November 27, 2021

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் , பள்ளிக்கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், பணிநிரந்தர அரசாணை வெளியிட வேண்டுகோள்…

1 min read
Spread the love

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய சிறப்பு பாடங்களை நடத்த கடந்த 2012 ஆம் ஆண்டு 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப் பட்டார்கள். 2014 ஆம் ஆண்டில் ரூபாய் 2ஆயிரம், அடுத்து 2017ஆம் ஆண்டில் ரூபாய் 700, கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூபாய் 2300 என படிப்படியாக இவர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது.

இதனால் ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள். அதே சமயம் மரணம், பணி மூப்பால் ஓய்வு என 4ஆயிரம் ஆசிரியர்கள் இடம் காலியிடங்கள் ஆகிவிட்டது. தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகிறார்கள்.

11 வது கல்வியாண்டாக பணிபுரியும் இவர்களை திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கைபடி காலமுறை சம்பளத்தில் நிரந்தரம் செய்வார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 11ந்தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியில், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்து உள்ளார்.

இதனையொட்டி பள்ளிக்கல்வி அமைச்சரை சந்திக்கும் இடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் வரவேற்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தி நன்றி தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான செய்தியாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் இதனால் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டுகிறோம் என கூறியுள்ளார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed