November 27, 2021

மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமம் மர்ம தேசமாக மாறி வருவதற்கு என்ன காரணம்…

1 min read
Spread the love

மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில், இன்று அடையாளம் தெரியாத ஒரு பெண் இறந்த கிடப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, இரண்டு அடி அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் முகமெல்லாம் சேறும் சகதியுமாக தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்ற நிலையில் ஒரு பெண் சடலமாக கிடந்தார்.

அந்தப் பெண் யார் என்று அக்கிராம மக்களிடம் போலிசார் விசாரணை செய்தபோது இறந்து கிடக்கும் பெண் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவரோ அல்லது அனுப்பம்பட்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவரோ இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத அந்த பிரேதத்தை போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊர் என்றும், அனுப்பம்பட்டு பகுதியில் வந்து அவர் இறந்து கிடைப்பதற்கான காரணம் என்ன? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திலும், ரயில் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள புதர் பகுதியிலும் ஆண் பெண் என்று பலர், அப்பகுதி மக்களுக்கு அறிமுகமில்லாத நபர்களாக இரவும் பகலும் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றனர். அதிலும் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள புதர் பகுதியில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட கூடியவர்கள் இப்பகுதியில் வந்து தினமும் நடமாடி வருகின்றனர்.

சமீபத்தில் கடந்த மாதம் கூட சென்னை கல்லூரியில் படிக்கக்கூடிய கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவர்களும் அவர்களுக்கு தொடர்பில் இருக்கக்கூடிய சமூக விரோத செயலில் ஈடுபட கூடிய இளைஞர்களும் கூட்டமாக செல்லியம்மன் கோயில் பகுதியில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கும் இங்கும் ஓடினர். அதனால் அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பீதியடைந்தனர்.

அதேபோல், கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட கூடியவர்களுடைய நடமாட்டங்கள் இருந்து வருகிறது என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரயில்வே உயர் அதிகாரிகளிடமும் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் எந்நேரமும் ஒரே ஒரு ரயில்வே போலீசாரையாவது காவலுக்கு இருக்க செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதற்க்கு காரணம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்களில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் அனுப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில் இறங்கி நடனமாடியும் இருப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே கடந்த சில வருடங்களாக அனுப்பம்பட்டு ரயில் நிலையம் பகுதி எப்போதும் ஒரு மர்மம் நிறைந்த பகுதியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையைப் போக்க அனுப்பம்பட்டு பகுதி மக்களுடைய நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரக்கூடிய ரயில் நிலையத்தில் நிரந்தரமாக ஒரு ரயில்வே போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதையும், அனுப்பம்பட்டு ரயில்வே கேட் அருகில் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகின்றனர். இதை நிறைவேற்றி கொடுத்தால் மட்டுமே அனுப்பம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் நிம்மதியாக அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல முடியும்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed