September 26, 2021

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் எதிரே சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் அருகே 100க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பூமாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், பொறி, கடலை, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், காய்கறி என 100க்கும் மேற்பட்ட கடைகள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் இந்த கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு வந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை வரும் 12ம் தேதிக்குள் அப்புறப்படுத்தி அறிக்கை தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து இன்று ஜேசிபி இயந்திரங்களுடன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை கூட காட்டாமல் அவசர அவசரமாக கடைகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்ற முனைப்பு காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

கடைகளை அப்புறப்படுத்தும் முன்னர் தங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆண்டாண்டு காலமாக தங்களுக்கு வாழ்வளித்த வந்த கடைகளை அதிகாரிகள் இடிப்பதை கண்டு பவானி அம்மன் பணிகளை தடுத்து நிறுத்துமாறு கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

3தலைமுறைகளாக  வாழ்வளித்து வந்த கடைகள் இடிக்கப்படுவதால் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் வடித்தனர்.

தற்காலிகமாக கடைகளை இடிக்கும் பணியை நிறுத்திய அதிகாரிகள் வியாபாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed