களுக்கு அலாதியான இன்பம். கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவலால் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டிருந்தன. பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டிருந்தது. சிவாச்சாரியார்கள் மட்டும் வழக்கமான வழிபாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு , தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முக கவசம் அணிந்து கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள முக்கிய சன்னதிகளை தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 70 நாட்களுக்கு பிறகு தரிசனம் செய்ய வழி பிறந்துள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

வெளியூர் பக்தர்களும் வருகை தந்திருந்தனர்
மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் விரைவாகச் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி விடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்று அண்ணாமலையாரை மனம் குளிர தரிசனம் செய்தனர். கோவில் திறக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

உணவகங்களிலும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். சில பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளும் திறக்கப்பட்டு இருந்தன. அங்கும் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் சித்தர் சன்னதி மற்றும் ஆசிரமங்களுக்கும் சென்று வழிபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *