எனக்கு சமுக வலைத்தளங்களில் பயணிக்க கற்று கொடுத்தவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்தான் - தொல்.திருமாவளவன் புகழாரம்!
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தினுடைய (TUJ) 20வது மாநில மாநாடும், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IUJ) பத்தாவது மாநாடும், 29ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை சென்னையில் நடைபெற்று வருகிறது.

29ம் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில், விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களுடைய தீவிர முயற்சியால் 1990 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இன்று வரை மிகவும் சிறப்புடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் இருக்க கூடிய பத்திரிக்கையாளர்களுக்காக பணியாற்றி வருகிறது. அதற்கு காரணம் தற்போது அந்த சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் தான். இவர் அவருடைய தகப்பனார் விட்டு சென்ற பணியை மிக சிறப்புடன் செய்து வருகிறார்.
நான், அதிகம் புத்தகம் வாசிக்க கூடிய பழக்கத்தை உடையவன் என்றாலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிக அளவில் வலம் வர துவங்கிய பிறகு, நான் அதனுடைய பயன்பாட்டை அறிந்து கொள்வதற்கு தோழர் சுபாஷ் அவர்கள் தான் காரணம். எனக்கு சமூக வலைத்தளங்களுடைய முக்கியத்துவத்தை எடுத்து கூறியும், அதில் அதிக அளவில் மக்களுடன் தொடர்பில் இருக்க கூடிய வாய்ப்பு உள்ளதை விளக்கியும், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயன்பாட்டினை எனக்கு அறிமுகப்படுத்தி, அதில் இருக்க கூடிய நிறை குறைகளை எனக்கு தெளிவாக விளக்கி, என்னை சமூக வலைதளங்களில் பயணிக்க செய்தவர் தோழர் சுபாஷ் அவர்கள்தான்" என கூறினார்.
மேலும் "அவரை நான் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் போது அவருடன் நான் அதிக அளவில் நேரத்தை செலவழிப்பேன். அதற்கு காரணம் அவர் அதிக அளவில் வாசிக்கும் பழக்கத்தை உடையவர் மேலும், அவர் அனைத்து தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயல்பட்டாளர்கள் என அனைவரிடமும் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். ஆகவே எந்த ஒரு விஷயம் என்றாலும் அவருடைய பார்வை தெளிவானதாக இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் யாரிடமும் நேரடியாக வெளிப்படையாக பேச கூடியவர். ஆகவே, அவரை சந்திக்கும் போது நான் அதிக அளவில் அவருடன் நேரத்தை செலவு செய்யக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன். அப்படிப்பட்டவர் வழிநடத்த கூடிய இந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மிகவும் சிறப்புடன் வழி நடத்தப்பட்டு வருகிறது. 20 வது மாநில மாநாட்டை கொண்டாடி வரும் இந்த நேரத்தில், இந்த பத்திரிக்கையாளர் சங்கத்தில் இருக்க கூடிய பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும், தோழர் சுபாஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." என கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேலவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் பணியாற்றி வரக்கூடிய பத்திரிகையாளர்களுடைய நலனுக்காக சிறப்புடன் செயலாற்றி கொண்டிருக்கும் இந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்திற்கும், அதை மிகவும் சிறப்பாக வழி நடத்தி கொண்டு இருக்க கூடிய மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். பத்திரிக்கையாளர்களுடைய நலனுக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் தயாராக இருக்கிறேன்." என கூறினார்.
முன்னதாக, காலையில், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்க பொது செயலாளர் பல்வந்தர் சிங் ஜம்மு ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு நர்சரி பள்ளி, பிரைமரி பள்ளி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ் பள்ளிகளின் சங்கத் தலைவரும் ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவருமான கனகராஜ் அவர்கள் பத்திரிக்கையாளர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் டி.எஸ். ரவிந்திரதாஸ் அவர்களுடைய உருவ படத்தை, திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் முன்னிலையில், தென்னிந்திய திரைபட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், திரைப்பட இயக்குனருமான கே.பாக்யராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.
அப்போது உரையாற்றிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்கள் "தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், என் உடன்பிறவா சகோதரருமான டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள் இந்த சங்கத்திற்காக அதிக அளவில் தனது வாழ்நாளை செலவழித்து இருக்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவருடைய புதல்வரும், என்னுடைய சிறந்த மாணவருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் இந்த சங்கத்தை சிறப்பாக வழி நடத்தி கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையின் பயணத்தை தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக தன்னுடைய திரைப்பட தொழிலை கூட விட்டு விட்டு, அவருடைய தந்தையின் பணியை செய்ய துவங்கிவிட்டார். அதில், அவர் தந்தையை போலவே இவரும் எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் இந்த சங்கத்தை சிறப்புடன் வழிநடத்து வருகிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது" என பேசினார்.
திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் உரையாற்றுகையில், "தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கும் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் மிகவும் திறமைசாலி, புத்திசாலி என்பது எனக்கு நன்றாக தெரியும். காரணம் என்னுடைய திரைப்பட தொழிலிலும், பத்திரிக்கை தொழிலும் அவர் என்னுடன் பயணித்து இருக்கிறார். அவருடைய உழைப்பின் மீதும், திறமையின் மீதும் எனக்கு அதிக அளவில் நம்பிக்கை உள்ளது. எனக்கு எந்த விதமான சந்தேகம் ஏற்பட்டாலும், குழப்பங்கள் ஏற்பட்டாலும் நான் தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபர் சுபாஷ் அவர்கள் தான். அவர் அந்த பிரச்சினை குறித்து நீண்ட ஒரு விளக்கத்தை எனக்கு அளிப்பார். அப்படிப்பட்ட அதிக உலக அறிவு படைத்தவர், அதிகம் புத்தகம் படிக்க கூடிய பழக்கத்தை உடையவர். அவரும், அவர் வழி நடத்த கூடிய இந்த சங்கமும் பல படிகள் வளர்ச்சிகளை காண வாழ்த்துகிறேன்." என கூறினார்.
29 ம் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சிறந்த சமூக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
- செய்தியாளர் பூர்ணவிஷ்வா
நிழல்.இன் / 8939476777