வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் அமைப்பினர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விட்டு அப்புறப்படுத்தி, வலுக்கட்டாயமாக, வெளியேற்றி பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்று பணியாற்றிட 6 மாதகாலமாக ஊராட்சி ஒன்றிய அலுவல் துறையினர் தொடர் நெருக்கடிகள் கொடுத்து வருவதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் அமைப்பினர் உயிர்பலி அச்சத்துடன் புலம்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் அமைப்பினர்.

தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் அமைப்பு சார்பாக, வட்டார இயக்க மேலாண்மை அலுவலகமானது சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கம் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு மொத்தம் 14 பஞ்சாயத்துக்கள் இதில், போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேருந்து வசதியில்லாத மலைவாழ் கிராமங்களான பொட்டிபுரம், எர்ணம்பட்டி பஞ்சாயத்துக்களும் அடங்கும். இவ்வாறான 14 கிராம பஞ்சாயத்துக்களும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மையமாக வைத்து முழுக்க, முழுக்க பெண்களை மையப்படுத்தி மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார வளர்ச்சி கூட்டமைப்பு அலுவலமானது இயங்கி வருகிறது. 

தற்போது இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், “கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு நெருக்கடிகள் அதிகளவில் கொடுத்து வருகின்றனர். காரணம் என்னவென்றால் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தைவிட்டு பேருந்து வசதி இல்லாத, சுற்றியும் முட்காடுகள் நிறைந்த கரட்டுப்பகுதியில் அமைந்துள்ள கரிச்சிப்பட்டியில் இருக்கக் கூடிய இ-சேவை மைய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்று ஊராட்சி ஒன்றிய தரப்பினர் கடந்த 6 மாத காலமாக நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர். 

தற்போது, நாங்கள் பணிபுரிந்து வரும் அலுவல் மற்றும் அலுவலகத்தை  கரிச்சிப்பட்டியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்தால், பெண் பணியாளர்களான எங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றும் அவலம் தான் எஞ்சும் என மகளிர் அமைப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அலுவலர்கள் மற்றும் பயனாளிகளுக்கு பேருந்து வசதி இல்லாத, இடமாற்ற நெருக்கடிக்கு உள்ளாகும் இப்பகுதிகளில் கடந்த காலங்களில் சிறுமிக்கு பாலியல் ரீதியான முயற்சியில் தீவைப்பு,டூவிலரில் சென்றவர்களிடத்தில் செயின்பறிப்பு உள்ளிட்ட இன்னும் பல குற்றச் சம்பவங்கள் பகல் நேரங்களிலேயே அரங்கேறி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் எங்களால் அங்கே சென்று பணி செய்ய இயலவில்லை. மொத்தம் 550 குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் 7000 பெண் பிரதிநிதிகள் உள்ளனர். அதில் குறிப்பாக, நலிவுற்றோரும் மாற்று திறனாளிகளும் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளாக அங்கம் வகித்து வருகின்றனர். அவ்வாறான பயனாளிகளை நாங்கள் கரிச்சிப்பட்டிக்கு வாருங்கள் என்று சொல்ல முடியவில்லை. காரணம்,பேருந்து வசதியும் இல்லை.மாறாக, அவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய ஏதுவாகவும் இல்லை.

மேலும்,மகளிர் அமைப்புகள் மற்றும் பயனாளிகளின் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு சின்னமனூர் நகருக்குத்தான் சிரமத்துடன் வர வேண்டும் என்பதை குறிப்பிடுகின்றனர். நாங்கள் கரிச்சிப்பட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து வசதி இல்லை. நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு மட்டுமே 100 ரூபாய் வரை(பஸ் வசதி இருந்தால் இலவச பயணம், பஸ் வசதி இல்லாத ஊருக்கு ஆட்டோவில் தான் பயணம் செய்ய வேண்டும்)செலவு செய்ய வேண்டியுள்ளது.

நாங்களே குறைவான சம்பளத்தில் மக்களுக்கான சேவை என்ற நோக்கத்தில் பணி செய்து வருகிறோம். ஆதலால் மாற்று இடமான கரிச்சிப்பட்டிக்கு உயிர்மீதான அச்சத்தோடு சென்று பணியாற்ற இயலாது.மீறி பணியாற்றும் போது எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பு? என்ற கேள்வியை பணியாளர்கள் முன்வைத்து வருகின்றனர். 

கரிச்சிப்பட்டியில் உள்ள மாற்று இடத்திற்கு சென்று பணியாற்ற வேண்டி தொடர் 6 மாதகால நெருக்கடிக்கு உள்ளாகி வரும் எங்களுக்கு சின்னமனூர் நகராட்சி அலுவலகத்திலோ அல்லது சின்னமனூர் நகரினிலோ மாற்று இடம் ஏற்படுத்தி கொடுத்து சின்னமனூர் நகராட்சி பகுதியில் இருந்து  பணியாற்ற ஏற்பாடு செய்து தர வேண்டும் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய நா.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், தேனி மாவட்ட ஆட்சிதலைவர் க.வீ.முரளீதரன் அவர்களுக்கும் கண்ணீருடன் கடந்த காலங்களில் கோரிக்கை வைத்து காத்து கிடக்கின்றோம்.

துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அவர்களின் சமூக நலத்துறை மூலமாக பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், குறைந்த வருமானம் ஈட்டி, பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பாதுகாப்பும் இருப்பிடமும் தேவைப்படும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஊரக வாழ்வாதார மகளிர் அமைப்பினரின் மனக்குமுறல்களை போக்க நடவடிக்கை எடுப்பாரா?” என கண்ணீர்மல்க பெண்கள் கோரிக்கை வைத்தனர்.