தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் மதவாதிகளின் கைப்பாவையாக செயல்படுகிறாரா? தமிழக ஆளுநர்!

மனுதர்மத்தை தமிழக மக்கள் ஏற்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கூறியிருப்பதன் பின்னணி என்ன? திராவிட சித்தாந்தத்தால் கட்டியமைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அது சாத்தியமா? பார்ப்பன சமூகத்தில் பிறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே திராவிட அரசியலை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்த மண் இது. இதில் மதவாதிகளின் அரசியல் எடுபடுமா? முன்னோர்களின் மன்னர்களின் பார்ப்பன அடிமை ஆட்சிமுறை, இப்போது தமிழகத்தில் சாத்தியமாகுமா?

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் மதவாதிகளின் கைப்பாவையாக செயல்படுகிறாரா? தமிழக ஆளுநர்!

மனுஸ்மிருதி இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி கூறும் நூல். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2,685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. 

இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார், 1794-ல் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்னர் மீண்டும் 1882-ல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார். இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழிக்கு கொண்டுவந்தார். இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்தி  கூறும் ஒரு சட்ட புத்தகமாகவே கருதபட்டது. இந்தியாவில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. 

வெள்ளையர் ஆட்சிகாலம் வரை இந்த மனுஸ்மிருதி என்னும், “மனு தர்ம சாத்திரம்” என்பது இந்து மதத்திற்கு ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக இருந்தது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு, இந்தியாவில் ஆட்சி செய்த இஸ்லாமியர்களும், வெள்ளையர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தர்ம சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.

மேலும், இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்ககால அரசர்கள் பெரும்பாலும், இந்த மனு தர்ம வழிமுறையை பின்பற்றி அதன் அடிப்படையில் தான் தங்களின் ஆட்சிமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும்  அமைத்து கொண்டனர்.

அதன்படி, இந்து மதத்தில், மனுதர்மத்தின்படி இந்து மக்களின்  பிறப்புகளை வகைப்படுத்தி பலவிதங்களில் ஏற்றத்தாழ்வுகளுடன் அறிவித்திருப்பது இன்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மனு சாஸ்திரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள படி இன்றைய நடைமுறை வாழ்க்கையில் யாரும் வாழவில்லை என, ஒரு சாரார் கூறினாலும், தற்போதைய தமிழக ஆளுநராக இருக்க கூடிய ஆர்.என்.ரவி அவர்கள் சமீபத்தில் பேசும்போது, “இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகம் வளர சனாதன தர்மம் ஒரு வழி முறையாக இருக்கும்.” என்று சொல்லி இருக்கிறார்.

மனு தர்மத்தின் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என அவர் பேசியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள், மனு சாஸ்திரத்தில் மனிதர்களுடைய பிறப்புகள் குறித்து விமர்சனம் செய்து, ஆளுநரின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார். அதன் பிறகு இந்த மனு சாஸ்திரம் குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்தது.

நமது ஆளுனர் அறிந்திருக்கமாட்டார்... இந்த தமிழ் மண்ணில், அய்யா ராமானுஜர் அவதரித்து வைணவ மதத்தை பரப்பிய போதே, இந்த மண்ணில் சமூக நீதியையும் சேர்த்து வளர்த்தார் என்பதையும், ராமானுஜர் தாழ்த்தபட்டவர்களை “திருக்குலத்தார்” என அழைத்ததும், தன் உயிர் போய்விடும் என மற்றவர்கள் மிரட்டிய போதும், “தாழ்த்தப்பட்டவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை கற்று கொண்டு சொர்க்கம் செல்லவேண்டும்” என கூறி அவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை அறிய செய்தார் என்பதையும், நமது ஆளுநர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லைதான்.

