January 18, 2022

“சார், எங்க அப்பாவிற்கு திரும்ப எப்போது வேலை கிடைக்கும்” மக்கள் நலப்பணியாளர்கள் நிலை குறித்து பிள்ளைகள் விசாரிக்கும் கொடுமை …

1 min read
Spread the love

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 1990ம் ஆண்டு வேலை இல்லாத தமிழக இளைஞர்களுக்கு அவர்களுடைய உள்ளூரிலேயே வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியமிக்கப்பட்டவர்கள் தான், மக்கள் நலப் பணியாளர்கள் வெறும் 200 ரூபாய் சம்பளத்திற்கு சேவை மனப்பான்மையுடன் இருந்த இளைஞர்கள் எதிர்காலத்தில் தங்களுடைய பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் அடுத்த வந்த அதிமுக ஆட்சி அவர்களுடைய பணி நியமன உத்தரவை நீக்கி அவர்களுடைய பணி பறிக்கப்பட்டது. இதே நிலைமை 1990 லிருந்து 2011-ம் ஆண்டு வரை இவர்கள் மூன்று முறை பணி நியமனம் செய்யப்பட்டு, மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு பல கட்டங்களைக் கடந்த அந்த வழக்கின் விசாரனையில் கடந்த 2014ஆம் ஆண்டில் மக்கள் நலப் பணியாளர்கள் உடைய நியமனம் செல்லும் எனவும் அவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் , அப்போதும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பின்னர் அவருடைய மறைவுக்குப் பின்னர் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடியாது என்ற நோக்கத்தில் அடம் பிடித்துக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே தன்ராஜ் என்பவர் வழக்கு விசாரணையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனு செய்ததைத் தொடர்ந்து, இன்று மக்கள் நலப் பணியாளர்களுடைய வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவது குறித்து நல்ல முடிவை எடுக்க உள்ளனர் எனவும் அதற்காக சட்டபூர்வமான சில பணிகளை மேற்கொள்ள 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கு அடுத்த நான்கு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தமிழகத்தில் உள்ள 12,500 மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுடைய மனதிற்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நம்முடைய “நிழல் .இன்” இணையதள பக்கத்தில், “மக்கள் நலப் பணியாளர்கள் தமிழக முதல்வர் உடைய கருணையால் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர் பெற போகிறார்கள் “ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த மக்கள் நலப்பணியாளர்கள் மட்டுமில்லாமல் மக்கள் நலப்பணியாளர்களுடைய குடும்பத்தினரும் பலர் நம்மிடம் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் எப்போது எங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்று பல மக்கள் நலப்பணியாளர்கள் விசாரித்தார்கள்.

அதில் குறிப்பாக சேலத்தை சேர்ந்த ஒரு மக்கள் பணியாளர் நம்மை தொடர்பு கொண்டு, இந்த மகிழ்ச்சியான சம்பவம் மிக விரைவில் நடந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என பேசினார். அப்போது அவருடைய போனை வாங்கி, 75 வயதுடைய அவருடைய தாயார் பேசுகையில், ஐயா என் மகனுக்கு மீண்டும் எப்போது வேலை கிடைக்கும் என்று கேட்டார். அதேபோல் பல மக்கள் நலப் பணியாளர்கள் உடைய குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதில் குறிப்பாக வேலூரை சேர்ந்த ஒரு இளம்பெண், ” எங்கள் அப்பாவிற்கு மீண்டும் எப்போது வேலை கிடைக்கும் ” என கேட்டது கொடுமையாக இருந்தது. அதற்கு நீங்கள் யார் என்று நாம் கேட்டதற்கு, “நான் இளங்கலை பட்டபடிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறேன். எ எங்கள் தந்தை ஏற்கனவே மக்கள் நல பணியாளராக பணியாற்றினார். அவருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என நமது முதல்வர் அறிவித்து இருந்த நிலையில் , மூன்று மாதங்களுக்கு முன் உங்களுடைய கட்டுரையை படித்தேன். எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தோம். இந்நிலையில் நாளை வழக்கு முடிவு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காக உங்களை நான் தொடர்பு கொண்டேன் ” என கூறினார்.

என் பிள்ளைக்கு மீண்டும் இப்போது வேலை கிடைக்கும் என 75 வயது பாட்டியும், என் தந்தைக்கு எப்போது வேலை கிடைக்கும் என பட்டப்படிப்பை முடித்த ஒரு பெண்ணும் கேட்பது மிகவும் கொடுமையாக உள்ளது. உலகத்தில் இப்படி ஒரு பணி நியமனத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. ஒரே பணிக்கு மூன்று முறை நியமனமும் மூன்று முறை பணி நீக்கமும் சந்தித்தது இந்த மக்கள் நலப்பணியாளர்களாக தான் இருப்பார்கள். நான்காவது முறையாக நியமனம் செய்யபட போகின்ற நலப் பணியாளர்கள் பெரும்பாலும் பலர் ஐம்பது வயதை கடந்தவர்களாக தான் இருக்க போகிறார்கள் அவர்களை நான்காவது முறையாக தமிழக அரசு நியமனம் செய்யும் போது, எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

50 வயதுக்கு மேல் உள்ள மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவதை விட அவர்களுடைய பிள்ளைகளுக்கு அப்பணியை வழங்கினால், அது அவர்கள் இவ்வளவு காலம் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலனாக இருக்கும். ஆகவே பெரும்பாலுமான மக்கள் நலப் பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் 50 வயதுக்கு மேற்பட்ட மக்கள் பணியாளருக்கு பணி வழங்காமல் அவருடைய வாரிசுகளுக்கு பணியை வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும், தமிழக முதல்வர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும் எதிர்நோக்கி உள்ளனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *