நாடார் சமுதாய மக்கள் தன்னலம் இல்லா சுயமரியாதை தலைவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றால் எலிக்கு தலையாய் இருப்பதை விட, புலிக்கு வாலாய் இருந்து வாழ்ந்து காட்ட வேண்டும்!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே தென்னக தலைவர்கள் ஒன்றிணைந்த இந்தியாவையே வழிநடத்தக்கூடிய வல்லமை படைத்த திறமைசாலியாக இருந்துள்ளனர். வெள்ளையர்களை விழிபிதுங்க வைத்தனர். வெள்ளையர்களே தென்னக திராவிட தலைவர்களை ஏற்றுக்கொண்டு பலமுறை இந்திய சுதந்திரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய மிகச் சிறந்த தலைவர்களாக நீதிக்கட்சித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த பலம் இன்று வரை நீடித்து நிற்பதற்கு காரணம், தமிழகத்தில் திராவிட உணர்வு மேலோங்கி நிற்பதுதான். நீதிக்கட்சி தலைவர்களுடைய கொள்கைகளை தமிழகத்தில் தற்போது பல திராவிட கட்சிகள் கடைபிடித்து வந்தாலும், கட்சி, ஆட்சி என்று எந்த பிரதிபலனும் இல்லாமல் ஒரு சமுதாயம் இந்த திராவிடக் கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டு இன்று வரை கடைப்பிடித்து வருகிறது என்றால் உலகிலேயே அது நாடார் சமுதாயமாக மட்டும்தான் இருக்கும்.

தமிழக அளவில் பெரிய அளவில் மக்கள் தொகை கொண்ட சில சமூகங்களில் முக்கிய இடத்தில் உள்ளது நாடார் சமூகம். இவர்கள் யாரிடமும் எதற்காகவும் பெரும்பாலும் கையேந்தி நிற்காமல் சுயமரியாதையுடன் வாழக்கூடியவர்கள் என்ற உலக அரங்கில் ஒரு மதிப்பீடு பெற்றிருக்கக் கூடிய சமூகம். பொருளாதார அடிப்படையில் சுயம்புவாக தங்களை தாங்களே வளர்த்து இன்று ஓர் முக்கிய இடத்தில் நிற்க கூடியவர்கள் என்பது உலகறிந்த உண்மை. திராவிடக் கொள்கைகளைத் தங்களுடைய சமுதாயக் கட்டமைப்பாக இணைத்து அதன்படி தங்களுடைய குலதெய்வ வழிபாடுகள், கோயில் வழிபாடுகள், அவர்களுடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை மூடநம்பிக்கைகள் இடம் கொடுக்காமல் சுயமரியாதை உணர்வுடனும், பகுத்தறிவுக் கொள்கைகளுடனும் கோயிலாக இருந்தாலும், குடும்ப நிகழ்வாக இருந்தாலும், தங்கள் குடும்பத்தில் உள்ள பெரிய தலைமைகள்,
பொருளாதாரத்தை தேடி இவர்கள் ஓடினாலும், அடுத்த தலைமுறையினருக்கு தேவையான வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் என்று பல வளர்ச்சி பணிகளை தாங்களே ஏற்படுத்தி கொள்வதில் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இன்று பொருளாதார அளவிலும் உயர்ந்து நிற்பதற்கு காரணம் நூறு ஆண்டுகளாக இந்த சமூகம், பெரிய பெரிய மோதல்களையும், போராட்டங்களையும் சந்தித்து, பல உயிர்களை இழந்து இன்று ஒரு தனிச்சிறந்த இடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரத்திலும் மற்ற சமூக அமைப்புகளிலும் முன்னனியில் இவர்கள் இருப்பதற்கு காரணம் இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்த இந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநலமின்றி பல போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்து பெற்ற வெற்றிகள்தான்.
