October 27, 2021

மக்கள் நலப்பணியாளர்கள் தமிழக முதல்வர் அவர்களின் கருணையால் பீனிக்ஸ் பறவைகளாக உயிர் பெற போகிறார்கள்…

1 min read
Spread the love

மக்கள் நலப் பணியாளர்களை நியமித்த டாக்டர் கலைஞர் அவர்கள் மக்கள் நலப்பணியாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார், அதன் எதிரொலி தான் இந்த கட்டுரை…

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராகப்
பொறுப்பேற்றவுடன், வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் 2-7-1990 அன்று நியமனம் செய்யப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் மீது சினம் கொண்டு, 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க.
ஆட்சி அமைந்தவுடன், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்து
வாழ்வாதாரத்தைப் பறித்து மே திங்களில் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

1996ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி, கலைஞர் தலைமையில் அமைந்த போது, வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், 2001ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்த போது, மறுபடியும் மக்கள் நலப்
பணியாளர்களுக்கு வேலை இல்லை என்று கூறி 31-5-2001 அன்று வீட்டுக்கு
அனுப்பப்பட்டார்கள். 2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி கலைஞர் தலைமையில் அமைந்த போது, 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டு, அவர்களுடைய வாழ்வும்,
வாழ்வாதாரமும் மீட்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு முறை தி.மு. கழக ஆட்சி அமைகிற போது, மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை
அளிக்கப்பட்டுக் காப்பாற்றப்படுவதும், ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவர்களைக் கை விட்டு வீட்டிற்கு அனுப்புவதும் தொடர்ந்து மூன்று முறையாக நடந்து வந்தது.

மக்கள் நலப் பணியாளர்கள் இவ்வாறு வேலை கொடுக்காமல் வீட்டிற்கு
அனுப்பப்பட்ட காரணத்தால் 19 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நடைபெற்றன.
உதாரணமாக ஒருசிலவற்றைக் கூற வேண்டுமேயானால், நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை காமேஸ்வரன் என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் வேலை பறிக்கப்பட்டதின் காரணமாக 11-6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறிபோன காரணத்தால், அவருடைய
மனைவி பிரபா என்பவர் 11-6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 12-6-2001 அன்று நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின்
குடும்பத்திற்கு அப்போதே தி.மு. கழகத்தின் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமமூர்த்தி பணி பறிபோனதும் அந்தச் சோகத்தில் பட்டினி கிடந்தே மாய்ந்து போனார். நாகை மாவட்டத்தில் தரங்கம் பாடியைச்
சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் மனம் வெதும்பி, பட்டினி கிடந்து உயிர் துறந்தார்.
அதேபோல திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தவாயல் ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றிய கோவிந்தராஜ் என்பவரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோல பட்டியல் நீளுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய எந்தப் போராட்டத்திற்கும் அதிமுக ஆட்சியாளர்கள் மனம் இரங்கவோ, செவி
சாய்க்கவோ இல்லை. 2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அப்போதைய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக தேமுதிக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.எச்.சேகர் என்ற சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இருந்த அத்தனை அதிமுக உறுப்பினர்களும் அமைதியாக இருக்க, இவர் எழுந்து ” மக்கள் நலப்பணியாளர்களால் அரசின் பணம் விரயமாகிறது ஆகவே அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவார்களா ” என, என கேள்வி எழுப்பினார். அதனடிப்படையில்
மக்கள் நலப்பணியாளர்கள், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, பணி நீக்கம் செய்து தமிழக அரசு, 8-11-2011 அன்று அரசாணை எண். 86ஐ பிறப்பித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதியைத் துடைத்து, மீண்டும் பணி வழங்கக்கோரி 15-11-2011 அன்று தி.மு. கழக இளைஞர் அணியின் சார்பில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிகார் படம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.

பணி நீக்க உத்தரவை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு அந்தச் சங்கத்தின்
அலுவலர்கள் சார்பில் தொடரப்பட்டது. இதற்கான வழக்கில் நீதிபதி சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை; மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில்
சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக அவர்களைப் பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை 23-11-2011 அன்று
தாக்கல் செய்ய வேண்டு மென்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். மக்கள் நலப் பணியாளர் சங்கத் தேர்தல் 3-4-2012 அன்று நடத்தப்பட்டு, மதிவாணன் தலைவராகவும், ராஜேந்திரன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில்
ஏற்கனவே இருந்த பழனி நீக்கப்பட்ட போதிலும், இந்த வழக்கு குறித்த கோப்புகளையெல்லாம்
புதிய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கவில்லை. சங்கத்தின் சார்பில் எந்தவொரு முக்கிய
முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றாலும், சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டித்தான் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், அதன் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே இருந்த பழனி என்பவர்
நீக்கப்பட்டிருந்த நேரத்தில், யாருடனும் கலந்து கொள்ளாமல், அவர் மட்டும் ஒப்பந்தம் செய்து
கொண்டு, ஐந்து மாதச் சம்பளம் கொடுத்தால் போதும், பணியிலிருந்து நீக்குவதற்கு ஒப்புக்
கொள்வதாக ஒரு உடன்பாட்டினைச் செய்து கொண்டு, நீதிமன்றத்திலும் அதனைத்
தெரிவித்து விட்டனர். நீதிமன்றமும் அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டு, மக்கள் நலப்
பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஆணைக்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிட்டது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு அதன் பின்னர்தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு எதிராக பழனி செய்த மோசடி தெரிய வந்திருக்கிறது.
அதற்குப் பிறகுதான் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர், “பழனி என்பவர் பொறுப்பிலேயே
இல்லை, மதிவாணன்தான் பொறுப்பிலே இருக்கிறார், எனவே பழனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்”” என்று மக்கள் நலப் பணியாளர்களுக்காக வாதாடிய
வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்தார்.
நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல்
பெஞ்ச், மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம், நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்குக்
கருதினாலும் கூட கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில்
அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்து கேட்கவில்லை.

இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவைச்
சரியாகப் பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர் களின் நிலையை பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய
பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோதமானது. இதை
வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு மாறும் போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும்
கண்டனத்துக்குரியது, வேதனையானது, வருந்தத்தக்கது. எனவே அரசுக் கோரிக்கையை
நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த
ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்; அதை விட்டுவிட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது? இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறினார்கள்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தில் 29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஆட்சி
மாறும் போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்? இனிமேல் இதுபோன்ற
நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது”” என்று கண்டனம் தெரிவித்தார்கள். இதனை
அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று தமிழக அரசு
வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள்
நிராகரித்தனர். இந்த வழக்குதான் தற்போது உச்சநீதிமன்றத்தில் 11-11-2013 அன்று விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதிகள் அணில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுதான் இதனை விசாரித்து அளித்த தீர்ப்பில், மக்கள் நலப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஆனால், 2013 இல் இருந்து இன்று வரை நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு அரசு தமிழகத்தில் இருந்து வந்தது இந்த அரசு நீதிமன்றத்தை அவமதித்ததுடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இருட்டடிக்க செய்து அவர்களுடைய வாழ்க்கையை இருட்டு அறையில் வைத்திருந்தது. இந்நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுடைய வாழ்க்கையில் ஒளி வீசுகின்ற காலம் நெருங்கியுள்ளது அதற்கு காரணம் தமிழக முதல்வர் நடவடிக்கை தான், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியாற்றவும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒளி விளக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சில நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார் என்பது தெரியவருகிறது. உதாரணம் பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 2011 ஆம் ஆண்டு வரை பணி செய்த மக்கள் நல பணியாளர்கள் உடைய பட்டியல்களை தூசி தட்டி எடுத்து வருகிறார்கள் என்ற தகவல் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி உள்ளது.

இதுகுறித்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்க மாநில தலைவராக பொறுப்பு வகிக்க கூடிய மதிவானன் அவர்களிடம் நாம் பேசியபோது, மக்கள் பணியாளர்கள் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கபட்டவர்கள். எங்களை நியமனம் செய்த காலத்தில் இருந்து இன்று வரை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்களுடைய வாழ்க்கை இருட்டில் தள்ளப்பட்டு கிடந்தது நாங்கள் நீதிமன்றத்திலும் போராடியும், தமிழக முதல்வர் அவர்களை சமீபகாலமாக சந்தித்து பலமுறை எடுத்துக்கூறியும் எங்கள் கோரிக்கையை அவர் முன் வைத்திருக்கிறோம்.

அந்த கோரிக்கையில்,
” 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு மக்கள் நல பணியாளர்கள் உடைய நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், மக்கள் நலப்பணியாளர்கள் குறித்து நீதிபதி சுகுணா அவர்கள் அறிவுரைபடி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது அரசு மற்ற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படும் எனவும், 50 வயதுக்கு மேற்பட்டு உடல்நிலை பாதிப்படைந்த பணியாளர் 60 வயதை கடந்தவர்களுடைய வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், 2011 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை எங்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும் எனவும், தமிழக முதல்வரிடம் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ” என கூறினார்.

மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்த செய்யப்பட்டபோது அவர்கள் கலைஞர்களின் செல்லப் பிள்ளைகள் என அனைவராலும் பாராட்டப்பட்டனர் ஆனால் அந்தப் பிள்ளைகள் இன்று வரை கேட்பாரற்று அனாதைகள் போல் அலைக்கழிக்கப்பட்ட கட்சி சார்பற்று தமிழகத்திலுள்ள அனைவரும் பார்த்து பரிதாபப்பட கூடிய அளவிற்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை இருட்டு அடிக்க செய்யப்பட்ட நிலையில் அவர்களுடைய வாழ்க்கையில் மிக விரைவில் தமிழக முதல்வர் ஒளி வீச செய்யப்போகிறார் என்பதை உணர்ந்து அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பீனிக்ஸ் பறவை போல அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுடைய கருணையால் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வர போகிறார்கள் என்பது உண்மை…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed