தமிழ் மீனவர்கள் மீதான குரூரமான தாக்குதலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி ஒன்றிய பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!

தமிழ் மீனவர்கள் மீதான குரூரமான தாக்குதலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் மீனவர்கள் மீதான குரூரமான தாக்குதலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி ஒன்றிய பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், “பாக் ஜலசந்தி அருகே தமிழ் மீனவர்கள் மீது இந்தியக் கப்பற்படை நடத்தியுள்ள துப்பாக்கி சூடு அதிர்ச்சியை தருகிறது. கடந்த காலங்களில் இலங்கை கடற்படை தாக்குதல் தொடுத்த சம்பவங்கள் பலவற்றை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த முறை இந்திய கடற்படையே குரூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு இருப்பது வேதனைக்குரியது ஆகும். 

தற்போது துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட 30 வயதான மயிலாடுதுறை வானகிரி மீனவர் வீரவேல் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் வயிற்றிலும், தொடைகளிலும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. வயிற்றில் நான்கு பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்த படகில் வந்த மற்ற மீனவர்கள் ஊடகப் பேட்டிகளில், நாங்கள் படகை நிறுத்திய பிறகும் எங்கள் ஆதார் கார்டுகளை காட்டிய பிறகும் கடற்படையினர் எங்கள் கைகளை கட்டி இரும்புக் கம்பிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார்கள். 

இது தமிழக மீனவர்கள் மனதில் பெரும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கியுள்ளது. உடனடியாக நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் அரசின் தரப்பில் தேவைப்படுகிறது. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்கு இந்திய கப்பற்படை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றம் இழைத்துள்ள கடற்படையினர் மீது விரைவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேரள மீனவர் இருவர் இத்தாலி கப்பல்களின் துப்பாக்கி சூட்டில் பலியானதற்கு ரூ 10 கோடி இழப்பீடு இத்தாலி அரசால் வழங்கப்பட்டதை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 2012 இல் நடைபெற்ற அந்த சம்பவம் மீது 9 ஆண்டு சட்டப் போராட்டம் நடைபெற்று 2021 இல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இறந்த மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 கோடி, படகு சொந்தக் காரருக்கு ரூ.2 கோடி என இழப்பீடு தரப்பட்டது. 

ஒன்றிய அரசும் காயம்ப்பட்ட, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதே போன்ற இழப்பீட்டை உடனடியாக வழங்கி மீனவர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.” என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777