17ம் நூற்றாண்டின் இறுதி வரை சுயமரியாதையுடன் வாழ்ந்த இந்த சமூகம் தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் எல்லாம் எந்தவிதமான நெருக்கடிகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகாமல் வாழ்ந்த சூழ்நிலையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த நாகர்கோயில், கன்னியாகுமரி உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் இந்த சமூகத்திற்கு எழுந்தது. அதுவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் விவேகத்துடனும் வீரத்துடனும் அந்த சமஸ்தானத்தின் பாதுகாப்பு அரணாக இருந்த மாவீரர் அனந்தபத்மநாபா மறைவிற்குப் பிறகு 1810 க்கு பிறகு தான் இந்த நாடார் சமூகம் சூழ்ச்சிகளால் பின்னப்பட்டு வாழ்வாதாரத்திலும், சுயமரியாதையிலும் பின்னுக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியது.
இந்நிலையில், இந்த சமூகத்தில், ஆன்மீகத்தின் வாயிலாக புரட்சிகர சிந்தனைகளையும், பகுத்தறிவு உணர்வுகளையும் ஊட்டிய ஐயா வைகுண்டர் அவர்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த போராளி அய்யா சௌந்தர பாண்டியனார். தனது சமுதாயத்தின் மாண்பை கெடுத்து அந்த சமுதாய புகழை மழுங்கடித்த திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்கு தன்னுடைய சமுதாய நிலபரப்பு போய் விடக்கூடாது என போராடிய மார்சல் நேசமணியார், தேசிய கட்சியில் இருந்தாலும் திராவிட கொள்கையில் வாழ்ந்த காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்கு நீர் ஆதாரம் மிக முக்கியம் என உலகிற்கு உணர்த்திய கே.டி.கோசல்ராம் அய்யா அவர்கள் என பெரிய பட்டியல் உள்ளது. இவர்கள் அனைவரும் இந்த சமுதாய மேம்பாட்டிற்காக பல விதங்களில் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் இவர்கள் அனைவரும் பெரும்பாலும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை உருவாக்கி, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வாழும் முறையை வகுத்த இந்து மதத்தை வெறுத்தவர்கள், எதிர்த்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஆதிக்க புத்தி கொண்ட சிலரால் நாடார் சமூகம் கடவுள்களை வெறுத்து தங்கள் முன்னோர்களை குலதெய்வங்களாக ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கியதும், கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் கிராமம் கிராமமாக மதம் மாறியதும் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய இந்து மதத்தின் மீதிருந்த வெறுப்புணர்வு தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இந்நிலையில் இந்த சமூகத்தை மீண்டும் மதவெறி பிடித்த ஆதிக்க புத்தி கொண்ட நபர்களிடம் அடிமைப்படுத்த துடிக்கும் சில சூடு, சொரனை கெட்ட சுயநலவாதிகள்
பிற்போக்கு சிந்தனை கொண்ட நபர்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த சமூக முன்னேற்றம் என்பது இன்று நேற்றல்ல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஒரு நீண்ட நெடிய பயணம். இந்த சமூகம் 100 ஆண்டுகளாக பட்ட துன்பங்களையும், இன்னல்களையும் அறியாத மக்களை இந்த சமூகத்தின் துன்பங்களையும், துயரங்களையும், பட்ட கொடுமைகளையும் நன்கு அறிந்த புத்திசாலியான சுயநலவாதிகளால், திராவிட எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தையால் மூளைச்சலவை செய்யப்பட்டு வரலாறுகளை மறைத்து செயல்படும் சுயநலவாதிகள் நன்கு அறிந்த இந்த சமூக வரலாற்று பதிவுகளை சிலவற்றை மிக சுருக்கமாக மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
17ம் நூற்றாண்டில் அனந்த பத்மநாபருடைய வீரத்தாலும் துணிவாலும் , மாட்டு வண்டிகளை சாய்த்து படுக்க வைத்து பனை மரங்களை வெட்டி அதன் மீது சாய்த்து நிறுத்தி அதை வெள்ளையனுக்கு பீரங்கி போல் கண்கட்டி வித்தை காட்டி, தனது அதிரடியான வியூகத்தால், விவேகத்துடன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டதுடன், அவர்களை கைது செய்து மன்னரிடம் மண்டியிட செய்தவர் அனந்த பத்மநாபர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அரச குடும்ப பிரச்சனைகளாலும், பல விதங்களில் திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மரின் உயிருக்கு ஆபத்துகள் இருந்து வந்த நிலையில், அவரை காப்பாற்றி அவருக்கு பக்கபலமாக 100க்கும் மேற்பட்ட களறி ஆசான்களுக்கு தலைமை ஏற்று துணிவுடன் போரிட்டு மன்னருக்கு பாதுகாப்பு அரணாக நின்ற, அனந்த பத்மநாபருக்கு மார்த்தாண்ட வர்மர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊர்களை பரிசாக தந்ததுடன் பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபருடைய பெயர்களையும் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.
