July 28, 2021

திருவண்ணாமலையில், டிரைவர் சீட்டில் பதுங்கி பயணிகளுடன் பயணம் செய்த பாம்பால் பரபரப்பு…

1 min read

திருவண்ணாமலை அவலூர்பேட்டை பணிமனையில் இருந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. அதில், பயணிகளும் வருகை இருந்தனர். திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்ததும், டிரைவர் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த ஒரு பாம்பு வெளியே வந்தது. இதனை கண்டதும் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 3 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பயணிகளை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றது. அதனை சில பயணிகள் அடித்துக் கொல்ல முயன்றனர். உடனே அந்தப் பாம்பு பஸ்சின் மேற்கூரைக்கு சென்றுவிட்டது. அங்கு அந்த பாம்பு நல்ல பாம்பு போல தலையை தூக்கி கொண்டு நின்றதால் அதனை கண்டு பயணிகள் அச்சம் அடைந்தனர். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கருதினர். இதுபற்றி அறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து “பாம்பை கொல்ல வேண்டாம். அதனைப் பிடித்து வனப்பகுதியில் விட்டு விடலாம்” என்றனர்.

சிறிது நேரம் போக்கு காட்டிய அந்த பாம்பை அவர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதுபற்றி பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூறும் போது, பஸ் பணிமனையில் நின்றபோது பாம்பு டிரைவர் சீட்டில் பதுங்கி இருந்துள்ளது. பஸ்நிலையம் வந்த பின்னரே அந்த பாம்பு வெளியில் வந்தது. நல்லவேளை பாம்பால் டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் பாம்புகள் உள்ளன. இங்கு வனப்பகுதி உள்ளதால் அனைத்து இடங்களிலும் பாம்புகள் நடமாடுகின்றன. சமீபத்தில் அண்ணாமலையார் கோவிலில் கூட ஒரு பாம்பு பிடிபட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கடி பாம்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *