சவேரியார் கல்லூரி நூற்றாண்டு விழா: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
அனைவருக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அருட்தந்தைகள் செயல்படுவதாக பாராட்டு சபாநாயகர் அப்பாவு பாராட்டு

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நூற்றாண்டு விழா, போப் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என்.சந்திரசேகர், திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேசிய சபாநாயகர் மு.அப்பாவு கூறியதாவது: "ஏசு சபை அருட்தந்தைகள், தியாக உள்ளத்தோடு மக்கள் பணியாற்றி வருகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தூய சவேரியார் கல்லூரி, எல்லோருக்கும் தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் செயல்படுகிறது.
மேலும் சமூக நீதியை பெற்றுத் தந்தது பெருமை சவேரியார் கல்லூரிக்கு உண்டு. இந்தியாவில் தேசிய அளவில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை 24 சதவீதம். ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி படித்தவர்களின் சராசரி எண்ணிக்கை 51 சதவீதம். இதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்கங்கள்.
"நாக்" கமிட்டி என்று சொல்லப்படுகிற "தேசிய தரக் கட்டுப்பாட்டுக்குழு" இந்திய அளவில் 47 கல்லூரிகளை அறிவுசார் தரக் கல்லூரிகளாகத் தேர்வு செய்துள்ளது. அதில் ஒன்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி என்பது நமக்கு பெருமையாகும்." என சபாநாயகர் மு.அப்பாவு பேசினார்.
நிகழ்ச்சியில் மதுரை ஏசு சபை அதிபர் டேனியல் பொன்னையா, கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம், செயலாளர் புஷ்பராஜ், கல்லூரியின் முதல்வர் மரியதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் செ.பா.தவசிக்கனி, நெல்லை
நிழல்.இன் - 8939476777