பூச்சி மருந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவி பரிதாப உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஸ்வினி பூச்சி மருந்து குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்துள்ளார். மயங்கிய மாணவியை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன?

பூச்சி மருந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவி பரிதாப உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம், மல்லிகைபட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் அஸ்வினி(17). அருகில் உள்ள மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று காலை அஸ்வினி பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மயக்கம் அடைந்தார்.

உடனே சகமாணவிகள் அவரிடம் என்னவாயிற்று, உடல்நிலை சரியில்லையா என்று கேட்டபோது, “நான் வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தேன். அதனால், மயக்கம் வருகிறது.” என அஸ்வினி கூறியுள்ளார். மாணவி அஸ்வினி கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனே அவரை காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சென்றுள்ளனர். 

காணை அரசு ஆரம்ப மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு,மாணவி அஸ்வினியை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி அஸ்வினியின் உயிர் பிரிந்தது. 

பின்பு,வழியில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.மாணவியின் தற்கொலைச் சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மாணவி அஸ்வினி ஒருவரை காதலித்ததாக தெரியவந்துள்ளது. மாணவியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், சங்கராபுரம் ஏந்தல் கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு மாணவி அஸ்வினியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்து நிச்சயம் செய்ய இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளி மாணவியின் புத்தகப்பையில் சில கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதங்களை வைத்து பார்க்கும் போது மாணவியின் மரணம் தற்கொலைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகன்யா முரளிதரன் - செய்தியாளர், விழுப்புரம்