மார்த்தாண்ட வர்மர் மறைவிற்கு பின்னால் வந்த அரச குடும்பத்தினர் வேலுத்தம்பி என்ற நாயர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தளபதியாக நியமித்தனர். (மிகுந்த மரியாதையுடன் பேரும் புகழுடன் வாழ்ந்த நாடார் சமூகம் 100 ஆண்டுகள் இருளில் மூழ்கியது இவரால் தான்) இவர் பொறுப்பிற்கு வந்த பிறகு அவர் அனந்த பத்மநாபருடைய பெயருக்கு இருந்த புகழை மழுங்கடிக்கும் வகையில் அவர் சார்ந்த ஒட்டு மொத்த நாடார் சமுதாயத்தையே பழிவாங்கும் நோக்கில் பலவிதமான அடக்குமுறை சட்டதிட்டங்களை நிறைவேற்ற செய்தார். அதில் ஒன்று தான், மேல் சீலை தடை உத்தரவு.
இதை எதிர்த்து கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்ட போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது. இப்படி பல கட்ட போராட்டங்களை சந்தித்த பிறகு பல உயிரிழப்புகளுக்கு பின்பு தான் இந்த சட்டம் திரும்ப பெறபட்டது. இந்த வெற்றியில் அய்யா வைகுண்டருடைய போராட்டங்களும் புரட்சிகரமான பரப்புரைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே கிணற்றில் குளிக்க வேண்டும் என அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் மக்களை அனைத்து ஏற்றத்தாழ்வுகளை மறந்து சமபந்தியில் உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டது. மக்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வலியுறுத்தினார். இவ்வாய் மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்தும் அளவிற்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
வைகுண்டரின் புகழையும் அவரை சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறாமை கொண்ட ஆதிக்க புத்தி கொண்டவர்கள் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்தார்கள். அதனால் வைகுண்டரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்றால், அவருடைய புரட்சிகரமான சிந்தனைகள் எப்படி இருந்திருக்கும் என நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்து சமயத்தில் இருந்த வருணாசிரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுலகத்துக்கு பொருந்தாதது என நிராகரித்து எதிர்த்து இருக்கிறார். இந்து சமயத்தில் இருந்த வழிபாட்டு முறைகளையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி எல்லாம் ஆன்மீகத்தின் வழியாகவும் பயணித்த ஒரு மாமனிதனும் இந்து சமயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை பலமாக எதிர்த்திருக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பொறையாறு எஸ்டேட்டின் வாரிசாக திகழ்ந்த பொன்னுச்சாமி நாடார், 1889ம் ஆண்டு பல ஆதிக்க புத்தி கொண்டவர்களுடைய எதிர்ப்புகளுக்கு இடையே, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் பல கோயில்களை உள்ளடக்கிய நிர்வாகம் செய்கிற கோயில் நிர்வாக குழுவிற்கு, நாடார் சமுதாயதிலேயே முதல் முதலாக பல போராட்டங்களுக்கு இடையே வெற்றி பெற்றார். சட்டசபையில் நாடார் இன மக்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக 1910 ம் ஆண்டு வெள்ளைச்சாமி நாடார் மற்றும் அவரது சகோதரர் பொன்னுச்சாமி நாடாருடைய தீவிர முயற்சியால் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது. இவர்களுடைய தீவிர முயற்சியால் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சௌந்தர பாண்டியனார் பல போராட்டங்களுக்கும் மோதல்களுக்கும் இடையே நாடார் சமூகத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
அதற்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பொறையாரு எஸ்டேட் வாரிசுகள் அவர்கள், ஆதிக்க புத்தி கொண்டவர்கள் மத்தியில் நாடார் இன மக்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், 1920 ல் “தி நாடார் வங்கி லிமிடெட் ” துவங்கபட்டது. இந்த வங்கி 1962ஆம் ஆண்டு “தமிழ்நாடு மெர்க்கடைல் பேங்க்” என்று பெயர் மாற்றம் செய்யபட்டு அந்த வங்கி இன்று நூற்றாண்டுகளை கடந்து பயணித்து கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிளைகளில் 450 க்கும் மேற்பட்ட கிளைகள் கிராம புறங்களில் இன்று வரை இயங்கி வருகிறது.
