இந்தியாவில் 22 தாய் மொழிகளை இந்தியிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமை!

இந்தி திணிப்புக்கு எதிராக நீதிக்கட்சி காலம் தொடங்கி இப்போது வரை தமிழ்நாட்டில் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால், பல்வேறு வழிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட 22 தாய் மொழிகளைக் கொண்ட மாநிலங்களில் இந்தியை திணிப்பதில் ஒன்றிய அரசு குறிக்கோளாக இருக்கிறது. அதனை நாம் எப்படி எதிர்க்கப் போகிறோம்... தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்புகள் எழ காரணம் என்ன? இளைஞர்கள் இந்தி திணிப்பை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

இந்தியாவில் 22 தாய் மொழிகளை இந்தியிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமை!

“இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு” இந்த வார்த்தை நமது தமிழகத்திற்கு  புதிய வார்த்தை அல்ல, ஏற்கனவே நாம் இரண்டு தலைமுறைகளாக கொடுத்து கொண்டிருக்கும் எதிர்ப்பு குரலின் எதிரொலி தான் தற்போதும் இந்தியா முழுக்க  கேட்டுக் கொண்டு உள்ளது. இதற்கு காரணம், தற்போது நமது நாட்டில் ஒன்றிய ஆட்சியாளர்களாக இருக்க கூடிய பாஜக ஆட்சியாளர்களின் அடாவடி இந்தி திணிப்பு தான். நம் நாட்டில் எப்போதும், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, அதன் மூலம் இந்தியாவில் “ஒரே மொழி அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக இந்தி மொழியை திணிக்க நினைப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11வது அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. அதில், ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது, இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது. 

இதனால் இந்தியாவில் ஏற்கனவே பல மொழிகள் அழிந்துவிட்ட நிலையில், மீண்டும் அதே முயற்சியை முன்னெடுக்கும் விதமாக, கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “இந்தி நாள்” விழாவில் உரையாற்றிய போது, “ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவது தான் பாஜக அரசின் நோக்கம்” என்று அறிவித்தார். உள்துறை அமைச்சரின் இந்த இந்தி திணிப்பு திட்டம், இந்திய அளவில் தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல், வட மாநிலங்களிலும் இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணை தலைவரான ஒடிசா பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் நாட்டில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அது என்னவென்றால், “தேசிய கல்வி கொள்கை 2020ன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது மாநில மொழி இருக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

 

மேலும் பிரிவு 'ஏ' மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். அது 100% பின்பற்றப்படவும் வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில் தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்திதான் இருக்க வேண்டும்.

பயிற்சி நிறுவனங்களிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட வேண்டும். பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாளில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்தி மொழியில் தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும். உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இந்தி மொழியில் பேசவும், எழுதவும் தெரியவில்லை என்றால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியாளர்களின் பணி குறித்த மதிப்பீட்டு ஆண்டறிக்கையில் இதனைப் பதிவு செய்திட வேண்டும். 

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும். ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களின் துறை சார்ந்த கடித போக்குவரத்து, தொலைநகல், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் அனைத்தும்  இந்தி மொழியிலும், தேவைப்பட்டால் மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். இவற்றில் ஆங்கில மொழியின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் தற்போது இந்தி மொழி 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இக்கல்வி நிறுவனங்களில் 100 விழுக்காடு இந்தி தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, 'ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி' என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இந்த சூழலில் நாம் இந்த இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை நம்முடைய இளைய தலைமுறையினருக்கு எடுத்து கூற வேண்டியது நமது கடமையாகும்.  இதில், பலர் பல விதமான அரசியல் உள்நோக்கத்தை உள்ளே நுழைந்தாலும், எந்த அரசியல் சார்பு நிலைப்பாடும் இல்லாமல், இளைஞர்கள் பொதுவில் நின்று நம்முடைய தமிழ் மொழியையும், அது சார்ந்த கலாச்சாரத்தையும் காக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர வேண்டும்.

