நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நடத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா
நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நடத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா
சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. விளிம்பு நிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது இந்த டிரஸ்ட். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூசன், இலவச சதுரங்கப் பயிற்சி, சாலையோர முதியோருக்கு உணவளிக்கும் "பசியில்லா சேலம்", ஏழை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச பிசியோதெரபி மையம், மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப சக்கர நாற்காலி, ஊன்றுகோல் வழங்குதல் மற்றும் பார்வையற்றவர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல் ஆகிய அறப்பணிகளை பத்தாண்டுகளாக செய்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா விடுமுறைக்குப்பின் புதிய கல்வியாண்டில் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள், தேர்வு அட்டைகள் ஆகியவை வழங்கி, வரும் கல்வியாண்டில் நன்கு படிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வமைப்பின் பிசியோதெரபி மையத்தில் நடைபெற்றது.
நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தலைவர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு பணிகளை செயலாளர் மோகன், பொருளாளர் சங்கர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் இணைந்து செய்திருந்தனர். இந்த இனிய நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் சோனா கல்லூரியின் இயந்திரவியல் ஆசிரியர் ஜெயக்குமார், கவிஞர் சேலம் சீனிவாசன், திருப்பூர் கவிதாயினி லதாஹரி , தொழிலதிபர் ஹரிராம் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர் சேலம் சீனிவாசன் பேசும்போது, "நான் நம்பிக்கை வாசலின் அறப்பணிகளோடு நான்காண்டுகளாக தொடர்புள்ளவனாக இருக்கிறேன். இதனுடைய செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது.
மாணவர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்ள என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. அதாவது, நமக்கு படிக்காமலேயே என்னவொரு திறமையிருந்தாலும், இன்றைய சமுதாயத்தில் கல்வி என்பது ஒரு மனிதனுக்கான இனிஷியல் போல பார்க்கப்படுகிறது. படிக்காமலே சாதித்த காமராஜர் ஐயா போல பலர் இருக்கிறார்கள். ஆனாலும், அந்த காலகட்டத்தில் மக்கள் பார்த்த பார்வை இப்போது இல்லை. எனவே, நன்றாக படியுங்கள்!" என்று பேசினார்.
நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தலைவர் கவிஞர் ஏகலைவன் பேசும்போது, "மாணவர்களுக்கு இரண்டு ரகசியங்கள் சொல்லித்தருகிறேன். அவைகளை உங்கள் வாழ்க்கையில் எல்லா காலகட்டங்களிலும் பயன்படுத்தி வெற்றியடையுங்கள்..
*இந்த நிமிடத்தில் வாழுங்கள்!*
விளையாடும்போது நன்றாக விளையாடுங்கள். படிக்கும்போது முழுமனதுடன் படியுங்கள்.
*நேரத்தை வீணாக்காதீர்கள்*
நேரம் என்பது அருமையான மூலப்பொருள். அதை அன்பாகவோ, பொருளாகவோ, பணமாகவோ, மரியாதையாகவோ, வெற்றியாகவோ எதுவாக வேண்டுமானாலும் மாற்றலாம். நான் கைவிடப்பட்ட முதியோரை பாதுகாக்கும் முதியோர் இல்லத்திற்காக செலவிடப்போகிறேன். நீங்கள் கல்வியாக உருமாற்றுங்கள்!" என்று பேசினார்.
இந்த நிகழ்வில் திரளான அரசுப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.