தமிழக முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வர வேண்டும்! - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

தமிழக முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வர வேண்டும் அப்பொழுதுதான் மாநகரச் சாலைகள் சரி செய்யப்படும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வர வேண்டும்! - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

திருநெல்வேலியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக-வின் சட்டமன்றத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசும்போது கூறியதாவது, "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் பார்க்காமல் நான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், எனது தொகுதியான மானூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தந்தார். அதற்கு நான் நன்றி கூறுகிறேன். 

ஒவ்வொரு முதலமைச்சரும் தங்களது பொறுப்பு காலத்தில் ஏதாவது ஒரு சாதனையை செய்து சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்புவர். அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணையை இணைக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும். நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 6 மருத்துவர்கள் வேண்டும். எனவே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 3 இருதய சிகிச்சை மருத்துவர்களை நியமனம் செய்யவும், "இருதய மாற்று அறுவை சிகிச்சை வசதி"  செய்து தரவும் ஆவன செய்ய வேண்டுகிறேன். 

மேலும் திருநெல்வேலிக்கு தாங்கள் அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் மாநகரத்தில் உள்ள சாலைகள் சரி செய்யப்படும்." இவ்வாறு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

- செய்தியாளர் செ.பா.தவசிக்கனி, திருநெல்வேலி.

நிழல்.இன் / 8939476777