செங்கம் அருகே மகன் காதலித்ததால் குடும்பத்துடன் எரித்துக் கொலைசெய்ய முயற்சி : வீட்டை இழந்து நிற்கும் இருளர் குடும்பம்

தனது மகன் ஒரே சமூகத்தைச் சேர்ந்த எதிர்வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், பெண்ணின் உறவினர்கள் காதலித்த இளைஞரின் வீட்டை கொளுத்தி பெற்றோர்களை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கம் அருகே மகன் காதலித்ததால் குடும்பத்துடன் எரித்துக் கொலைசெய்ய முயற்சி : வீட்டை இழந்து நிற்கும் இருளர் குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு பரங்கிமலை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  அங்கு இருளர் இனத்தை சேர்ந்த கணேசன் - தனம் இவர்களின் மகன் மணிகண்டன் வயது 23. இவரும் எதிர் வீட்டில் வசித்து வரும் இதே சமுகத்தை சேர்ந்த ரமேஷ் - மாரி தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது காதலியை அழைத்துச் சென்ற, மணிகண்டன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தன் மகளை அழைத்து வந்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்துடன் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இதனால் பயந்து போன மணிகண்டனின் குடும்பத்தினர், மணிகண்டனையும் அவரது காதலியையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது,  மணிகண்டன் மற்றும் அவரின் தாய் தந்தை ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர், பெண்ணின் உறவினர்கள். அதனை அடுத்து அடி தாங்க முடியாமல் ஊரை விட்டே ஓடியுள்ளார் மணிகண்டன். அவரின் நிலை என்ன என தெரிந்துகொள்ள முடியாமல் தவித்து வரும் பெற்றோர்களுக்கு, பெண்ணின் உறவினர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததால் உயிர் பயத்தில் பெரும் அச்சத்துடன் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கணேசனும் தனமும் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கூரை வீட்டை  தீ வைத்து கொளுத்தி உள்ளனர். கதவு இல்லாத வீடு என்பதால் உரங்கி கொண்டிருந்த  கணேசனும் அவரது மனைவி, தாய் பேரக்குழந்தை அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஒடி வந்ததால் உயிர் தப்பினர்.

இரவில் வீட்டிற்க்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த  மேல் செங்கம் காவல்துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். ஒருபுறம்  மகன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என தெரியாமல் இருக்கும் நிலையில், தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில் கணேசனின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

- செய்தியாளர் மூர்த்தி, திருவண்ணாமலை
நிழல்.இன் - 8939476777