தற்போது  இந்திய ஒன்றியத்தின் ஆட்சியாளராக இருக்கக்கூடிய பாஜக கட்சியினர் பன்முகம் கொண்ட நமது நாட்டில், "ஒரே மொழி தான் ஆட்சி மொழி" என பிரகடனபடுத்த முயலும் இந்த தருவாயில்,  நம்முடைய  பலமான எதிர்ப்பை காட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  இந்த சூழ்நிலையில் நாம் சோர்ந்து போய் இருந்தோம் என்றால்,  வரும் காலங்களில் நம் தமிழ் மொழியையும், சமூகத்தின் அடையாளங்களையும், கலாச்சாரங்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும். 

அதற்கு உதாரணம், இந்த இந்தி மொழியின் தாக்கத்தால் இந்தியாவில், வட இந்திய மொழியாக ஏற்கனவே புழக்கத்தில் இருந்த  அரியானி, ராஜஸ்தானி, பிகாரி, மராட்டி போன்ற மொழிகள் பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளன என்பதை நாம் அறிய வேண்டும். அதேபோல், சிக்கிமில் மட்டும் பல மொழிகள் 'நேபாளி' மொழியின் கீழ் ஒன்றினைக்கும் போது பல மொழிகள் அழிவை சந்தித்தன என கூறப்படுகிறது. பொதுவாக நாம் புதியதாக ஒரு மொழியைக் கற்கும் போது,  அந்த மொழியின் கலாச்சாரமும் நம்மோடு கலந்துவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.  

 குஜராத்தில், பாரோடாவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தின் ஒரு ஆய்வு குழுவினர் நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில்  1961ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,  நம் நாட்டில்1,652 மொழிகள் அங்கிகரிக்கபட்டு இருந்தன எனவும், ஆனால் அவைகள் 1971ம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது வெறும், 109 மொழிகளே  பட்டியலிடப்பட்டுள்ளது எனவும் தெரியவந்திருக்கிறது. 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது  நான்கு இலக்க எண்ணிக்கையில் இருந்த நம்முடைய மொழிகள் பத்து வருடத்தில் மூன்று இலக்கத்தில்  குறைந்து போயுள்ளது. அது இப்போது வெறும் இரண்டு இலக்க எண்களாக 22 மொழியாக இருந்து வருகிறது. இதையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கொடூர புத்தியில் தான், இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி என்பதை கொண்டு வருகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள்  சங்கம் வைத்து கட்டிக்காத்த நம் செம்மொழி தமிழ் வேண்டுமா... சுமார் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த இந்திமொழி வேண்டுமா.... என்பதை நாம் உணர வேண்டும். மொழியின் மூலமாகத்தான் நம்முடைய பாரம்பரியமும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

1937ம் ஆண்டு சென்னை  மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில், ராஜாஜி அவர்கள் பள்ளிகளில் இந்தி படிப்பது கட்டாயம் என அறிவித்தார். அதனை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சியும், பெரியாரும் ராஜாஜியின் முடிவை பலமாக எதிர்த்தனர். அதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி என தொடர் போராட்டங்கள் நடந்தது. அதில், இருவர் உயிரிழந்தனர்.  குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் 1939ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பதவி விலகியதை தொடர்ந்து,  அதன் பின்னர் எழுந்த கவர்னர் ஆட்சியின் போது, 1940ம் ஆண்டு ராஜாஜி அறிவித்த, பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படும்  என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பலமான விவாதங்களுக்கு இடையே, 15 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்தி ஆட்சி மொழியாக இருக்கும் எனவும், ஆங்கிலம் இணை மொழியாக இருக்கும் எனவும் முடிவெடுக்கபட்டது.  அதன்படி 15 ஆண்டுகள் கழித்து 1965 ம்  ஆண்டில் இருந்து அலுவல் மொழியாக  இந்தி நீடிப்பதற்கு, இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாம் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு மீண்டும்,  ஆர்ப்பாட்டமும், போராட்டமும், பெரிய அளவில் நடைபெற்றன. அதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடைபெற்றது.  அதன் பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1965 ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணி மொழியாக ஆங்கிலம் தொடர  வழிவகை மேற்கொண்டார்.

ஆனால், அந்த நடவடிக்கைகள் நிரந்தரமாகவும் உறுதியாகவும் இல்லை என, பின்னால் வரக்கூடிய ஆட்சியாளர்கள் மீண்டும் ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டையே தொடர வாய்ப்புள்ளது எனக் கூறி தமிழகத்தில் திமுக கட்சியினர் பெரிய அளவில் போராட்டத்தை கையில் எடுத்தனர். இந்தி எதிர்ப்பு  போராட்டத்தில் மிகவும் தீவிரமாக இறங்கிய திமுக 1965-ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆறாம் தேதியை துக்க நாளாக அனுசரிக்க போவதாக அறிவித்தது. இதனால் தமிழகம் மிகவும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மதுரையில் திமுக கட்சிக்காரர்களும் காங்கிரசுக்கும் கைகலப்பு மோதல்கள் ஏற்பட்டு அது பெரிய அளவில் கலவரமாக மாறியது. 

அதில்  பெரிய அளவில் வன்முறைகளும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்ததால் போலீசார் தடியடி பிரயோகம் நடத்த கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது  துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்தது.  அந்த சூழ்நிலையில் அந்த  கலவரத்தில் 2 போலீசார் உட்பட 70 பேர் உயிரிழந்தனர்.   அந்த சூழ்நிலையில் அப்போது  பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், “இந்தியாவில்  இந்தி பேசாத மாநிலங்களில், மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணி மொழியில் இணை மொழியாக இருக்கும்" என அறிவித்தார். அதன் பிறகு கலவரம் ஓய்ந்தது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தியை பரப்புவதற்காக  வட இந்திய தலைவர்களின்  தீவிரமாக முயற்சியால் தமிழ்நாட்டில் தென்னிந்திய பிரச்சாரசபா, 1918ம் ஆண்டு காந்தியால்  துவக்கப்பட்டது.  அப்போது சென்னை மாகாணமாக இருந்த தென்னிந்தியாவில்  சென்னையை தலைமையகமாக கொண்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதன் கிளைகளையும் நிறுவப்பட்டது.  அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தியவர் அன்னிபெசன்ட் அம்மையார்.  அதன் முதல் வகுப்பை நடத்தி  துவக்கி வைத்தவர் காந்தி அவர்களின்  மகனும், ராஜாஜியின் மருமகனுமான தேவதாஸ் காந்தி. அன்று வெறும் 80 பேருடன் துவக்கப்பட்ட அந்த பயிற்சி வகுப்பு இன்று தமிழகத்தில் மட்டும் 6,000 மையங்களுடன் 7,000 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

இதை வைத்து நாம் ஒன்றை மட்டும் உறுதியாக புரிந்துகொள்ள முடியும், நமது நீதி கட்சி தலைவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் மீண்டும் வட இந்திய அரசியல்வாதிகளை எதிர்த்து, மீண்டும் ஒரு சுதந்திரம் கேட்டு போராட வேண்டிய நிலைமை வரும் என்பதை கூறினார்கள். அது இன்று தீர்க்கதரிசனமாக இருந்து வருகிறது.  அதற்கு காரணம் இந்த இந்தி திணிப்பு என்ற நச்சு விதையை அன்றே விதைக்கப்பட்டுவிட்டது என்பது தான், அது இன்று ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது.  இப்போது கூட நாம் எதிர்ப்பது, “இந்தி மொழியை அல்ல,  இந்தியை இங்கு திணிப்பதை தான் எதிர்க்கிறோம்” என்பதை கட்சிகளாலும், சாதிகளாலும் பிரிந்து கிடக்கும் நம் தென்னிந்திய சமூகங்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பது தான் கொடுமை.

இந்த இந்தி திணிப்பு என்பது இந்தியாவிலேயே ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடந்து முடிந்தது என்று ஏற்கனவே நடந்த இரண்டு போராட்டங்களும் நிரூபித்தது. ஆனால் இன்று இப்போது 3 மூன்றாவது கட்டமாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது துவங்கினால்... அது கண்டிப்பாக இந்தியாவில் இந்தியை போல் ஆட்சி மொழியாக உள்ள 22 தாய் மொழியையும் காப்பாற்ற இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்பது மட்டும் உண்மை. அத்தகைய சூழலை ஒன்றிய அரசு உருவாக்க நினைக்கிறது.

- G.பாலகிருஷ்ணன், ஆசிரியர்
நிழல்.இன் / 8939476777