அய்யா ராமானுஜர் மட்டுமல்ல... அய்யா வைகுண்டர் மற்றும் வள்ளலார் போன்றவர்கள் மத வழிபாடுகளில் இருந்த நிறை குறைகளை களைய வேண்டி, ஆன்மீகத்தில் பல திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டுவர பாடுபட்டுள்ளனர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கமாட்டார் போல் உள்ளது. இந்த  மனுதர்மம் என்ற கட்டமைப்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடைத்து எறியப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 100 ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் அந்த மனுதர்மம்  என்ற கட்டமைப்பு முழுமையாக சுக்குநூறாக உடைத்து  எறியப்பட்டு, காற்றில் பறக்கவிடப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே மனுஸ்மிருதியை போற்றிப் புகழ்ந்த சமூகமாக கூறப்பட்ட பார்ப்பனர் சமூகத்தில் இருந்து வந்த வைத்தியநாதர் போன்றவர்கள், மனு தர்மத்தை தூக்கி எறிந்து விட்டு புரட்சிகர பாதையில் பயணிக்க துவங்கினார்கள். அதன் வழியிலேயே தான், தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள், ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருந்த எந்தவிதமான நடைமுறைகளையும் அவர் பின்பற்றியது கிடையாது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் திமுக எம்.பி.களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. தபால் துறையில் முன்பெல்லாம், தபால் கொடுக்கும் பணியில் தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றி வந்த காலமும் இருந்துள்ளது. அதை உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னுடைய கட்சிக்கு மத்திய அரசின் அமைச்சரவையில் தாபால் துறையை பெற்று, அந்த துறைக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆ.ராசா அவர்களை அமைச்சராக அமரச் செய்தார்.

அதே பாணியில் ஜெயலலிதா அவர்களும், ஓர் அருந்ததியினர் இனத்தை சேர்ந்த தனது கட்சி வேட்பாளர் தயார் செய்த உணவை அதிமுக கட்சி நிர்வாகிகளே சாப்பிட மறுத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு, அந்த அருந்ததியின வேட்பாளரான தனபால் என்பவரை ஜெயலலிதா அவர்கள் நேரடிப்பார்வையில் தேர்தல் பணியாற்ற செய்து, வெற்றி பெற செய்தார். அதோடு மட்டும் நின்றுவிடாமல், எந்த வேட்பாளர் கொடுத்த உணவை தனது கட்சியினரே சாப்பிட மறுத்தார்களோ... அந்த எம்.எல்.ஏவை உணவுத்துறை அமைச்சராக அமரச்செய்தார்.  

அதேபோல் அடுத்த தேர்தலில் தனபால் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நிற்பார்கள். ஆனால், சபாநாயகர் வந்ததும் அவரே எழுந்து நின்று வணங்கும் அளவிற்கு அதே அருந்ததியின வகுப்பை  சேர்ந்த தனபால் அவர்களை சபாநாயகராக அமரச்செய்து சட்டசபையில் தினமும் ஜெயலலிதா தலைவணங்கி இருகரம் கூப்பி வணங்கி இருக்கிறார். இப்படி ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிந்தது மட்டுமில்லாமல், காஞ்சி சங்கர மடத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில், காஞ்சி மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரை முதல் குற்றவாளியாக சேர்த்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தார்.

மனுஸ்மிருதியை உருவாக்கி அதில் பல ஏற்றத் தாழ்வுகளை வகைப்படுத்தி அதன்படி அரசர்கள் முதல் ஆண்டி வரை அனைத்து தரப்பு மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த சமூகமான பார்ப்பனர் சமூகத்தில் பிறந்த, மதுரை வைத்தியநாதர், ஜெயலலிதா போன்றவர்கள் திராவிட கொள்கையை ஏற்று அதன்படி நடந்தனர். ஆனால் அதே மனுஸ்மிருதியில் வர்ணாசிரமதின் படி ஆட்சி செய்த நம் முன்னோர்கள் அந்த  மனுஸ்ருதிக்கும் அதை உருவாக்கிய பார்ப்பன ஆதிக்கவாதிகளுக்கும் பயந்து வாழ்ந்து இருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் ராஜராஜசோழன்.