செளந்தரபாண்டியனார் தமது சிறப்பான சமுதாய பணிகளால் நீதிகட்சியின் சார்பில் 1921-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையில் தமது 27- வது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமது வாழ்நாளில் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் பாடுபட்டவர். ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது, பெண் கல்விக்கு அதிலும் மருத்துவம் படிப்பதற்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். பேருந்து பயணச்சீட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை என பயணச் சீட்டில் அச்சடித்து பேருந்து நிர்வாகம் நடத்தியவர்களை கண்டித்து, அதே பேருந்து சீட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்ற மறுக்கும் பேருந்துகள் அனுமதி மறுக்கப்படும் என அச்சிட்டு அதை நடைமுறையும் படுத்தினார். அந்த உத்தரவை ஏற்க மறுக்கும் பேருந்தின் வழித்தட உரிமையை நீக்கி , சமூக நீதியை நிலைநாட்டியவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விதவை திருமணத்துக்கு ஆதரவாக பல்வேறு புரட்சிகளை செய்தவர்.
சுயமரியாதை கொள்கையில் ஈடுபாடு கொண்ட செளந்தரபாண்டியனார், பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். 1927-ஆம் ஆண்டு இவரது தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில், பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இணைத்து கொள்ளும் வழக்கத்தை கைவிடும் தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்தவர் இவர். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே இடஒதுக்கீடு, சமூக நீதி, சுயமரியாதை, உழவர்கள் நலன், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்டவர் செளந்தரபாண்டியனார்.
கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு தேசிய கட்சியில் இருந்தாலும் மாநில உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஆதரவாக இருந்தவர். தான் சார்ந்த கட்சி, ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை பெரியாருடன் இணைந்து பலமாக எதிர்த்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் திராவிடக் கொள்கையில் உடன் உடன்பாடு கொண்டவர். பகுத்தறிவு கொள்கையை பின்பற்றியவர் பின்தங்கிய மக்களுடைய வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்தவர். இவரும் இந்து மதத்தில் இருந்த ஏற்றத்தாழ்வை வலுவுடன் எதிர்த்தவர். பகுத்தறிவு பாதையில் பயணித்தவர் தேசிய கட்சியில் இருந்தாலும் திராவிட கொள்கை பிடிப்புடன் வாழ்ந்தவர்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குமரி மாவட்டம் கேரளாவின் எல்லையினுள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி அய்யா. இதனால் மார்ஷல் நேசமணி என்று அந்த மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகக் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர்சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு ஸ்டூலும் (Stool) போடப்பட்டு இருந்ததை, தனது காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டவர். அதே போன்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் மேல்சாதி வக்கீல்களுக்கும் கீழ்சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை தூக்கி போட்டு உடைத்து அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை பயன்படுத்த செய்தவர். அந்த அளவிற்குச் சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார்.
சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும். என்ற கோரிக்கை உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சூலக்கரை மேட்டில் தனி நபராக உண்ணாவிரதத்தை துவக்கினார். பின்னர் விருதுநகர் தேசபந்து மைதானத்திற்க்கு உண்ணாவிரத இடத்தை மாற்றினார். 76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. பின்னர் அக்டோபர் 10ம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அக்டோபர் 13, 1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. இந்திய ஒன்றியத்தில் நாடு என்று உச்சரிக்கக் கூடிய ஒரு தனி மாநிலம் தமிழ்நாடு தான் இந்தப் பெருமையை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர்.
கே.டி.கோசல்ராம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தான், மணிமுத்தாறு அணைகட்ட கே.டி.கோசல்ராம் நிதி வசூலித்துத் தந்தால் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார் அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம். அவரது கூற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட கோசல்ராம் அய்யா அவர்கள், ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாயை திரட்டி பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்து, அணை கட்டும் பணிக்கு அஸ்திவாரமிட்டார்.
தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேச சட்டம் வரும் முன்பாக திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று முருகனை வழிபட உரிமை பெற்றுத் தந்தார். இப்படி சுயநலமில்லாமல் மேலே குறிப்பிட்ட தலைவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பலர் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களுடைய சொத்து சுகங்களையும் இழந்து எங்களுடைய சமூகம் சார்ந்த மக்கள் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று பொது நோக்கத்தில் அரும்பாடுபட்டு இருக்கிறார்கள்.
எப்படிப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புகளையும், அடக்குமுறைகளையும் வென்றெடுத்து இன்று உலக அரங்கில் இந்த சமூகம் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலையில், இந்த சமூகத்தை சார்ந்த சில சுயநலம் கொண்ட நபர்கள் தங்களுடைய சொந்த லாபத்திற்காக, பகுத்தறிவு கொள்கைக்கும், தீண்டாமை ஒழிப்பிற்கும், மாநில சுயாட்சிக்கும், எதிர் திசையில் பயணிக்கும் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடிமைப்படுத்தி வைத்திருந்த அதே சூழ்ச்சி வலையில் மீண்டும் தங்களை தாங்களே பின்னி பிணைத்து கொண்டு அவர்களுடைய கைப்பாவைகளாக இருந்து செயல்பட்டு இச்சமூக மக்கள் அனைவருக்கும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மிக மோசமான அபாயகரமான ஒரு செயலை செய்து கொண்டிருப்பது இந்த சமூகத்தை சார்ந்த பல முக்கிய தலைவர்களை குறிப்பிடலாம்,
அதில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்க கூடிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள். இவர்களில் தொடங்கி ஆள் பிடிக்கும் பணிகள் மிகவும் வேகமாக இருந்ததன் விளைவாக இன்று இரண்டாம் கட்ட தலைவர்களாக பலர் பாஜக கட்சியை நோக்கி ஊர்ந்து சென்று கொண்டு உள்ளனர். இவர்களில் துவங்கி இன்று புதிய பணக்காரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் பலர் இந்த சமூகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய பாஜகவை நோக்கி பயணிப்பதால், பகுத்தறிவு கொள்கைக்கும் அடக்குமுறைக்கும் எதிர்த்து நின்று உழைப்பால் உயர்ந்த இந்த சமூகம் வருங்காலங்களில் தலை குனிந்து நிற்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றனர். இந்த சுயநலவாதிகள் இந்த சமூகத்தை நூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல துடிக்கிறார்கள் என்பதை இந்த நாடார் சமூக மக்கள் புரிந்து கொண்டு சுயநலம் கொண்ட இந்த மனிதர்களை இந்த நாடார் சமூகம் புறக்கணிக்க வேண்டும்.
ஜி.பாலகிருஷ்ணன் - ஆசிரியர்,
நிழல்.இன் : 8939476777