உயர் கல்வி நிதியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : பல்கலைக்கழக மானியக்குழு இணைச் செயலர் முனைவர் சக்கீல் அஹமது ஆலோசனை!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய பல்கலைக்கழக மானியக்குழு இணைச் செயலர் முனைவர் சக்கீல் அஹமது, உயர் கல்வி நிதியை மாணவர்களும் பேராசிரியர்களும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

உயர் கல்வி நிதியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : பல்கலைக்கழக மானியக்குழு இணைச் செயலர் முனைவர் சக்கீல் அஹமது ஆலோசனை!

கோவை நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 32-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுடெல்லி பல்கலைக் கழக மானியக்குழு இணைச் செயலர் முனைவர் சக்கீல் அஹமது மாணாக்கர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார், "பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல்வேறு நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

இது மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கும், பேராசிரிய பெருமக்களின் ஆராய்ச்சி மேம்பாடுகளுக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில், மத்திய உயர்கல்வித் துறை இணையதளங்களை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

இணையதளத்தில் ஏராளமான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் மாணவர்களுக்கும், பேராசிரிய பெருமக்களுக்கும் பயனளிக்கும் நிதியுதவி திட்டங்கள் உள்ளன. இவற்றை முறையாக பயன்படுத்தி தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என ஆலோசனை வழங்கி பேசினார்.

தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். விழாவில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி. விஜயகுமார், டீன்கள், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரிய பெருமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

- சிறப்புச் செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777