உயர்நீதிமன்ற உத்தரவுபடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு - பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் 13.5 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. அதனை தேவர் ஜெயந்தி விழாவில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிப்பதில் ஈபிஎஸ் ஓபிஎஸ் இடையே நிலவிய போட்டியில், நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு - பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது!

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2014ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது.

இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு. ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தங்க கவசத்தை எடுத்துசெல்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்திவிழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தங்க கவசத்தை பெற உரிமம் கேட்டு  ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து நிலையில் வருவாய்த்துறை மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் தங்க கவசத்தை வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோரிடம் வங்கி மேலாளர் ஒப்படைத்தார்.

இதனையடுத்து 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசமானது மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய்த்துறையினரின் முன்னிலையில் எடுத்துச்செல்லப்பட்டது. இதனையடுத்து தங்க கவசமானது தேவர் நினைவிட பொறுப்பாளர் மூலமாக தேவர் சிலையில் அணிவிக்கப்படவுள்ளது.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777