கடலுக்குள் 60 அடி ஆழத்தில் செஸ் விளையாடி அசத்திய நீச்சல் பயிற்சி நிறுவனம்!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுக்குள் 60 அடி ஆழத்தில் செஸ் விளையாடி அசத்திய ஸ்கூபா வீரர்கள்!

தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஜுலை 28ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சர்வதேச செஸ் போட்டி வருகிற 10 தேதி நிறைவடைகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான செஸ் விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் கடந்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வண்ணம் பல்வேறு வித்தியாசமான முயற்சிகள் செய்து வருகின்றனர் செஸ் விளையாட்டு ஆர்வலர்கள்.
இந்த நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரவிந்த் ஸ்கூபா நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ, ஒரு புதுவிதமான முயற்சியை செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நாயகனான ‘தம்பி’ உடை அணிந்து, தனது ஸ்கூபா பள்ளி மாணவர்களை வைத்து நீலாங்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் ஆழ் கடலுக்குள் சென்று அங்கே 60 அடி ஆழத்தில் ஸ்கூபா உடை அணிந்து மாணவர்கள் செஸ் விளையாடி செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படியான ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.