தனது அண்ணன் கரிகாலனை கொன்ற 4 பார்ப்பன கொலையாளிகளை 13 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இருக்கிறார். அதேபோல், அவர்கள் தான் குற்றவாளி என்பதையும்  நிரூபிக்கவும் செய்தார். ஆனால், இறுதியில் அவருடைய ஆட்சி அதிகாரத்தை வழிநடத்திய சில பார்ப்பன வகுப்பை சேர்ந்த சூத்திரதாரிகள் ராஜராஜ சோழனை பலவிதமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு  மனுதர்மத்தில், “கொலை செய்த  பார்ப்பன குற்றவாளிகளுக்கு, ஒரு தவளையை கொண்றால் ஒருவனுக்கு  என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதை தான் கொடுக்க வேண்டும்” எனவும், அதன்படி  கரிகாலனை கொன்ற பார்ப்பன கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கலாம். 

ஆனால், குறைந்த தண்டனையாக, “அவர்களுடைய குடுமிகளை மட்டும் வெட்டி எடுத்து, அதை தனது நாட்டிற்கு வெளியே தூக்கி எறிய வேண்டும்” என அறிவுரை வழங்கினார்கள். அதன்படி மனுதர்ம விதிகளுக்கு பயந்து தனது அண்ணனையே கொலை செய்த கொலையாளிகளுக்கு   குறைந்த தண்டனையை  வழங்கியிருக்கிறார். ராஜராஜ சோழனின் இந்த செயலை நினைக்கும்போது, அந்த காலத்தில் நமது முன்னோர்களான தமிழ் அரசர்கள் எந்த அளவிற்கு  மனுதர்மத்திற்கு பயந்து நடுங்கி வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது சிறிது வருத்தமாகத்தான் உள்ளது.

இப்படி ஆதிக்க வெறியில் தலைவிரித்தாடிய மனுதர்மத்தையும், அதை உருவாக்கிய நபர்களும் உச்சத்தில் இருந்த காலம் போய், அதன் பிறகு  அதே  பார்ப்பன வகுப்பை சேர்ந்த பலர் நடைமுறை வாழ்வில் மனுதர்மத்தில், தங்கள் தரப்பில் இருக்க கூடிய குறைகளை களைந்து,  இதே தமிழ் மண்ணில் ஒற்றுமையுடன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடும், சமூகநீதியோடும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். 

அதற்கு உதாரணம் தான் வைத்யநாதர் அவர்களும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும். ஜெயலலிதா அவர்கள் மனுதர்ம சட்டதிட்டங்களை தங்களுடைய மனதிலும், மூளையிலும் ஏற்றிக்கொள்ளாமல் அதை தூக்கி எறிந்து, இந்திய அரசியல்  அமைப்பு சட்டத்திற்கு மதிப்பளித்து அதன்படி தனது ஆட்சியை செய்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் இந்த தமிழ் மண்ணில் திராவிட உணர்வு  மிகுந்து இருப்பது தான் என்பதை நாம் உணர முடிகிறது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான், நம்முடைய தமிழ் மண்ணில் ஆளுநராக பொறுப்பேற்று இருக்க கூடிய ஆர்.என். ரவி அவர்கள், தமிழக மக்களையும் மனுதர்மத்தின் படி வாழ வேண்டும் என்ற பிற்போக்கு வாதத்தை முலாம் பூசி தமிழக மக்கள் மனதில் விஷவிதையை விதைக்க நினைக்கிறார். தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்க நினைக்கும் மதவாதிகளின் கைப்பாவையாக ஒரு ஆளுநர் செயல்படலாமா? ஆனால், அவர்களின் எந்த காய் நகர்த்தல்களும் தமிழகத்தில் எடுபடாது என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள்.

- G.பாலகிருஷ்ணன், ஆசிரியர்
நிழல்.இன் / 8939476777