வேதிப்பொருட்களால் செய்யபட்ட வினை கொடுக்கும் விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கவிடாதீர்கள்!

உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர், தாங்கள் பலவிதமான தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் விநாயகரை அனைத்து தெய்வங்களுக்கும் முன்பாக முன்னிலைபடுத்தி முதன்மையாக வணங்குவது வழக்கம். இந்து மதத்தினர் ஒவ்வொருவரும் ஒரு கடவுளை தங்கள் இஷ்ட தெய்வங்களாக ஏற்று கொண்டு வழிபாடுகள் நடத்தினாலும், அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வழிபடும் ஒரே கடவுள் விநாயகர்தான்.

வேதிப்பொருட்களால் செய்யபட்ட வினை கொடுக்கும் விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கவிடாதீர்கள்!

விநாயகரின் வழிபாடுகளில் மிக முக்கியமானது விநாயகர் பிறந்த நாளாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், சந்திரனுக்கு சித்தியை வழங்கியது போல், கிருஷ்ணரும் சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து தனக்கு நேர்ந்த சங்கடங்களில் இருந்து நிவர்த்தி பெற்றதால், சங்கட சதுர்த்தியும் மக்களிடம் மிக முக்கிய வழிபாடுகளாக கடைபிடிக்கபட்டு வருகிறது. அதிலும், விநாயகரின் பெயரால் கொண்டாடபடும் விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் மிக விமர்சயாக  கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது வடமாநில மக்களின் குடும்ப விழாவாகவும் உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் விநாயகரை வைத்து வணங்குகிறார்கள்.


சுதந்திர போராட்ட காலத்தில், இந்துமதத்தின்பால் ஈர்ப்பு கொண்ட, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், விநாயகர் சதுர்த்தியின் போது, ஒவ்வொரு  ஆண்டும் பொதுமக்களிடையே தேச பற்றுதலை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாட மக்களுக்கு ஊக்கம் அளித்தார். வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று, வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்களுடன் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு அன்னதானங்களையும், சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இந்த கொண்டாட்டங்களின் போது வழங்குவார்கள்.


அதேபோல், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சயாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விழா கொண்டாடுவதில் உள்ள ஒரு குறிப்பிட்ட நோக்கம் என்னவென்றால், மழை காலத்திற்கு முன்பு வரக்கூடிய இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளான குளங்கள் மற்றும் குட்டைகளில் களிமண்களை எடுத்து விநாயகர் சிலைகளை செய்து அதை ஒவ்வொரு வீட்டிலும் வைத்து, விழாவை கொண்டாடிய பிறகு இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து அந்த சிலையை மண் எடுத்த அதே நீர்நிலைகளான குளம் மற்றும் குட்டைகளில் போட்டுவிடுவது வழக்கம். இந்த மாதிரியான  நிகழ்வுகளை நம்முடைய முன்னோர்கள் வடிவமைத்ததின் நோக்கம் என்னவென்றால், தொடர் மழைக்காலத்திற்க்கு முன்பாக, செப்டம்பர் மாதத்தில் நம்முடைய நீர்நிலைகளை தூர்வாரும் விதமாக, நிலத்தடிக்கு நீர் செல்லவிடாமல் குளங்களின் அடி பகுதியில் படிந்திருக்கும் களிமண்களை எடுத்து அதில் விநாயகர் சிலையை செய்தால், நீரை பூமிக்குள் ஈர்க்க கூடிய சவுடு மண் வெளியில் தெரிவதுடன் சில தினங்களில் அது நன்கு உலர்ந்து இருக்கும் நிலையில், அப்போது பெய்யும் மழையால் அங்கு சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும்.


இந்நிலையில், விநாயகர் சிலையை விநாயர் சதுர்த்தி கொண்டாடிய பிறகு, இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலை நன்றாக இறுகிய நிலையில், கல் போல் உறுதியாக மாறிய  அந்த சிலையை, மண் எடுக்கப்பட்ட  அதே நீர்நிலையில் சிறிய அளவில் தேங்கி இருக்கும்  நீரில் போடுவதன் மூலம் இறுகிய நிலையில் இருக்க கூடிய அந்த விநாயகர் சிலை அடுத்த வரகூடிய அக்டோபர், நவம்பர் தொடர் மழை காலங்களில் அந்த நீரில் கரைந்து மீண்டும் படிவமாக படிந்து விடுகிறது. அந்த நீர்நிலைகளில் மணல் தன்மையுடன் இருக்கும் சவுடு மண் மூலம் போதுமான அளவிற்கு பூமிக்கடியில் நிலத்தடி நீர் உறிஞ்சபட்ட பிறகு தண்ணீர் தேங்கி நின்றுவிடுகிறது. இப்படி சமூக அக்கறையுடன், தொடர் மழை காலங்களுக்கு முன்பாக வர கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவை  பயனுள்ள வகையில் நம் முன்னோர்கள் திட்டமிட்டு, தங்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில்  மக்களின் தேவையான  நீர் ஆதராங்களை பெருக்கும் வகையில் இவ்விழாவை அறிவுப்பூர்வமாக கொண்டாடி உள்ளனர்.

இப்படி  சமூக அக்கறையுடன்  கடவுள் பெயரால்  நடத்தப்படும் ஒரு கோலாகல கொண்டாட்டத்தை, கடந்த பல ஆண்டுகளாக ஒரு சில சுயநலவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மதவெறியை தூண்டும் வகையில்,  விநாயகரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். விநாயகர் சிலைகளை ஒவ்வொரு ஊரிலும் வைத்து கொண்டாடியது போதாது என, சமீப காலங்களாக வீதி, வீதிக்கு விநாயகர் சிலையை வைத்து குடி போதையில் கூத்தடிக்கின்றனர் என்பது தான் கொடுமை.

இந்த கொண்டாட்டத்தில் இளைஞர்களை திரட்டும் சுயநலவாதிகள் அவர்களுக்கு ஆன்மீக கருத்துகளையும், நல்ல ஒழுக்கத்தையும் போதிக்காமல், அவர்களை போதையில் பயணிக்க செய்வதுடன், மூளை சலவை செய்து மதவெறியையும் ஏற்றிவிடுகின்றனர். இளைஞர்களை சீரழிக்கும் இப்படிபட்ட சுயநலவாதிகளை அந்த விநாயகர் தான் கேள்வி கேட்க வேண்டும்.

மேலும்,  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு பிறகு அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது குறித்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அரசு, சில வழிகாட்டு  விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், விநாயகர் சிலைகள் கண்டிப்பாக களிமண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என உறுதிபட கூறப்பட்டுள்ளது. மேலும், பைபர், தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக்காளான வேதி பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்யக்கூடாது எனவும், அப்படி செய்தால் அவைகளை நீர்நிலைகளில் கரைப்பது சட்டவிரோதம் எனவும், அப்படி அந்த செயலில் ஈடுபடுவோர் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


ஆனால், விநாயகர் சிலைகளை செய்யக்கூடிய மதவாதிகள், அரசினுடைய எந்த எச்சரிக்கையும் காதில் கேட்பது இல்லை, ஒவ்வொரு வருடமும் அரசு இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அரசு சொல்லும் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் தான் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. ஆகவே, பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


 பொது மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஊர்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு விநாயகர் சிலைகளை அரசின் வழிகாட்டி முறைப்படி களிமண்ணால் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே நீர்நிலைகளில் கரைப்பதற்கு மக்கள் அனுமதிக்க வேண்டும். அரசினுடைய வழிகாட்டு முறைகளை கடைபிடித்து அதன்படி செய்யப்படாத விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க கூடாது என்பதை மக்கள் உணர்ந்து, சமூக அக்கறையுடன் உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

- G.பாலகிருஷ்ணன், ஆசிரியர், நிழல்.இன்
தொடர்பு எண் : 8939476777