திருக்குவளை பாங்கல் ஊராட்சி மக்கள் தொடர்பு முகாம் : 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகள் 42 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருக்குவளை,ஜூலை.4: திருக்குவளை அருகே பாங்கல் ஊராட்சியில் நேற்று  நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 42 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள பாங்கல்  அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் தெய்வநாயகி   தலைமையில் நடைபெற்றது. இம்முகாமையொட்டி பெறப்பட்ட மனுக்களின் தகுதியான 42  பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்பு துறை சார்பில் முதியோர் தொகை 11 பயனாளிகளுக்கும், 25 பயனாளிகளுக்கு பட்டா நகலும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு திருக்குவளை வட்டாட்சியர் ஜி.ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கே.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உடன் தலைஞாயிறு ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, தாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் வீ.எம்.கே.பாரதி,மண்டல துணை வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் வடிவழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.