கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளை புரிந்துகொண்டால் ஆராய்ச்சி ரீதியான பார்வை விரிவடையும் : மாணாக்கர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் செயல் விளக்கம்.

கோவை நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல்,வேதியியல், கணிதம் ஆகிய துறைகள் இணைந்து செயல் வழி கற்றலில் அறிவியல் உண்மைகள் என்ற பயிலரங்கம் கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடந்தது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளை புரிந்துகொண்டால் ஆராய்ச்சி ரீதியான பார்வை விரிவடையும் : மாணாக்கர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் செயல் விளக்கம்.

பயிலரங்கத்திற்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் -செயலர்,முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.பூங்குழலி அனைவரையும் வரவேற்றார். கணிதத் துறைத் தலைவர் முனைவர் என்.உமா சிறப்பு அழைப்பாளர் குறித்து அறிமுக உரையாற்றினார்.

பயிலரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் மாணாக்கர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கத்தினை விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசியபோது, “அறிவியல் என்றால் அறிந்து கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம். உலக இயக்கமே அறிவியலால் தான் நிகழ்கிறது. அறிவியல் சார்ந்த படிப்புகளில் பொதுவான பார்வை கணிதம், இயற்பியல்,வேதியியல் ஆகியன கடினமானவை. இந்த பார்வை தவறானது. இப்பாடப் பகுதிகளைப் புரிந்து கொள்ளும் வரை தான் கடினம்.

நீங்கள் ஆர்வம் காட்டி புரிந்து கொள்ள முயற்சித்தால் இதை விட எளிமையான பாடங்கள் இல்லை என்பதே உண்மை. செயல்விளக்கம் மூலமாக அணுகினால், அறிவியலை புரிந்து கொள்வது மேலும் எளிமையானது. செயல் விளக்கங்கள் மாணவர்களை சிந்திக்கத் தூண்டும். இப்பாடப் பகுதிகளைப் புரிந்து கொண்டால், அது குறித்து சிந்திக்கத் தொடங்கினால் அறிவாற்றல் பல  மடங்கு அதிகரிக்கும். ஆராய்ச்சி ரீதியான பார்வையும் விரிவடையுமென” விரிவாக பேசினார்.

தொடர்ந்து, பலவித உபகரணங்களைக் கொண்டு அறிவியலை அறிந்து கொள்வது எப்படி ?என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து புரியச் செய்தார். காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அறிவியல் தொடர்பான பயிலரங்குகள் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் முதல்வர் - செயலர்,முனைவர் பி.எல்.சிவக்குமார், தமிழக முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வாலுக்கு “இளம் மாணவர்களுக்கு முன் மாதிரி அறிவியல் ஊக்குவிப்பாளர் ” என்ற விருதை வழங்கி கெளரவித்து சிறப்பித்தார்.

பயிலரங்கில் கோவையைச் சேர்ந்த 20 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் முனைவர் டி.சசிகலா நன்றி கூறினார்.

- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777