January 18, 2022

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லையே… பட்டா திருத்தம் செய்து கொடுப்பதாக கூறி அலைக்கழிக்கும் கிராம நிர்வாக அலுவலர்…

1 min read
Spread the love

நாட்டில் உள்ள அனைத்து விதமான நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை , அவைகளின் மூலம் அரசு வரி வருவாயை பெறவேண்டி நிலங்களை தனி நபர்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக அவர்களுக்கு அரசு வழங்க கூடிய அடையாள ஆவனம் தான் பட்டா என்பது. அதை பயன்படுத்த கூடிய மக்களுக்கு அவர்களுடைய சொந்தமான வயல்வெளிகள் மற்றும் மனை பிரிவுகள் போன்ற முன்னோர்களுடைய சொத்துக்கள் அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு பரிவர்த்தனை செய்து கொள்ளவும், மற்றவர்களுக்கு விற்பனை செய்யவும் உரிமை உள்ளது. இப்படிப்பட்ட பட்டா ஆவணங்கள் காலம் காலமாக காகித கோப்புகளாக வருவாய் அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த விவரங்கள் 2012 – 13 ஆண்டுகளில் அனைத்தும் கணினி மயமாகும் விதமாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போது ஏற்கனவே பட்டா வைத்திருப்பவர்கள் விவரங்கள் பல விதங்களில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்து வந்தது. குறிப்பாக சர்வே எண், பட்டாதாரர் உடைய பெயர்கள், தகப்பனார் பெயர், அளவீடுகள் போன்ற பலவிதமான விவரங்கள் அவசரகதியில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அதனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களுடைய பட்டாவில் தவறுதலாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை திருத்துவதற்காக மக்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மக்கள் பட்டா திருத்தம் குறித்த பிரட்சனையில் அதிக அளவில் மன உளைச்சலுக்கும் பிரச்சனைகளுக்கும் இடையே வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டு அவதிப்பட கூடிய சூழ்நிலையை. மாற்ற வேண்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அவை தமிழக அளவில் உள்ள வருவாய் வட்டங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பட்டா திருத்தம் முகாம் தொடர்ந்து நடத்துவது எனவும், அதில் உடனுக்குடன் பட்டா திருத்தம் செய்து கொடுத்து மக்களுடைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்பதும் ஆகும். கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டும் அல்லவா என்பதை போல இந்த பிரச்சினையை இன்று வரை தமிழகத்தில் சரியாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

பொன்னேரி தாலுகாவில் அடங்கிய காணியம்பாக்கம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பக்தவச்சலம் (74) என்பவர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து அவர் கணியம்பக்கம் வந்து விவசாயம் செய்யும் பணியை சரிவர நடத்த முடியாததால் கடந்த 13 வருடங்களாக அந்த நிலத்தை தரிசாக விட்டுவிட்டார். இந்நிலையில் அவருடைய மகன் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருவதாலும் இந்த நிலத்தையும் எதிர்காலத்தில் பராமரிப்பது சிரமம் என்ற ஒரு காரணத்தினால் அவர் தனது நிலத்தை விற்க வேண்டி வேறு ஒருவருக்கு விலைபேசி விற்கக்கூடிய நிலையில் அவர் நிலம் பட்டா கணினி மயமாகும் போது ஏற்பட்ட தவறால், பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதற்காக அவர் காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சரிவர அலுவலகத்துக்கு வராததால், அவரது உதவியாளர் அங்கு இருந்திருக்கிறார். அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் கூறி பட்டா பெயர் திருத்தத்தை செய்து கொடுத்ததாக கூறியதை தொடர்ந்து அவரிடம் முதியவர் பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய மனுவை வழங்கி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனை கடந்த இரண்டு மாதங்களாக தீர்க்கப்படாத நிலையில், பக்தவச்சலம் அவர்கள் தனது பெயருக்கு உரிமை கூற கூடிய அனைத்து ஆவனங்களுடைய நகலையும், மனுவையும் கணினியில் பதிவேற்றம் செய்து உயரதிகாரிகள் உடைய பார்வைக்கு கொண்டு போகாதது தெரியவந்தது. இதற்கு காரணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவருடைய உதவியாளர் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் தான் என்பதும் தெரியவருகிறது.

மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முதல்வர் பட்டா திருத்தம் முகாம் என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறார். அதே போல் மாவட்ட ஆட்சியரும் தனது அன்றாடப் பணிகளுக்கு இடையே, பேரிடர் காலங்களில் இரவு பகலாக கண் விழித்து பணியாற்றுகிறார். வட்டாட்சியரும் மாவட்ட ஆட்சியரோடு சேர்ந்து இணையாக பம்பரமாக சுழன்று தன் கடமையை செய்து வருகிறார். அவர்களுக்கு இணையாக புதியதாக பணியில் இணைந்த இளைஞர்களாக இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் கடமையை உணர்ந்து சிறப்பாக பணியாற்றும் போது,

காணியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் போன்றவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பது யார்? கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்து, தனது தள்ளாத வயதிலும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் பெரியவர் பக்தவச்சலம் அவர்களுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பது யார்? தமிழக முதல்வர் எளிதாக முடித்துக் கொடுக்க வேண்டி நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சனை இரண்டு மாதமாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம் யார்? கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டும் என்பது உண்மை தானா…

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *