மக்களின் உயிரையும், உடைமைகளையும் பணயம் வைத்து கொள்ளையடிக்கும் திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் : மழை வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்...
ஒவ்வொரு வருட பருவமழையின் போதும் ஆரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கடைநிலை கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியைவிட துன்பத்தையே கொடுக்கிறது. கரை உடைந்து கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் புகும் வெள்ளம்... மக்களின் உடைமைகளையும், விவசாய நிலங்களையும் சீரழிக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள், இந்த சம்பவங்களை காரணமாக பயன்படுத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, ஆரணியாறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அதில் ஆரணியாறு ஆந்திர மாநிலம் நகரி மலையில் கார்வெட் நகரில் உருவாகி, தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காட்டில் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் 65.20 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 66.40 கிலோ மீட்டரும், மொத்தம் 131.60 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து வந்து பின் பழவேற்காடு அருகில் கடலில் கலக்கிறது. இதற்கிடையே ஆற்றில் வரக்கூடிய நீரை பல இடங்களில் தடுப்பணைகள் அமைத்து அதன் மூலம் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தமிழக பகுதிகளில் பாயும் ஆரணி ஆறு பனபாக்கம் கிராமத்தில் 200 மீட்டரும், செங்காத்தா குளத்தில் 225 மீட்டரும், பாலேஸ்வரத்தில் 236 மீட்டரும் பாய்ந்து இறுதியாக கடைநிலை பகுதியான அத்தம்மஞ்சேரி, ரெட்டிபாளையத்தில் மிகவும் குறுகிப்போய் 100 மீட்டரில் தான் ஓடுகிறது. மேலும் அதைக்கடந்து போகும்போது, ஆறின் அகலம் மேலும் குறைந்து போவதாலும், கரைகளின் கட்டமைப்புகள் சரியில்லாத காரணத்தாலும், சரியாக பராமரிக்கப்படாத காரணத்தாலும் இந்த கிராம மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போலவே, மழைக்காலங்களில் மழை வெள்ள பாதிப்பை ஆண்டு தோறும் சந்திக்கின்றனர். அந்த அளவிற்க்கு இந்த ஆற்றின் கடைநிலை பகுதி கிராமங்கள் ஆண்டு தோறும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கபடுகின்றன.
இந்நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் (2021) அதிக அளவு மழை பொழிவு இருந்ததனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைநிலை கிராமங்கள் உள்ள பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றின் கரை உடைந்து பெரும்பேடு, கம்மவார் பாளையம், பிரளயம்பாக்கம், வஞ்சிவாக்கம், அவுரிவாக்கம், ஆண்டார்மடம், சிறு பழவேற்காடு போன்ற பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அந்த கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. அதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.
இப்பகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இப்படியான ஒரு சூழல் ஏற்படுவதற்கு காரணம் ஆரணியாறு வடிநில கோட்ட அதிகாரிகள்தான். ஏனென்றால் ஆரணி ஆற்றில் வரக்கூடிய நீரை வைத்து விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இந்த ஆரணி ஆற்றை வைத்து நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆரணியாறு வடிநில கோட்ட அதிகாரிகள் அனைவரும் கொள்ளையடித்து கொழிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த அதிகாரிகள் அனைவருக்கும் ஆரணி ஆற்றில் வெள்ளம் வந்து கரை உடைந்தாலும் சந்தோசம். ஆரணி ஆற்றில் வெள்ளம் வராமல் வரண்டு கிடந்தாலும் சந்தோசம். இதற்கு காரணம், ஆறு வரண்டு கிடந்தால் கரையை பலப்படுத்துகிறோம் என்று கொள்ளை அடிப்பார்கள். வெள்ளம் வந்தால் அரசு பணத்தை விரையம் செய்து அமைக்கப்பட்ட கரை உடைந்து போய்விட்டது என மணல் முட்டைகளையும் அடுக்கியும்,. அவசர கால செலவுகள் என காரணம் கூறி கொள்ளை அடிப்பார்கள்.
தற்போது கூட ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரைகள் உடைந்த இடங்களில் எல்லாம் மணல் மூட்டைகளை அடுக்கி கிராம மக்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்றின் கரைகளில் மூட்டையை அடுக்கி கரையை பாதுகாத்தார்கள். ஆனால், அடுத்து ஒரு மழை வருமென அவர்கள் எதிர் பார்க்கவில்லை, அடுத்து பெய்த மழையில் பிச்சாட்டூர் அணை நிரம்பி மீண்டும் அணையிலிருந்து நீரை வெளியேறியது, ஆரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது தான் நீர்வளத்துறை அதிகாரிகளின் சாயம் வெளுத்தது. உடைந்த கரைகளுக்கு அவர்கள் அடுக்கியது மணல் மூட்டைகள் அல்ல நிலக்கரி சாம்பல் மூட்டை என்பது தெரியவந்தது. அந்த நிலக்கரி சாம்பல் மூட்டைகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கால் கரைந்து போய் வெறும் பிளாஸ்டிக் கோணிகள் மட்டும் தண்ணீரில் மிதந்ததன. மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு அனைத்து கிராமங்களையும் சூழ்ந்தது. அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை வருவாய் துறை, மீன்வளத் துறை, மின்சாரத் துறை, தீயணைப்பு படையினர், காவல்துறை என அனைவரையும் பேரிடர் குழுவில் இணைத்து அதன் மூலம் ஒவ்வொரு துறையினரும் அவர்களுக்கு தேவையான முன் எச்சரிக்கை உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி அதற்காக பல கோடிகளை செலவு செய்கிறது. முன்னேற்பாடு நடவடிக்கையாக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கணக்கு காட்டிய மணல் மூட்டை எல்லாம் எங்கே போயின என்பதுதான் மக்களுடைய கேள்வியாக உள்ளது. இதற்கு பதிலளிக்கப் போவது யார்?
இது போன்ற பேரிடர் காலங்களில் மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற அரசு போராடி வரும் நிலையில், இது போன்ற அதிகாரிகள் மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பணையம் வைத்து கொள்ளையடிப்பதுதான் கொடுமையாக உள்ளது. ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் உள்ள மக்களின் உயிரோடு விளையாடும் ஆரணி வடிநில கோட்ட அதிகாரிகளை விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆரணி ஆற்றில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக தனி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து ஆரணி ஆற்றின் கரையை வைத்து கொள்ளையடிக்கும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக கூடிய விரைவில் ஆரணி ஆற்றின் கடைநிலை பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
G.பாலகிருஷ்ணன், ஆசிரியர்
நிழல்.இன்