கடலூர் அரசு பள்ளி ஆசிரியை பத்மஸ்ரீ என்பவருக்கு நல்லாசிரியர் விருது : மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் வழங்கி கவுரவிப்பு!

மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும் ஊக்கத்தையும் அளித்து நல்லாசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் பத்மஸ்ரீக்கு, சென்னையில் நடந்த விழாவில் மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.

கடலூர் அரசு பள்ளி ஆசிரியை பத்மஸ்ரீ என்பவருக்கு நல்லாசிரியர் விருது : மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் வழங்கி கவுரவிப்பு!

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்தவர் இரா.பத்மஸ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியை பத்மஸ்ரீக்கு தனது சிறு வயது முதல் தன்னுடன் பழகும் தோழிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பக்குவம் வீற்றிருந்து செயல்படுத்தி வந்துள்ளார்.

தான் படித்து மற்ற குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதின் மூலம் அவர்களும் மற்றவர்களுக்கு உதவிகரமாக விளங்க முடியுமென்ற எண்ணத்துடனேயே தனது கல்வியை பயின்று ஆசிரியை பணியை தேர்வு செய்து பணி புரிந்து வருகிறார். 

அவரது திருமணத்திற்குப் பிறகு தனது குழந்தை சஞ்சனா மட்டுமல்லாது பள்ளியில் பயிலும், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இலவசமாக பிரியாணி விருந்துடன் டியூசன் எடுத்தல், கருணை உண்டியல்-பசுமை திட்டம், ஆசிரியர் - மாணவர் உறவு பெட்டி, யோகா பயிற்சி, போட்டா - போட்டி பயிற்சி வகுப்பு, இலக்கிய மன்றம் - கலந்துரையாடல் பயிற்சி, நாடக-நடன பயிற்சி வகுப்பு, மாதவிலக்கு விழிப்புணர்வு வகுப்பு மற்றும் மாதவிலக்கு சம்மந்தமான செய்திகளை புத்தக வடிவில் தயாரித்து மாணவியர் செல்வங்களுக்கு வழங்கி விளக்கி கூறுவது என செயல்பட்டு வருகிறார்.

மாணாக்கர்களின் கற்பனை திறனை வளர்க்கும் ஓவிய வகுப்பு, களிமண் பொம்மைகள் செய்வதற்கு பயிற்சி வகுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி, பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி விளையாட்டும், கும்மியடித்தல் பயிற்சி வகுப்பு, ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி, அஞ்சலகத்திற்கோ, வங்கிக்கோ சென்று படிவங்கள் நிரப்புதல் பயிற்சி, மாதத்தில் முழு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல், வீரத்தை வளர்க்கும் கராத்தே, சிலம்பம், நுஞ்சாக் பயிற்சி அளித்தல், கேரம்போர்டு விளையாட பயிற்சி வகுப்பு, நேரத்தை கணக்கிடுதல் பயிற்சி வகுப்பு, விதை பென்சில் மூலம் ஓவியம் வரைய பயிற்சி வகுப்பு, டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தி நிலவேம்பு கசாயம் வழங்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி, நாடக, நடன பயிற்சி வகுப்பு, உறவினை ஊக்கப்படுத்துதல், கடிதம்-வாழ்த்து அட்டை எழுதுவதற்கு இளந்தளிர்களுக்கு பயிற்சி வகுப்பு, பணத்தின் (நாணயம்) மதிப்பினை அறிதல் பயிற்சி வகுப்பு, கொரோனா காலத்தில் அனைத்து மாணாக்கர்களுக்கும் முக கவசம், கசாயம் வழங்கி சமூக இடைவெளியுடன் டியூசன் எடுத்தல், கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்குதல் என எண்ணற்ற சேவைகளை செய்வதை அடுக்கிக் கொண்டே இருக்கலாம்.

சேவை மங்கை பத்மஸ்ரீ க்கு கனிந்த இதயங்கள் சார்பில் பெஸ்ட் ஆசிரியர் விருது, திருநெல்வேலி மாவட்டம் லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது, கரூர் சக்சஸ் நூலகம் சார்பில் சக்சஸ் அவார்டு, இண்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டி ஆப் ஜெர்மனி சார்பில் டாக்டர் பட்டம், திருச்சி தமிழ் பண்பாட்டு கலைக்கழகம் சார்பில் இராஜ கலைஞன் விருது, சென்னை மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பில் நல்லாசிரியர் விருது, செங்கல்பட்டு மாவட்ட டாக்டர் அப்துல் கலாம் கல்வி - பசுமை அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் விருது, பாண்டிச்சேரி மாவட்டத்தில் தன்னிகரற்ற தமிழன் விருது, சேலம் மாவட்டத்தில் அப்துல்கலாம் லட்சிய விருது, கள்ளக்குறிச்சி ஆர்.கே .எஸ்.கல்வி நிறுவனம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை திருமகள் விருது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தாரகை மாத இதழ் சார்பில் சிறந்த ஆசிரியர் காமராஜர் விருது, பாண்டிச்சேரி வள்ளுவர் விருது, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் டாக்டர் அம்பேத்கர் விருது, மதுரையில் ஏடிஜிபி செந்தாமரைக்கண்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

இதனடிப்படையில், மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவில், கௌரவ விருந்தினர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் கே.என்.பாஷா, லயன் சி.எஸ்.பாலமுருகன் உள்பட மண்டல தலைவர் லயன் ஆர்.மகேந்திரன், மாவட்ட தலைவர் லயன் ஏ.பி.சுந்தரமூர்த்தி, வட்டத் தலைவர் லயன் R.சுரேஷ்பாபு ஆகியோர் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை, சேவை மங்கை இரா.பத்ம ஸ்ரீ உள்பட ஆசிரியர் - ஆசிரியைகளை கவுரவித்து நல்லாசிரியர் விருது வழங்கி ரோஜா மலர் மாலை அணிவித்து, ரூ.10, ஆயிரத்துக்கான பரிசுப்பொருட்களும் வழங்கி கவுரவித்தனர்.

விருது பெற்றவர்களை லயன் டாக்டர் எஸ்.இளங்கோ, லயன் முரசொலி சிங்காரம், லயன் எம்.பன்னீர்செல்வம், லயன் ஜி.மோகன் வாழ்த்தி பேசினர். சேவைகளுக்கு நிகராக விருதுகள் பெற்று திகழும் அரசு பள்ளி ஆசிரியை - சேவை மங்கை பத்மஸ்ரீயை பள்ளியினர், கல்வித் துறையினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணாக்கர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் - 8939476777