August 3, 2021

தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்று சூழல் சீர்கேட்டை தடுக்க தவறினால் நடவடிக்கை – எம்எல்ஏ எச்சரிக்கை…

1 min read

கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டியில் சிப்காட், தேர்வாய் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினரிடம் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது தொழிற்சாலைகளின் பிரதிநிதிகளிடம் அவர்களது குறைகளை எம்எல்ஏ கேட்ட போது, தொழிற்சாலைகளுக்கு ஊராட்சிகளால் சொத்து வரி,பராமரிப்பு வரி என இரண்டு வரிகள் விதிக்கப்படும் நிலையில் அவைகளில் ஏதேனும் ஒரு வரியை மட்டும் விதிக்க வகை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சாலைகளில் வெளி நபர்கள் ஒப்பந்த பணிகள் கேட்டு மிரட்டுவதை தடுக்க வேண்டும், சிப்காட் வளாகத்தில் செயல்படும் 2டாஸ்மாக் மதுபானகடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மதுக்கடைகள் இடமாற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, வரி விதிப்பு குறித்து சட்டசபையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கும்மிடிப்பூண்டியில் செயல்படும் 9 அனல் மின் நிலையங்களாலும், தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் மருத்துவ, ரசாயன கழிவுளை மக்க செய்யும் தொழிற்சாலையாலும் ,பல்வேறு இரும்பு தொழிற்சாலைகளாலும், சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதோடு, சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் 50க்கும் மேற்பட்டோர் சிறுநீரக கோளாறால் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தொழிற்சாலை கழிவுகளை பொது இடங்களில் சாலை ஓரத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தார் கொட்டுவதை குற்றம்சாட்டி கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளால் சுற்றுசூழல் சீர்கேடு அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளின் வளாகத்தில் பசுமை பகுதிகள் இல்லாதது குறித்து எச்சரித்தவர் இனி 2மாதத்திற்கு ஒரு முறை தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடைபெறும் என்றவர், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களை பாதுகாக்கவும், தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதை தடுக்கவும் கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் செயல்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தவர், இனி அனைத்து தொழிற்சாலைகளும் கட்டாயம் சமூக பணிகளை செய்ய வேண்டும் என்றவர், மாவட்ட ஆட்சியர் மூலமாகவே இனி சமூக பணிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி, எஸ்.ரித்து சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளில் மட்டும் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்காமல், சிப்காட் வளாகத்தில் அனைத்து சாலைகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றும், தொழிற்சாலைளின் சார்பில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் , தொழிற்சாலைகளில் மின்னனு கழிவுகளை மேலாண்மை செய்வதில் தொழிற்சாலைகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வாரு தொழிற்சாலையும் வடமாநில தொழிலாளர்களின் விபரத்தை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன் , நடராஜன் கும்மிடிப்பூண்டி காவல் துறை கண்காணிப்பாளர் ரீத்து , கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலர் சாய் லோகேஷ் ,சிப்காட் தனி வட்டாட்சியர் தாமோதரன், மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed