ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மக்களிடம் கருத்து கேட்பதை கொச்சைப்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவு படி தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேலி செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மக்களிடம் கருத்து கேட்பதை கொச்சைப்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், "தமிழகத்தில் போதை பொருட்களை விற்பவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும். இதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டுமா என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேலி செய்து உள்ளார். 

நாங்களாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை. நீதிமன்றம் சொன்னதன் அடிப்படையில் தான் கருத்து கேட்டுள்ளோம். அவர் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கருத்து கேட்டு முறையாக இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தால், ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம்.

நாங்கள் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும்." என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவரிடம், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சிலர் நடிகர்கள் நடிப்பது குறித்து கேட்டபோது இதுகுறித்து "சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்" என காட்டமாக பதில்  தெரிவித்தார்.