November 27, 2021

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் வெளியேற தடையாக உள்ள இடங்களை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பொழியும் சமயங்களில் ஏற்பட்டும் வெள்ளப்பெருக்கினால் அதன் கரையோர கிராமங்களான பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் தடைபடும் சூழல் சில ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது .

ஆகையால், திருவள்ளூர் மாவட்ட அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என்ற பட்டியலில் அத்திப்பட்டு புதுநகர் இடம்பெற்றுள்ளது. அந்தளவிற்கு அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்க கூடிய நிலையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு மற்றும் துணைத் தலைவர் கதிர்வேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் முறையிட்டு இருந்தனர்.

அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்திப்பட்டு புதுநகர் பகுதியை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கதிர்வேல் ஆகியோர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் ஆலோசனையின் பேரில், அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சூழ்ந்து இருக்க கூடிய மழை நீர் வெளியேறும் வகையில் தடுப்பு கரைகள் அமைக்கும் பணியை துவக்கி முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன்படி, தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்கி இடக்கின்றன, அந்த தேங்கிய மழை நீர் வெளியேறுவதற்காக அப்பகுதியில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பட்டமந்திரியில் தொடங்கி வல்லூர் வழியாக அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாக வெள்ள நீர் கடலில் கலக்கிறது. இங்கு ஏற்பட்டுள்ள தடைகளால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகாதவாறு முன்னெச்சரிக்கையாக தடை ஏற்பட்டுள்ள இடங்களை சரிசெய்து கரைகள் அமைத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது உடன் இருந்த அத்திபட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேலு அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தேங்கிக்கிடக்கும் மழை நீரை வெளியேற்ற நடைபெறக்கூடிய பணிகளையும் மேலும் தடைகளாக உள்ள இடங்களையும் சுட்டிக்காட்டி அவைகளால் அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் படும் அல்லல்களையும் எடுத்துக் கூறினார். அப்போது திமுகவின் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ் மற்றும் தமிழரசு, சேகர் அத்திப்பட்டு புதுநகர் கிராம நிர்வாகி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்விற்கு பின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இந்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மாவட்ட அளவில் வெள்ள அபாயம் உள்ள பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இங்கே ஒவ்வொரு மழை காலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் வேண்டுகோளை ஏற்று அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இப்பகுதியில் மழை நீர் சூழ்ந்து இப்பகுதி மக்கள் அவதிப்படாமல் இருக்க நிரந்தர தீர்வாக மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் அப்பணிகள் நிறைவேற்றபட்டுவிட்டால் இப்பகுதிக்கு மழைநீர் சூழும் அபாயம் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் ” என கூறினார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed