August 6, 2021

திருவள்ளூரில், ஜே.ஜே .எம் குடிநீர் திட்டத்திற்கு, பால் ஊற்றிய ஊராட்சி தலைவர்…

1 min read

இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும், நாள் தோறும் 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என கூறி, இந்தியாவின் 73வது சுதந்திர தின விழாவில், பிரதமரால் அறிமுகம் படுத்தப்பட்டது தான், “ஜல் ஜீவன் மிஷின்” என்னும் குடிநீர் திட்டம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் திட்டம் இந்தியாவின் வளர்ச்சித் திட்டம் அல்ல, நாட்டு மக்களுக்கு தேவையான குடிநீரை கூட இலவசமாக வழங்க முடியாத ஒரு அரசாங்கம், நாளை மக்களுடைய குரல்வளையை பிடிக்கப் போகும் திட்டம் என, நாம் இந்த ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்தை விமர்சிக்க வேண்டிய நிலையில்,

” எரிகின்ற வீட்டில் உருவுவது வரை உருவ வேண்டும் ” என்று திட்டமிட்டு ஒன்றிய அரசு வருங்காலங்களில் மக்களிடம் குடிநீருக்காக கொள்ளையடிக்க போகக்கூடிய இந்த ஜே.ஜே.எம் திட்டத்தில், அதை நடைமுறைப்படுத்துவதிலேயே கொள்ளை அடிக்கின்றனர் ஊராட்சி நிர்வாகத்தினரும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும்,

உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய திருப்பாச்சூர் ஊராட்சியில் இந்த ஜே ஜே எம் திட்டத்தின் கீழ் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை, அந்த ஊராட்சிமன்ற துணை தலைவியாக இருக்க கூடிய, ஜெய்டியால் வசந்த் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். திருப்பாச்சூர் ஊராட்சியில் 2020 – 21 நிதியாண்டில் சுமார் 2 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் இந்த குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருப்பாச்சூர் ஊராட்சியில் உள்ள கொசவன் பாளையம், தாட்கோ நகர், பள்ளியரை குப்பம், கோட்டை காலனி, புதிய திருப்பாச்சூர், பழைய திருப்பாச்சூர், ஜே ஜே நகர், அம்பேத்கர் நகர், பெரிய காலனி உள்ளிட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி, நான்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், பைப் இணைப்புகளும், வீடுதோறும் குழாய் இணைப்புகளும் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது.

அதில், ஓம் சக்தி என்டர்பிரைசஸ் என்ற காண்ட்ராக்டரும், ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடிய சோபன்பாபு அவர்களின் மனைவி பெயரில் ஒரு ஒப்பந்த புள்ளியும் வழங்கப்பட்டு, அவர்கள் இருவருக்குமே பணிகள் செய்ய ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஓம் சக்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தினர் ஐந்து குக்கிராமங்களுக்கு, மூன்று மேல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், பைப் லைன் பதிப்பது, வீட்டு இணைப்புகள் வழங்குவது எனவும்,
தலைவர் சோபன்பாபுவின் மனைவி பெயரில் நான்கு குக்கிராமங்களுக்கு, ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், பைப் லைன் அமைத்து குடிநீர் இணைப்புகள் வழங்குவது எனவும், ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு அதன்படி, பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,

திருப்பாச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற ஜே.ஜே.எம் திட்டத்தில், “தெருக்களுக்கு தண்ணீர் கொண்டு போகக்கூடிய பைப்லைன் பூமிக்கு அடியில் அமைக்காமலேயே, வீடுகளுக்கு குழாய்களை மட்டும், வீட்டு சுவர்களிலும், சிறிய மர கட்டையை நட்டு அதிலும் நிறுவி, நூதன முறையில் மோசடி நடைபெற்றது, ” தெரியவந்துள்ளது. இதுகுறித்து, துணை தலைவர் ஜெய்டியால் வசந்த் அவர்களிடம் நாம் விசாரித்த போது, எங்கள் ஊராட்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் அமைத்து குடிநீர் வழங்கக் கூடிய இந்த ஜே ஜே எம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் சொன்ன போது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இந்த திட்டம் தற்போது செய்து முடிக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பொதுமக்கள் பலவிதங்களில் எங்களிடம் புகார்களை கூறுகின்றனர். இது குறித்து நான் தலைவரிடம் கேட்டபோது, அவர் சரியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இத்திட்டத்தில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் நூதன முறையில் ஊழல் நடைபெற்று உள்ளது.

நாம் குடியிருக்கும் நம் சொந்த ஊரில் இது போன்ற குடிநீர் திட்டத்தில் ஊழல் செய்தால், நாளை நாம், ஊர் மக்கள் முன்பாக தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவும் என்ற அச்சத்தில், என் கணவரிடம் கலந்து பேசி இந்த ஊழலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து, இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். அதே போல், எங்கள் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் உட்பட 15க்கும் மேற்பட்ட பணிகள் ஊராட்சியினுடைய எந்த அனுமதியும் இன்றி நடைபெற்று வருகிறது. இது போன்ற பலவிதமான நிர்வாக குழப்பங்கள் உள்ளது. துணைத் தலைவராக பெண்ணாகிய நான் இருப்பதால், நாளை அதிகாரிகளிடமும், ஊர் மக்களிடமும் கைகட்டி, தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறேன். ஆகவே, ஊராட்சி நிர்வாகம் குளறுபடிகள் குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்க திட்டமிட்டு இருக்கிறேன். என, அவர் பதிலளித்தார்.

இந்த பிரச்சனை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சோபன்பாபுவிடம் பேசுவதற்கு நாம் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊராட்சி செயலாளர் விஜயன் அவர்களிடம் தொடர்பு கொண்ட போது, சரிவர பதிலளிக்காமல் போனை சுட்ச் ஆப் செய்து விட்டார். பின்னர், தொடர்ந்து தலைவருக்கு பேச முயன்ற போது ஊராட்சி செயலாளர் விஜயன் நம்மை தொடர்பு கொண்டு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
” பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர், “உங்கள் ஊராட்சியில் பணிகள் முடிவதற்கு காலதாமதமாகி கொண்டிருக்கிறது ஆகவே, குழாய்களை மேலோட்டமாக வைத்து விட்டு புகைப்படம் எடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள்” என தொடர்ந்து வலியுறுத்தினார். அதனால் தான் தலைவர் பைப்லைன் போடுவதற்கு முன்பாகவே குழாய்களை நிறுவி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார். ஆனால், பைப் லைன் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. கூடிய விரைவில் வீடுகளுக்கு இணைப்புகளை வழங்கி, பொதுமக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம்” என கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed