தோல்வியடைந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு : அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பும் மக்கள் பிரதிநிதி!

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துலாபுரம் ஊராட்சியில்,30% கூட நடக்காத ஜல் ஜீவன்(JJM) திட்ட பணிக்கு 100% முடிவடைந்ததாக ஊராட்சி மன்றத் தீர்மானக் கூட்டத்தில் கையெழுத்து கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மறுப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்து கூட்டத்தை நடத்த விடாமல் வெளிநடப்பு செய்த முத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி. மக்கள் பிரதிநிதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தோல்வியடைந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு : அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பும் மக்கள் பிரதிநிதி!

ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டு வரும் முறைகேடுகள் குறித்து முத்துலாபுரம் ஊராட்சிமன்ற துணை தலைவர் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துலாபுரம் ஊராட்சியில் அங்கம் வகித்து வரக்கூடிய முத்தலாபுரம், பரமதேவன்பட்டி, ஊத்துப்பட்டி, துரைச்சாமிபுரம், கண்ணியம்பட்டி, பெருமாள்பட்டி, சின்ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களை உள்ளடக்கிய முத்துலாபுரம் ஊராட்சியில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் (JJM)மூலம் முத்துலாபுரம் ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. அதன் மூலம் அனைத்து ஊர்களிலும் உள்ள அனைத்து தெருக்கள் தோறும் புது குடிநீர் இரும்பு பைப்புகள் அமைத்து, அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்கப்படும் என்று கூறி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி சென்றுள்ளனர்.

ஜல் ஜீவன் (JJM) திட்ட பணிக்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரரை அறிமுகம் செய்து, பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முத்துலாபுரம், ஊத்துப்பட்டி, பரமதேவன்பட்டி ஆகிய ஊர்களில் பைப் லைன் பதிக்கிறோம் என நன்றாக இருந்த  தெருக்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தோண்டி குண்டும், குழியுமாக ஆக்கினர்.  பல விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணம் JJM திட்டத்திற்கான மக்கள் நலன் விரோத பணிகளை செய்யப்பட்டுள்ளது.

நன்றாக இருந்த தெருச்சாலைகளை குண்டும் குழியுமாக்கி விபத்துக்களை ஏற்படுத்தி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் ஒப்பந்தகாரரின் செயலைக் கண்டு, நடைபெற்று வந்த பணியினை அன்றே, இடைமறித்து பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்தால் மட்டுமே JJM திட்ட பணியானது அடுத்தடுத்த ஊர்களுக்கு செல்ல முடியும் என ஒப்பந்ததாரரிடம் கூறியபொழுது, பைப்லைன் பதித்தவுடன் அதில் சிமெண்டு சாலை அமைத்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிட நிலையில், இன்று வரை ஒப்பந்ததாரரை காணாமல் வலை வீசி தேடி வருகிறோம்.

இது ஒருபுறமிருக்க, கடந்த 6ம் தேதி அன்று சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், முத்தாலபுரம் ஊராட்சிக்கு வந்து, ஜல் ஜீவன் திட்டத்தின்(JJM) கீழ் நூறு சதவீதம் வேலை முடிந்து விட்டதாகக் கூறி ஊராட்சிமன்றத்தில் தீர்மான நோட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அதற்கு எங்கள் ஊராட்சியில் 30 சதவிகித வேலை கூட முடியவில்லை என்றிருக்க,எப்படி நூறு சதவீத வேலை முடிந்தது என்று பொய்யாக தீர்மானம் நிறைவேற்ற முடியும் .

அரசும், அரசியலும் அருமையாக நடிக்கிறது. அதற்கு அரசு அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக ஜால்ரா தட்டுகிறார்கள். மக்கள் பிரதிநிதியான நாங்களும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளோடு சேர்ந்து ஜால்ரா தட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இது எவ்விதத்தில் நியாயம்,மக்கள் நலன் பணிக்காக மத்திய,மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியானது அரசியல் மற்றும் அரசின் ஒரு சில முன்னோடிகளின் பாக்கெட்டிக்கு சென்று வராமல் நிதியானது, நேரடியாக மக்கள் பணிக்கு முழுமையாக வந்து சேர்கிறதோ, அன்றுதான் அரசு ஒதுக்கும் நிதியானது சாமானிய மக்கள் நலனுக்காக சென்றடையும்” என முத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆதங்கத்துடன் தெரிவித்தார். கூட்டத்தில் எங்கிருந்தோ "ஐயா,6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை வாங்குறாங்கயா" என்ற குரல் கேட்டது என்பது கவனிக்கத்தக்கது. 

முத்துலாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் ஊத்துப்பட்டி முத்துப்பாண்டியின் ஆதங்கத்தை உற்று கவனிக்கும் போது, தேனி மாவட்டம் முழுவதும் ஜல் ஜீவன் திட்டமானது மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் தொடங்கி 100% முடிவடையாமல் 30% முடித்து மீதமுள்ள 70%-த்தை இத்திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் வழியாக விட்டுவிட்டார்களா?

மேலும், இத்திட்டத்திற்காக கிராமங்கள் தோறும் நன்றாக இருந்த தெருச்சாலைகளை குண்டும், குழியுமாக்கி, எதிர்வரும் விபத்துகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைத்து, சிறு சிறு சாக்கடை மேம்பாலங்களை சேதாரப்படுத்தி அதன் மூலம் மக்கள் வழித்தட பயன்பாட்டை சீரழித்து வருவகின்றனர். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு எனும் ஜல் ஜீவன் திட்டம் மக்களுக்கான திட்டம் தானா? என பொது மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில்  இத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக் கட்டணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் அடிப்படை ஆதாரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், திட்ட நிதி கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட மொத்த நிதியில், 10 சதவீதத்தை பொதுமக்கள் பங்களிப்பாக பெற வேண்டும். மீதமுள்ள 90 சதவீத நிதி அரசு பங்களிப்பாகும்.

இதனால் கூடுதல் நிதி வசூலிப்பது குறித்து முழுமையாக அரசு அதிகாரிகள் வவுச்சர், ரசீதின் அடிப்படையில் ஆய்வு செய்வதை விடுத்து குற்றச்சாட்டு குறித்து பொதுமக்களிடத்தில் கள ஆய்வு செய்திட வேண்டும். பிரதம மந்திரி கிசான் முறைகேடு போல, இந்த திட்டத்திலும், செயல்படுத்தாமல் செயல்படுத்தியது போல பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து வருவகிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில், செயல்படாமல் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஊரக வளர்ச்சித் துறையின் அலட்சியத்தினால் மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் பைப் எனும் ஜல் ஜீவன் திட்டத்தில் நடைபெற்ற, நடைபெற்று வரும் குளறுபடிகளை கலைந்து, திட்டமானது முழுமையாக மக்கள் நலனுக்காக சென்றடைய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தேனி மாவட்ட சமூக நல பற்றாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தோல்வியடைந்த ஒரு திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவந்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இப்படியான திட்டங்கள், எதற்காக கொண்டுவரப்படுகிறது? யாருக்காக கொண்டுவரப்படுகிறது? வருங்காலத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்து விட்டு, வீடு வீட்டுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மக்களின் அடிப்படை தேவையான இருக்க இடம், குடிக்க நீர், உடுத்த உடை என எல்லாவற்றையும் மக்களிடம் இருந்து பறித்துவிட்டு, யாருக்காக இவர்கள் ஆட்சி நடத்தப் போகிறார்கள் என கொந்தளித்துப்போயுள்ளனர் பொதுமக்கள்.

- சுகன்யா முரளிதரன், செய்தியாளர், தேனி