“கால் மேல் கல் கல்ல லாகாது” நீர் மேலாண்மை குறித்து கல்வெட்டு கூறும் நீதி - சு.வெங்கடேசன் எம்.பி., சிறப்புரை

மதுரை அமெரிக்கன் கல்லூரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்திய "இளையோரும் காலநிலையும்" கருத்தரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகரின் சிறப்புகள் மற்றும் முந்தைய காலத்தில் முன்னோர்கள் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை, அவர்களின் சூழலியல் அறிவு குறித்து சிறப்புரையாற்றினார்.

“கால் மேல் கல் கல்ல லாகாது” நீர் மேலாண்மை குறித்து கல்வெட்டு கூறும் நீதி - சு.வெங்கடேசன் எம்.பி., சிறப்புரை

கருத்தரங்கில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியது "40 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு பாசன வாய்க்கால் முழுவதும் சிமெண்ட் தளங்கள் போடப்பட்டன. அது உலக வங்கி நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை. இந்த பணியைத்தான் செய்ய வேண்டும். அதற்குத்தான் கடன் என்று உலக வங்கி கொடுத்த கடனை வாங்கி எந்தவித ஆய்வும், அறிவும் இல்லாமல் நமது அரசாங்கங்கள் செய்து முடித்த வேலையிது. 

உலக வங்கியின் உத்தரவின் பின்னணியில் சிமெண்ட் கம்பெனிகளின் நலனே அடிப்படையாக இருந்தது. யாராவது நீர் வழிப்பாதையில் சிமெண்ட் தளங்கள் அமைப்பார்களா?  மண் உறிஞ்சும் நீர் வீணாகும் நீர் என்று எந்த விவசாயியாவது என்றாவது சொன்ன துண்டா? ஆனால் உலக வங்கி சொன்னது நமது அரசாங்கங்கள் செய்து முடித்தன. இன்று சிமெண்ட் தளங்களை பெயர்த்தெடுக்க கடன் தருவதாக கூறுகின்றனர்.

இயற்கை நேசர்களும்  கார்ப்பரேட் தாசர்களும் பெரியாறு வாய்க்காலில் பேரணையில் இருந்து மேலூர் வரை இரண்டு பக்கமும் இடைவிடாது மரங்கள் இருப்பதை இன்றளவும் பார்க்க முடியும். இவை எதுவும் அரசாங்கம் நட்ட மரங்களல்ல. மக்களால் நடப்பட்டவை. 1900 இருந்து 1910 வரை கால்வாய் ஓரங்களில் இருக்கும் கிராமங்களில் உள்ள மக்கள் கால்வாய் நெடுக மரங்களை உருவாக்கினார்கள். 

இன்றைக்கும் மக்களின் பங்களிப்பாக கால்வாய்க் கரையில் மரங்களும், உலக வங்கி மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பாக கால்வாய் முழுவதும் சிமெண்ட் தளங்களும் இருப்பதை பார்க்க முடியும். மக்கள் தன்னியல்பில் இயற்கையை நேசிப்பவர்களாகவும் அரசாங்கங்கள் தன்னியல்பில் கார்ப்பரேட்டுகளின் உத்தரவுக்கு பணிகிறவர்களாகவும் இருக்கிறார்கள். உலகில் உள்ள நாகரீகங்கள் எல்லாமே ஜீவ நதிகளின் ஓரத்தில் உருவான வரலாறாகதான் உள்ளது. ஆனால் வைகை ஜீவநதி கிடையாது. அது ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே நீர் ஓடுகிற நதி. வறளும் நதி.

ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே நீர் ஓடும் ஒரு நதிக்கரையில் 2400 ஆண்டுகள் ஒரு நகரம் நீடித்து வாழ்கிறது என்றால் இந்நகரம் இயற்கையோடு இயைந்த வாழ்வை செவ்வனே பேணி வந்துள்ளது என்று பொருள். நீர் மேலாண்மை அறிவில் சிறந்து விளங்கியது என்று பொருள்.
கல்வெட்டு கூறும்  அரசியல்  நீதி,
மதுரைக்கு அருகில் குருவித்துறை என்ற ஒரு கிராமம் உள்ளது. நான் சொல்வது 11ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவம். அப்போது மதுரையை ஶ்ரீவல்லப மன்னர் ஆட்சி நடத்தினார். அங்கிருந்த ஒரு மிகப் பெரிய நிலச்சுவான்தார் தன்னுடைய நிலத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று வைகையில் புதிதாய் ஒரு கால்வாய் அமைத்து அவருடைய வயலுக்கு தண்ணீர்  கொண்டு சென்றுள்ளார். 

இந்த சம்பவம் மதுரையில் உள்ள மன்னருக்கு தெரியவர, அவரை உடனடியாக இங்கே அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் வந்ததும், உங்களுடைய நிலத்திற்கு தண்ணீர் வர புதிதாய் கால்வாய் அமைத்தது தவறு. ஏற்கனவே உள்ள பழைய கால்வாய் மூலம் உங்களுக்கு தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி புதிய கால்வாயை அடைத்துள்ளனர். இதற்கு சான்றாக ஒரு கல்வெட்டை அங்கே அமைத்தார்கள். அதில் “கால் மேல் கால் கல்ல லாகாது”என்று பொறிக்கப்பட்டது.

11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த வாசகம், மதுரை நகருக்கு மட்டுமல்ல; நம்முடைய பிரதமர் மோடி அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு செய்யும் முயற்சியை உடனடியாக தடுக்க எமது கல்வெட்டில் சொல்லப்பட்ட அரசியல் நீதியை பிரதமர் அவர்கள் பின்பற்ற வேண்டும். அன்று மதுரை முதல் இராமநாதபுரம் வரை உள்ள முக்கிய ஊர்களெல்லாம் குளங்களை வைத்துதான் அடையாளப்படுத்தப்பட்டன.

“மாடக்குளத்தின் கீழ் மதுரை” என்று மதுரை  அடையாளப்படுத்தப்பட்டது. காவிரி எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதி. ஆனால் வைகை அப்படி அல்ல. பரிபாடலில் வைகையை “மணல் சீர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மணலை சீராக கொண்டு வருவதும் பாதுகாப்பதும் தான் வைகையின் அழகு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்றைக்கும் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக மதுரை கீழ்ப்பாலம் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தான் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள். இன்றைக்கும் அந்த சடங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி கடவுளுக்கும் நீருக்குமான இணைப்பை மனிதன் உருவாக்கினான். 

குளக்காவல்காரன் போல் அதேபோல் கடைமடை கண்மாய் கடவுள் கண்மாய் என்பார்கள். மதுரையிலும்கூட வண்டியூர் கண்மாயின் கடைமடை கண்மாயாக அப்பல்லோ மருத்துவ மனை அருகில் ஒன்று உள்ளது. அந்த கடைமடை கண்மாய் வரை தண்ணீர் வந்து சேர வேண்டும்; இல்லை என்றால் தண்ணீர் யாருக்கும் திறக்கக் கூடாது;  அதை மீறி விடுவார்கள் என்று தான் அங்கு வந்து ஒரு கடவுளின் சிலையை வைத்தார்கள். சங்கப் பாடல் ஒன்றில் ஒரு காதலன் தன்னுடைய காதலியிடம்  சந்திக்க வேண்டும் என்று கூறுகிறான். 

அப்போது காதலி, என்னுடைய தாய் குளக்காவல்காரனைப் போல் இரவு பகலாக விழித்திருப்பார் என்று  குறிப்பிடுவாள். அப்படி நம்முடைய முன்னோர்கள் கண்மாய்களை கண்விழித்து பாதுகாத்து உள்ளார்கள். ஆனால் இன்று அழிக்கப்பட்ட குளங்களின் மீது அமர்ந்துதான் நீதிமான்கள் தீர்ப்பு வழங்குகின்றனர். மதுரையில் 72 குளங்கள் இருந்ததாக அன்றைக்கு கூறுவார்கள். இன்றைக்கு 16 குளங்கள்தான் உள்ளன. வண்டியூர் கண்மாய் கூட 1250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இன்றைக்கு பாதியாக குறைந்து 600 ஏக்கர்தான் உள்ளது.

நம்முடைய தமிழ்ச் சமூகத்தின் மரபு, பல்லுயிர்ப் பெருக்கம் என்பதுதான். ஒரு ஊர் உருவாக வேண்டும் என்றால், அந்த ஊரில் முதலில் கோவில் கட்டச் சொல்ல மாட்டார்கள்; ஊருக்கு நடுவில் ஒரு கல் நட வேண்டும்; அந்த கல் எதற்கு என்றால், அந்த ஊரில் உள்ள மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வரும்போது அதனுடைய உடலில் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஒட்டி இருக்கும்; அவற்றை அதனால் எடுக்க முடியாது. ஊரின் நடுவில் உள்ள அந்த கல்லில் தேய்த்து விட்டு பூச்சிகளை அகற்றிவிட்டு செல்லும். அதற்கு பெயர் தேய்ப்புக்கல். ஒரு ஊர் வளர வேண்டும் என்றால் அந்த கல்லைத் தான் ஊருக்கு நடுவில் நடச்சொல்வார்கள். இப்படி பல்லுயிரை பாதுகாக்கும் அறிவு மேலாண்மை தமிழ்ச் சமூகத்தின் மரபாக இருந்துள்ளது.

ஒரு பழமொழி உண்டு “மாட்டுக்கு மேய்ப்பும்  குதிரைக்குத் தேய்ப்பும்” என்று. மனிதன் நகரங்களுக்கு வந்த பின்னும் வீடுகளில் மாடுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அப்போது கூறுவார்கள், நமக்கு பால் கொடுக்கக்கூடிய மாட்டுக்கு மேய்ச்சல் மிக முக்கியம். அவை காலாற நடந்து சென்றால்தான் அதனுடைய நலன் நன்றாக இருக்கும். கால்நடை நன்றாக இருந்தால் தான் நம்முடைய வாழ்வு செழிக்கும். அப்படி கால்நடைகளை அதன் இயல்பு கெடாமல் வளர்த்தனர்.

இன்று வைகை நதியின் தலையும் கடையும் மிக மோசமாக உள்ளது. வைகை நதியின் தலைப்பகுதியான வருஷநாடு பகுதியில் இன்றைக்கு காடுகள் இல்லை; மண் வளங்கள் இல்லை; அந்த பகுதி முழு வதும் தேயிலைத் தோட்டங்கள் அதிகரிப்பால் மண்வளம் இல்லாமல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. வைகை நதியின் தலைப்பகுதி காய்ந்தால் உடல் தானாக செத்துவிடும். அதுபோல்தான் இன்றைக்கு வைகை நதி மிகப் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.  மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் வைகையின் தன்மை மாற்றப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை. வைகை ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்படும் சாலைகளுக்கு சிமெண்ட் தளங்கள் அமைக்கக் கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தோம். 

ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதேபோல் சாலையின் இரண்டு பகுதிகளிலும் மரங்கள் நட வேண்டும் என்று கூறி வருகிறோம். அரசாங்கம் இயற்கையின் ஒரு பகுதியை அழிக்கிறது என்றால் அதற்கு நிகராக இன்னொரு திட்டத்தை உருவாக்க வேண்டும். 

இன்றைக்கும் மதுரையின் மையப் பகுதியில் சில நூறு மரங்கள் மட்டுமே உள்ளன. 4 வெளிவீதி களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 200க்கும் குறைவான மரங்கள் மட்டுமே உள்ளன.  தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் மழை அளவு மிகவும் குறைந்துள்ள மாவட்டமாக மதுரை மாறியுள்ளது. மதுரையை  பாதுகாக்க வேண்டும் என்றால் பசுமை இயக்கம் என்ற ஒன்றை நாம் துவங்க வேண்டும். அதில் பலரையும் இணைக்க வேண்டும்." என சிறப்புரையில் கூறினார்.

- செய்தியாளர் வி.காளமேகம் மதுரை.
நிழல்.இன் / 8939476777